×

கஜினி முகமது போல எத்தனை முறை கொரோனா படையெடுத்தாலும் தோற்கடிப்போம்: மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் இதுவரை 97 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 73 சதவீதம் பேர் 2வது தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக நடைபெறாமல்  இருந்த மெகா தடுப்பூசி முகாம் மீண்டும் தொடங்கியுள்ளது. நேற்று தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 24வது மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 1600 தடுப்பூசி முகாம்கள் செயல்பட்டு வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் ஆகிய இடங்களில் காலை 7 மணிக்கு துவங்கிய தடுப்பூசி முகாம்கள் இரவு 7 மணி வரை நடந்தது. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார்.பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று (11ம் தேதி) கொரோனா பூஜ்ஜிய மரணம் பதிவாகியுள்ள  நிலையில் தமிழகத்தில் தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. தற்போதைய நிலையில் 1,461 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். நோய் பாதிப்பை கட்டுப்படுத்த தடுப்பூசிகளின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. சீனாவின் ஒரு நகரில் மீண்டும் ஊரடங்கு போடப்பட்டிருப்பதை மனதில் முன்னிறுத்தி பொதுமக்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும்.கொரோனா அலை கஜினி முகமது போல எத்தனை முறை படையெடுத்து வந்தாலும் அதனை தோற்கடிப்போம். அந்த அளவுக்கு தமிழக சுகாதாரத்துறை வலிமை வாய்ந்ததாக உள்ளது. எந்த அலையையும் முறியடிக்  தடுப்பூசி செலுத்துதல் அவசியம். வருங்காலங்களில் நோய்  எதிர்ப்பு சக்தி குறைந்தாலும் கூட பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்துவதன் வாயிலாக நிலையான எதிர்ப்பாற்றலை பெற முடியும். தமிழகத்தில் 336 நடமாடும்  மருத்துவமனைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் துவக்கி வைக்க இருக்கிறார். மக்கள்தொகை அதிகரிப்பதற்கு ஏற்றவாறு நகர்ப்புற மற்றும் கிராமப்புற சுகாதார மையங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்….

Tags : Corona ,Gajini Mohammed ,People's Wellbeing ,Rathakrishnan ,Chennai ,Tamil Nadu ,vaccination ,Mega Vaccine Camp ,Initial Health Centers ,Government Hospitals ,Ananganwadi Centres ,Nutrition ,
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...