×

15வது நாளாக தொடர்ந்த ரஷ்யாவின் தாக்குதல் மருத்துவமனைகள் மீது குண்டுவீச்சு: குழந்தை உட்பட 3 பேர் பலி உலக நாடுகள் கடும் கண்டனம்

மரியுபோல்: உக்ரைனில் போரை தீவிரப்படுத்தி உள்ள ரஷ்யா, துறைமுக நகரான மரியுபோலில் மருத்துவமனை மீது நடத்திய வான்வழி தாக்குதலில், குழந்தை உள்பட 3 பேர் பலியாகினர். உக்ரைன், ரஷ்யா போர் தொடர்ந்து 15வது நாளாக நீடிக்கிறது.  இதில், இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.  போரினால் 20 லட்சம் பேர் அதிகளாக உக்ரைனை விட்டு வெளியேறி இருப்பதாக ஐநா தெரிவித்துள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷ்யா அதன் மீது கடந்த 24ம் தேதி தாக்குதலைத் தொடங்கியது. ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு, மற்றொரு புறம் முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ், செர்னிகிவ், கெர்சன், மரியுபோலில் தாக்குதலைத் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. துறைமுக நகரான மரியுபோலில் நேற்று குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனையின் மீது ரஷ்ய படையினர்  நடத்திய வான்வழி தாக்குதலில் 3 பேர் பலியாகினர். இதில், குழந்தை பேறுக்காக வந்திருந்த பெண், மருத்துவர்கள் உள்பட 17 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப் படையினர் துரிதமாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, பிறந்த பச்சிளம் குழந்தைகள் பல இடிபாடுகளுக்கிடையே சிக்கி உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இதே போல், கீவின் மேற்கில் உள்ள சைடமீர் நகரில் குழந்தைகள் மருத்துவமனை உள்பட 2 மருத்துவமனைகளின் மீது நடந்த குண்டுவீச்சில் அங்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில், `குழந்தைகள், மகப்பேறு மருத்துவமனைகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. அவற்றை கண்டு ரஷ்யா அஞ்சுகிறதா? ஏன் அவற்றின் மீது தாக்குதல் நடத்த வேண்டும்? ஏற்கனவே தனித்து விடப்பட்டிருக்கும் ரஷ்யா மீண்டும் எழ முடியாத வகையில், மேற்கத்திய நாடுகள் அதன் மீது மேலும் பல கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும். அப்போது தான் இது போன்ற இனப் படுகொலைகளை செய்வதற்கு ரஷ்யா அஞ்சும்,’ என்று கூறியுள்ளார்.ரஷ்ய படைகள் போரைத் தொடங்கி 2 வாரங்களான நிலையில், இதுவரை 18 மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தி இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், மருத்துவமனைகள் மீதான தாக்குதலில் 10 பேர் பலியானதையும் 16 பேர் காயமடைந்துள்ளதையும் உலக சுகாதார அமைப்பு உறுதிபடுத்தி உள்ளது. உக்ரைன் மருத்துவமனைகளின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி இருப்பதன் மூலம் ரஷ்யா மிகப் பெரிய குற்றம் இழைத்து விட்டதாக உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.* இரக்கமற்ற தாக்குதல்உக்ரைன் வெளியுறவு அமைச்சர் குலேபாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அண்டனி பிளிங்கன், `குழந்தைகள், மகப்பேறு மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மனசாட்சியற்ற, இரக்கமற்ற தாக்குதல்,’ என்று கூறினார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது டிவிட்டரில், `பாதிக்கப்பட்டு, பாதுகாப்பற்ற நிலையில் இருப்பவர்களை தாக்குவது மிகவும் மோசமானது. தனது கொடூரமான குற்றங்களுக்கு விளாடிமிர் புடின் பொறுப்பேற்க வேண்டும்,’ என்று கூறியுள்ளார்.* ரூ.1.05 லட்சம் கோடி அமெரிக்கா உதவிஅமெரிக்க நாடாளுமன்றத்தில் கொரோனா தொற்றுக்காக ரூ.1.16 லட்சம் கோடி கூடுதல் நிதி ஒதுக்கும் செலவின மசோதாவை நிறைவேற்றும்படி ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், அதனை புறக்கணித்து விட்டு, போரினால் பாதித்துள்ள உக்ரைன், இதர ஐரோப்பிய நாடுகளுக்கு உதவுவதற்காக ரூ.1.05 லட்சம் கோடி நிதியை விடுவிக்கும் செலவின மசோதாவுக்கு நாடாளுமன்றத்தின் கூட்டு சபை ஒப்புதல் அளித்துள்ளது.