×

சசிகலா அதிமுகவில் சேர்க்கப்படுவாரா? தென்மாவட்ட நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் மீண்டும் ஆலோசனை: ஓ.ராஜா நீக்கப்பட்டுள்ள நிலையில் நடக்கும் சந்திப்பால் பரபரப்பு

சென்னை: சசிகலாவை அதிமுகவில் சேர்க்கலாமா என்பது குறித்து ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் தென்மாவட்ட நிர்வாகிகளுடன் அவரது பண்ணை வீட்டில் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த அனைத்து வகை தேர்தல்களிலும் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இதனால், அதிமுகவை வழிநடத்தி வரும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் நாளுக்கு நாள் தொண்டர்களிடம் செல்வாக்கு குறைந்து வருகிறது. இதனால், அதிமுகவை வழிநடத்த ஒற்றை தலைமை முறையை கொண்டு வர வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் கடந்த வாரம் தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்தில், தனது பண்ணை வீட்டில் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சசிகலா, டி.டி.வி.தினகரனை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கட்சியின் தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் தங்கி இருந்த சசிகலாவை ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா திடீரென சந்தித்து பேசினார். அப்போது, அதிமுக கட்சியை வழிநடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு ஓபிஎஸ் அனுமதியுடன் தான் நடந்தது என்றும் பேசப்பட்டது.இந்த பரபரப்பான சூழ்நிலையில், கடந்த சனிக்கிழமை ஓ.ராஜா அதிமுக கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.  இதனால் தொண்டர்களின் குழப்பம் உச்சத்தை அடைந்தது. அதேநேரம், ஓ.ராஜா பேட்டி அளிக்கும்போது, ‘அதிமுகவை ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தரைமட்டமாக்கி அழித்து விட்டனர்’ என்று பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார்.இப்படி ஒரு பக்கம் இருந்தாலும், நேற்றும் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பண்ணை வீட்டில் தான் இருந்தார்.  அவரை தென்மாவட்டங்களை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் பலரும் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக யாருக்கும் தெரிவிக்காமல், ரகசியமாக நடைபெற்று வருகிறது. இந்த சந்திப்பின்போது, சசிகலா விஷயத்தில் தங்கள் கருத்துக்களை பலரும் ஓபிஎஸ்.சிடம் தெரிவித்தனர். சசிகலாவை கட்சியில் சேர்த்தால், என்ன மாதிரி விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியது வரும் என்று விளக்கி கூறினர். அதேநேரம், தற்போது கட்சியின் தொடர் தோல்வியில் இருந்து மீண்டு வர நல்ல விஷயங்கள் குறித்து கட்சி தலைமை முடிவு எடுக்க வேண்டும்.கட்சி தலைமையில் உள்ளவர்களின் நலன் மட்டுமே தற்போது பார்க்கப்படுகிறது. இனி வருங்காலத்திலாவது கட்சியின் முன்னேற்றம் குறித்து சிந்திக்க வேண்டும். அதுபோன்ற நல்ல திட்டங்களுக்கு அதிமுக நிர்வாகிகள் முழு ஆதரவு அளிப்போம் என்று கூறினர். அதேநேரம், நேற்று ஓ.பன்னீர்செல்வத்தை ரகசியமாக சந்தித்த அதிமுக நிர்வாகிகள் பலரும், மீண்டும் சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்றே கோரிக்கை வைத்துள்ளனர். இதனால், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் தங்கள் பங்குக்கு சேலத்தில் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.ஓபிஎஸ், இபிஎஸ் இன்று கட்சி அலுவலகம் வருகை?: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆண்டுதோறும் வருவர்். அப்போது, அதிமுக மகளிர் அணியினர் திரளாக வந்து கேக் வெட்டி கொண்டாடுவார்கள். இன்று, உலக மகளிர் தினத்தையொட்டி ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு காலை வருவதாக கூறப்படுகிறது. சசிகலாவை, அதிமுகவில் மீண்டும் சேர்ப்பது குறித்து தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கட்சி தலைமைக்கு அனுப்பிய நிலையில், 2 பேரும் கட்சி தலைமை அலுவலகம் வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆனாலும், தகவல் உறுதி செய்யப்படவில்லை….

The post சசிகலா அதிமுகவில் சேர்க்கப்படுவாரா? தென்மாவட்ட நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் மீண்டும் ஆலோசனை: ஓ.ராஜா நீக்கப்பட்டுள்ள நிலையில் நடக்கும் சந்திப்பால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Sasikala ,AIADMK ,OPS ,South ,O. Raja ,CHENNAI ,O. Panneerselvam ,Dinakaran ,
× RELATED அதிமுகவை கைப்பற்ற சசிகலா அதிரடி...