×

தாக்குதலை திடீரென விரிவுப்படுத்தியது ரஷ்யா மேற்கு உக்ரைன் மீது ஏவுகணைகள் வீச்சு: விமானப்படை தளம், விமான நிலையம் தகர்ப்பு

மரியுபோல்:  உக்ரைன் மீதான தாக்குதலை ரஷயா நேற்று திடீரென விரிவுப்படுத்தியது. இதுவரை கண்டுக் கொள்ளாமல் இருந்த மேற்கு உக்ரைன் பகுதிகளில் ஏவுகணைகள், குண்டுகள் வீசி தாக்கியது. இதில், விமானப்படை தளமும், விமான நிலையமும் அழிக்கப்பட்டது. மேலும், தலைநகர் கீவ்வை முற்றுகையிட்டு இருந்த ரஷ்யாவின் பிரமாண்ட படை, திடீரென பிரிந்து நகரை சூழ்ந்து வருகின்றன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் நேற்று 16வது நாளை எட்டியது. ஏற்கனவே பல்வேறு நகரங்களையும், அணுமின் நிலையங்களையும் கைப்பற்றி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ரஷ்ய படைகள்,  தலைநகர் கீவ், நாட்டின் 2வது பெரிய நகரமான கார்கிவ், துறைமுக நகரமான மரியுபோல் ஆகியவற்றை பிடிக்க முடியாமல் திணறி வருகிறது. இந்த நகரங்களில் உக்ரைன் வீரர்கள் கடும் சவாலை ஏற்படுத்தி வருகின்றனர்.  எனவே, உக்ரைன் அரசின், ராணுவத்தின் மன உறுதியை குலைக்கும் வகையில், பொதுமக்கள் வசிக்கும் இடங்களின் மீதும், மருத்துவமனைகளின் மீதும் நேற்று முன்தினம் குண்டுகள் வீசி ரஷ்ய படைகள் தாக்கின. மருத்துவமனைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், இந்த  தாக்குதலை தங்கள் படை நடத்தவில்லை என்று ரஷ்யா மறுத்துள்ளது. உக்ரைன் ராணுவமும், மேற்கத்திய நாடுகளும் தங்கள் நாட்டு  படையின் மீது வீண் பழி போடுவதற்காகவே, இந்த மருத்துவமனைகளின் அருகே வெடிகுண்டை பொருத்தி வெடிக்கச் செய்துள்ளன என்று அது குற்றம்சாட்டி உள்ளது.இந்நிலையில், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்ய படைகள் நேற்று திடீரென விரிவுப்படுத்தின. கடந்த 2 வாரங்களுக்கு மேலாக மேற்கு உக்ரைன் பகுதிகளை கண்டு கொள்ளாமல் இருந்த ரஷ்ய படைகள் நேற்று இந்த பகுதிகளில் நீண்ட தூர ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தின. இதில், லுட்ஸ்க் என்ற இடத்தில் உள்ள உக்ரைன் விமானப்படை தளம் அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 2 விமானப்படை வீரர்கள் பலியாகினர். மேலும், பலர் காயமடைந்தனர். மேலும், இவானோ-பிரான்கிவ்ஸ்க் என்ற இடத்தில் உள்ள விமான நிலையம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், இந்த விமான நிலையம் சேதமாகி , தீப்பற்றி எரிந்தது. அதே நேரம், மரியுபோல், கார்கிவ் மீதான தாக்குதலும் நேற்று தீவிரப்படுத்தப்பட்டது. மேலும், தலைநகர் கீவ்வின் அருகே பல கிமீ தூரத்துக்கு நிறுத்தப்பட்டு இருந்த ரஷ்யாவின் பிரமாண்ட படைப்பிரிவு நேற்று பல்வேறு குழுக்களாக பிரிந்தன. இவற்றின் ஒரு பிரிவு கீவ்வை சுற்றியுள்ள காடுகளுக்குள் நுழைந்தது. இதனால், கீவ் நகரின் மீது அடுத்த சில நாட்களில் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என தெரிகிறது. கூலிப்படைகளுக்கு ரஷ்யாவும் அழைப்புதனது நாட்டு ராணுவத்துக்கு உதவியாக போரிட, வெளிநாட்டு கூலிப்படைகளையும், முன்னாள் ராணுவ வீரர்களையும் உக்ரைன் அழைத்து வருகிறது. இதை ஏற்று பல ஆயிரம் பேர் உக்ரைன் படையுடன் இணைந்துள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி அமெரிக்கா பல்வேறு நாட்டு தீவிரவாத அமைப்புகளை சேர்ந்தவர்களை உக்ரைனுக்கு அனுப்பி வருவதாக ரஷ்யா குற்றம்சாட்டி வருகிறது.  இந்நிலையில், உக்ரைனில் போரிட்டு வரும் தனது படைகளுடன் இணைந்து போரிட, வெளிநாடுகளை சேர்ந்த தன்னார்வ வீரர்களுக்கு ரஷ்ய அதிபர் புடினும் அழைப்பு விடுத்துள்ளார். ரஷ்யாவுக்கு உதவியாக போரிட, மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த 16 ஆயிரம் வீரர்கள் முன் வந்திருப்பதாக அது தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் அதே நேரத்தில், அந்த நாட்டுடன் ரஷ்யா சமரச பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது. சமீபத்தில் இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களும் சந்தித்து பேசினர்.  இந்நிலையில், உக்ரைனுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தையில் சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக அதிபர் புடின் நேற்று அறிவித்தார். ஆனால், எந்த மாதிரியான முன்னேற்றம் என்பதை அவர் விளக்க மறுத்து விட்டார். இதனால், உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகள் உருவாகி இருப்பதாக கருதப்படுகிறது. 200 பொருட்கள் ஏற்றுமதிக்கு தடை விதிப்பதாக எச்சரிக்கைஉக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவின் மீது உலக நாடுகள் தொடர்ந்து பொருளாதார தடைகள் விதித்து வருகின்றன. இதனால் ஆத்திரம் அடைந்துள்ள ரஷ்ய அதிபர் புடின், அந்த நாடுகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்.  தனது நாட்டில் இருந்து ஐரோப்பிய நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வரும்  200 வகையான பொருட்களை அடுத்தாண்டு வரை ஏற்றுமதி செய்வதற்கு அவர் நேற்று தடை விதித்தார். மேலும், பல்வேறு பொருட்களுக்கும் தடை விதிக்கப் போவதாகவும், இதனால் அந்த பொருட்களின் விலை உயரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்….

The post தாக்குதலை திடீரென விரிவுப்படுத்தியது ரஷ்யா மேற்கு உக்ரைன் மீது ஏவுகணைகள் வீச்சு: விமானப்படை தளம், விமான நிலையம் தகர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Russia ,western Ukraine ,Mariupol ,Ukraine ,Dinakaran ,
× RELATED ரஷ்யாவில் உயர்கல்வி பயில...