* சர்வதேச போர் குற்ற விசாரணை கமலா வலியுறுத்தல்அமெரிக்க துணை அதிபரான கமலா ஹாரிஸ் வார்சாவில் நேற்று அளித்த பேட்டியில், ‘உக்ரைனில் சிறுவர்கள், மகப்பேறு மருத்துவமனைகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி இருப்பது வேதனை அளிக்கிறது. இதற்காக ரஷ்யாவின்  மீது சர்வதேச போர் குற்றச்சாட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும்,’ என தெரிவித்தார்.* சோனி, ஹிட்டாச்சி தற்காலிக தடை ஜப்பானின் சோனி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், `கிராண் டுரிஸ்மோ 7’ என்று கார் ரேஸ் விளையாட்டு, பிளேஸ்டேஷன் ஸ்டோர் ரஷ்யாவில் தற்காலிகமாக மூடப்படுகிறது. உக்ரைன் விவகாரத்தில் இதர நாடுகளுடன் இணைந்து செயல்பட இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது,’ என தெரிவித்துள்ளது. இதே போல, ஹிட்டாச்சி இயந்திர தொழில்நுட்ப நிறுவனமும் தனது இயந்திரங்கள், கருவிகளை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்வதை தற்காலிகமாக தடை செய்திருப்பதாக தெரிவித்துள்ளது.* ரசாயன தாக்குதலுக்கு சதி ரஷ்யா மீது குற்றச்சாட்டுவெள்ளி மாளிகையின் ஊடக செயலாளர் ஜென் சாகி, “திட்டமிட்ட, நியாயமற்ற உக்ரைன் மீதான தனது போரை நியாயப்படுத்த ரஷ்யா சதி திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாகவே, ஆதாரம் இல்லாமலே உக்ரைன் ரசாயன ஆயுத ஆய்வகங்கள் வைத்திருப்பதாக அபத்தமாக குற்றம் சாட்டியுள்ளது. இதன் மூலம், ரஷ்யா ரசாயனம், உயிரி ஆயுதங்களை பயன்படுத்தி உக்ரைனில் ஆயிரக்கணக்கானோரை கொன்று குவிக்க திட்டமிட்டுள்ளது,’ என எச்சரித்தார்.* வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை தோல்விபோர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபாவும், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவும் துருக்கியில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இதில் குறிப்பிடத்தக்க முடிவு எதுவும் ஏற்படவில்லை. `பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. போரை நிறுத்த ரஷ்யா முன் வரவில்லை; மாறாக, உக்ரைன் சரணடைய வேண்டும் என்று ரஷ்யா எதிர்பார்க்கிறது. ஆனால், அது ஒருபோதும் நடக்காது,’ என்று குலேபா தெரிவித்தார்.* ரஷ்யா தடையை மீறியது டிவிட்டர்டிவிட்டர், பேஸ்புக், பிபிசி உள்ளிட்ட சமூக வலைதளங்களில், உக்ரைன் போர் பற்றிய தகவல்களை கட்டுப்படுத்தும் வகையில், அவற்றின் சேவைகளை ரஷ்யா கண்காணித்து, தணிக்கை செய்வதாக அறிவித்தது. ஆனால், இதையும் மீறி டிவிட்டர் நிறுவனம் ‘டார்க் வெப்’ என்ற தளத்தின் மூலமாக, ரஷ்யாவின் தனு சேவையை தொடங்கி இருக்கிறது. பயனாளர்களின் அடையாளங்கள், அவர் எங்கிருந்து தொடர்பு கொள்கிறார் என்பதை இதில் கண்டுபிடிக்க முடியாது. இதேபோல், பேஸ்புக், பிபிசி நிறுவனங்களிடமும் டோர் சேவை உள்ளது குறிப்பிடத்தக்கது.* தாவோஸ் மாநாட்டில் பங்கேற்க புடினுக்கு தடைஉலகப் பொருளாதார அமைப்பின் ஆண்டு இறுதி கூட்டம், சுவிட்சர்லாந்து நாட்டில் ஆண்டுதோறும் தாவோஸ் உச்சி மாநாடு என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்தாண்டு நடந்த கூட்டத்தில் புடின் நேரில் கலந்து கொண்டார். இந்நிலையில், உலகப் பொருளாதார அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில், `ஆண்டு இறுதி கூட்டம் உள்பட உலகப் பொருளாதார அமைப்பின் அனைத்து கூட்டங்களிலும் பொருளாதார தடை விதிக்கப்பட்ட தனி நபர்கள், அமைப்புகள் பங்கேற்பதை அனுமதிக்காது,’ என்று மறைமுகமாக தாவோஸ் மாநாட்டிற்கு ரஷ்யாவுக்கு அழைப்பு இல்லை என்பது கூறப்பட்டுள்ளது. இதே போல், ஐரோப்பிய ஒன்றியம், ஐஸ்லாந்து, நார்வே நாடுகளை உள்ளடக்கிய `வடக்கு பரிமாணம்’ என்ற மற்றொரு சர்வதேச அமைப்பில் இருந்தும் ரஷ்யா, பெலாரஸ் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளன….

The post 15வது நாளாக தொடர்ந்த ரஷ்யாவின் தாக்குதல் மருத்துவமனைகள் மீது குண்டுவீச்சு: குழந்தை உட்பட 3 பேர் பலி உலக நாடுகள் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Mariupol ,Russia ,Ukraine ,
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...