×

உக்ரைன்-ரஷ்யா போரால் வரத்து சரிவு சமையல் எண்ணெய் விலை லிட்டர் ரூ.180 ஆக உயர்வு

சேலம்: உக்ரைனில் நடந்து வரும் போரால் சமையல் எண்ணெய் வரத்து சரிந்துள்ளது. இதனால் சூரியகாந்தி எண்ணெய் லிட்டர் ₹180 ஆக அதிகரித்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர். இந்தியாவில் சூரியகாந்தி எண்ணெய் உள்பட சமையல் எண்ணெய் தேவையை ரஷ்யா, உக்ரைன் நாடுகள் 75 சதவீதத்திற்கும் மேல் பூர்த்தி செய்கிறது. இந்நிலையில் தற்போது உக்ரைன் மீது ரஷ்யா போர் ெதாடுத்து வருகிறது. இதனால் அங்கு சமையல் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைனில் இருந்து இந்தியாவிற்கு வரும் சமையல் எண்ணெய் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக எண்ணெய் விலை படிப்படியாக உயர்ந்துள்ளது.இதுகுறித்து சேலத்தை சேர்ந்த மளிகை வியாபாரிகள் கூறியதாவது: உலகளவில் சமையலுக்கு தேவையான எண்ணெயை ரஷ்யா, உக்ரைன், இந்தோனேஷியா, மலேசியா உள்பட பல்வேறு நாடுகள் உற்பத்தி செய்கிறது. அங்கிருந்து இந்தியாவுக்கு தேவையான எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. உக்ரைனில் நடந்து வரும் போரால் அங்கு சமையல் எண்ணெய் உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்  அங்கிருந்து எண்ணெய் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக விலை அதிகரித்துள்ளது.கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு லிட்டர் ₹140க்கு விற்ற சூரியகாந்தி எண்ணெய், தற்போது லிட்டருக்கு ₹40 அதிகரித்து ₹180 என விற்பனை செய்யப்படுகிறது. ₹130க்கு விற்ற பாமாயில் ₹160 எனவும், நல்லெண்ணெய் ₹230 எனவும், தேங்காய் எண்ணெய் ₹245 எனவும் விற்பனை செய்யப்படுகிறது. வழக்கமாக, உக்ரைனில் இருந்து தினமும் 2 கப்பலில் எண்ணெய் வரும். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக உக்ரைனில் இருந்து கப்பல் வரவில்லை. தற்போது இருப்பில் உள்ள எண்ணெய் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. இந்த எண்ணெய் குறைந்துள்ளதால், விரைவில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வந்தாலும், விரைவில் எண்ணெய் வர வாய்ப்பில்லை. அதனால் இப்போதைக்கு எண்ணெய் விலை குறையாது. ஒரு சில வியாபாரிகள் மொத்தமாக விற்பனை செய்யாமல், வாடிக்கையாளர்களுக்கு ஒரு லிட்டர் முதல் 3 லிட்டர் வரை மட்டுமே விற்பனை செய்கின்றனர். இவ்வாறு வியாபாரிகள் கூறினர்….

The post உக்ரைன்-ரஷ்யா போரால் வரத்து சரிவு சமையல் எண்ணெய் விலை லிட்டர் ரூ.180 ஆக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Ukraine ,Russia ,war ,Salem ,Dinakaran ,
× RELATED இலங்கை தமிழர்களுக்கு 3,959 வீடுகள் கட்டப்படும்: அமைச்சர் தகவல்