×

5 மாநிலங்களிலும் படுதோல்வி எதிரொலி மீண்டும் கிளம்பியது காங். தலைமை மாற்றம் குறித்த விவாதம்: மூத்த தலைவர்கள் மத்தியில் பரபரப்பு

புதுடெல்லி: 5 மாநிலங்களில் படுதோல்வி எதிரொலியாக மீண்டும் காங்கிரஸ் தலைமையில் மாற்றம் குறித்த விவாதம் கிளம்பியுள்ளது. இதனால் மூத்த தலைவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில், பஞ்சாப்பில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. மற்ற 4 மாநிலங்களில் பாஜ ஆட்சி அமைக்கிறது. இந்த 5 மாநில தேர்தலில், எந்த மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கவில்லை. காங்கிரசின் இந்த நிலைமை கண்ட, அக்கட்சிதொண்டர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். மக்களின் இந்த முடிவை ஏற்றுக்கொள்வதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.காங்கிரஸ் கட்சி தோற்றதற்கு 3 முக்கிய காரணங்கள் சொல்லப்படுகிறது. முதலாவதாக சரியான தலைமை இல்லாதது, 2வது காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் உட்கட்சி பூசல், 3வது முறையான யுத்தியோடு பிரசாரம் செய்யாமல் இருந்தது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த‌ சோனியா காந்திக்கு உடல்நிலை சரியில்லாததால், 2017ம் ஆண்டு அக்கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றார். புதுரத்தம் பாய்ந்ததாக காங்கிரஸ் கொண்டாடியது. இது அடுத்து வந்த நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் தோல்வியை தழுவியதுதான் மிச்சம். காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தார் ராகுல்காந்தி. உத்தரப்பிரதேசம் மற்றும் கேரளாவில் போட்டியிட்டார். அதில் உத்தரப்பிரதேசத்தில் பாஜ அமைச்சரிடம் தோல்வியடைந்தார். அதனால் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல்காந்தி. இது பாஜவின் வெற்றியாக பார்க்கப்பட்டது. பாஜவின் யுத்தியை உடைக்கும் அளவுக்கு காங்கிரஸ் எந்த இடத்திலும் பிரசாரம் செய்யவில்லை. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார். ராகுல் காந்தி மீண்டும் தலைவராக பொறுப்பேற்காததால், பிரியங்கா காந்தியை கொண்டுவரும் சூழல் உருவானது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இவரை அடுத்த இந்திரா காந்தி என்று கட்சி தொண்டர்கள் அழைக்க தொடங்கினர். பிரியங்காவும் உத்தரப்பிரதேசம் முழுவதும் சுழன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். உத்தரப்பிரதேசத்தின் காங்கிரஸ் முகமாக இருந்தார். ஆரம்பம் முதலே காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய தலைவலியாக இருப்பது உட்கட்சி பூசல்தான். பஞ்சாப் மாநிலத்தில் அமரிந்தர் சிங் நீக்கப்பட்டதும், சித்து அடுத்த முதல்வராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சரண்ஜித் சிங் சன்னி முதல்வராக நியமிக்கப்பட்டார். காங்கிரசின் முடிவை பெரும்பாலான சீக்கியர்கள் விரும்பவில்லை. அமரிந்தர் சிங் வெளியே போனது, அடுத்த முதல்வர் வேட்பாளராக சித்து அறிவிக்கப்படாதது என கட்சிக்குள்ளேயே விரிசல் அதிகமானது. கட்சியினரை அனுசரித்து போகும் தலைமை இல்லாததே பஞ்சாப் தோல்விக்கு காரணமாக அமைந்தது. அதனால் ஆட்சியை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.சமூக வலைதளங்களில் பாஜ அசுர வளர்ச்சியில் பிரசாரம் செய்கிறது. அதற்கு முழுமையாக காங்கிரஸ் மாறவில்லை. மக்களை கவரும் தலைவர்கள் குறைந்து விட்டார்கள். காங்கிரசில் நட்சத்திர தலைவர்கள் பெரிய பிரசாரங்கள் செய்யாததும் தோல்விக்கு காரணம். விவசாயிகள் பிரச்னை, விலைவாசி, வேலைவாய்ப்பு, லக்கிம்பூர், பாதுகாப்பு என பாஜவை தாக்கி பேச பல விஷயங்கள் இருந்தாலும், காங்கிரஸ் மேலோட்டமாகவே எல்லாவற்றையும் பிரசாரத்தில் பேசியது. மக்களிடம் எடுத்து செல்வதில் காங்கிரஸ் கோட்டை விட்டுள்ளது.2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, தாங்கள் பெற்ற தோல்வியில் இருந்து காங்கிரஸ் வியூகங்களை மாற்றி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எதையுமே செய்யவில்லை. அதனால்தான் மீண்டும் மீண்டும் காங்கிரஸ் தோல்வியை சந்தித்து வருகிறது. இந்த தேர்தல் முடிவுகளும் காங்கிரசுக்கு சாதகமாக இல்லை. பாஜவினர் ஒவ்வொரு நாளையும் தங்கள் பிரசார நாளாக கருதி உழைத்ததுபோல், காங்கிரசும் சரி, தொண்டர்களும் சரி… சரியாக செயல்படவில்லை. இதே நிலை தொடர்ந்தால், அடுத்த தேர்தலில் காங்கிரசின் நிலை கேள்வி குறியாகத்தான் இருக்கும்.அதே நேரத்தில் இந்த 5 மாநில தேர்தல் ேதால்விகளால் காங்கிரஸ் தலைமையில் மாற்றம் குறித்த விவாதம் மீண்டும் கிளம்பியிருக்கிறது. இதனால் மூத்த தலைவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எப்படியோ மீண்டும் காங்கிரஸ் மீண்டும் எழுச்சி பெற வேண்டும் என்பதே தொண்டர்களின் ஆவலாக உள்ளது.தலைமை மாற்றம் தவிர்க்க முடியாதது…ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியை சந்தித்துள்ளது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்பியுமான சசி தரூர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘சட்டமன்றத் தேர்தல் முடிவுகளால் காங்கிரஸ் மீது நம்பிக்கை கொண்ட நாம் அனைவரும் வேதனை அடைந்துள்ளோம். எதிர்கால இந்தியாவை பற்றிய திட்டங்கள் குறித்தும், நேர்மறையான செயல்பாடுகள் குறித்தும் காங்கிரஸ் கட்சி மீண்டும் உறுதிபடுத்த வேண்டிய நேரம் இது… அந்த எண்ணங்களை மக்கள் மத்தியில் மீண்டும் எழுப்பி ஊக்குவிக்க வேண்டும். அதற்காக கட்சியின் தலைமையில் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒன்று தெளிவாக தெரிகிறது; நாம் வெற்றிபெற வேண்டுமானால் மாற்றம் தவிர்க்க முடியாதது என்பதுதான்’ என்று தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவர் தேவை, கட்சி தலைமைக்குள் மாற்றம் அவசியம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர் (ஜி23) இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். அவர்களில் ஒருவர் சசி தரூர் என்பது குறிப்பிடத்தக்கது….

The post 5 மாநிலங்களிலும் படுதோல்வி எதிரொலி மீண்டும் கிளம்பியது காங். தலைமை மாற்றம் குறித்த விவாதம்: மூத்த தலைவர்கள் மத்தியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Congress ,states ,Gong ,
× RELATED சர்ச்சை விளம்பரங்கள் விவகாரத்தில் பாஜ மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி