×

ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததால் விவசாயி தூக்கிட்டு தற்கொலை

செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த சரவம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை (52). இந்து பைரா சமூகத்தை சேர்ந்த விவசாயி. கடந்தாண்டு இவரது உறவினர் வீட்டில் துக்க நிகழ்ச்சி நடந்தது. அப்போது, செங்கல்பட்டை சேர்ந்த எல்லப்பன் (35) என்பவர், மதுபோதையில் வந்து அண்ணாதுரையிடம் தகராறு செய்துள்ளார். இதை பார்த்த அண்ணாதுரையின் மகன்கள் மற்றும் நண்பர்கள், எல்லப்பனை கண்டித்து அனுப்பினர். ஏற்கனவே, இதயநோய் இருந்த எல்லப்பன், அன்று இரவு நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்தார்.அவரது மரணத்திற்கு அண்ணாதுரை, அவரது மகன்கள் காரணம் என கூறி, எல்லப்பனின் சமூகத்தினர், அண்ணாதுரை குடும்பத்தினரை திண்டிவனம் அருகே வரவழைத்து கட்டப்பஞ்சாயத்து நடத்தினர். மேலும், எல்லப்பன் மரணத்துக்கு ரூ.30 லட்சம் நஷ்டஈடு கேட்டுள்ளனர். இதனால், அண்ணாதுரை என்ன செய்வதென்று தெரியாமல் முதல் தவணையாக ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார். அதன்பின், பணம் இல்லாததால், மீதி பணத்தை தர இயலாமல் தவித்தார். இதைதொடர்ந்து, மீண்டும் பஞ்சாயத்து கூட்டி அண்ணாதுரையை, எல்லப்பன் தரப்பினர் மிரட்டி, ரூ.2 லட்சம் பறித்துள்ளனர். மேலும், பஞ்சாயத்தில் அண்ணாதுரையின் குடும்பத்தை அந்த சமூகத்தினர் ஒதுக்கி வைப்பதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பணம் பறிப்பதறக்காக, அவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் அண்ணாதுரையின் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தனர். இதனால், பயந்துபோன  அண்ணாதுரை நேற்று முன்தினம் சித்தாமூர் போலீசில் புகார் அளித்தார். பின்னர் வீட்டுக்கு சென்ற அண்ணாதுரை, யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின்படி சித்தாமூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது….

The post ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததால் விவசாயி தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Annadurai ,Saravambakkam ,Madurandakam, Chengalpatu District ,Madurandagam ,
× RELATED காஸ் சிலிண்டர் விழிப்புணர்வு முகாம்