×

சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளின் உரிமையாளர்களிடம் ரூ.2.72 லட்சம் அபராதம் வசூல்: மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: சென்னையில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகள், மாநகராட்சி  பொது சுகாதாரத்துறையினரால் பிடிக்கப்பட்டு, புதுப்பேட்டை  மற்றும் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டு தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மேலும், அவ்வாறு பிடிக்கப்படும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு மாடு ஒன்றுக்கு ₹1,550 அபராதம் விதிக்கப்படுகிறது. இதையடுத்து, மண்டல நல அலுவலர், கால்நடை உதவி மருத்துவர், சுகாதார ஆய்வாளர் மற்றும் மாடு வளர்ப்பவர்களின் வீடு அல்லது மாடு பிடிபட்ட எல்லைக்குட்பட்ட காவல் ஆய்வாளரின் பரிந்துரை கையொப்பத்தை பெற்று சமர்ப்பித்து தங்களுடைய மாடுகளை அதன் உரிமையாளர்கள் பெற்றுச் செல்ல வேண்டும். 3வது முறையாக ஒரு மாடு பிடிபடும்போது, உரிமையாளருக்கு திரும்ப வழங்கப்படாமல் புளூ கிராஸ் சொசைட்டியிடம் ஒப்படைக்கப்படும்.இதற்காக, மாநகராட்சி சார்பில் 15 மண்டலங்களிலும் மண்டல நல அலுவலர்கள், கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்களின் மேற்பார்வையில் காவல் துறையுடன் இணைந்து பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றிதிரியும் மாடுகள் தொடர்ந்து பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் மொத்தம் 176 மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு தலா ₹1,550 வீதம் ₹2,72,800 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாடுகளின் உரிமையாளர்கள், தங்கள் மாடுகளை பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சாலையில் சுற்றித்திரிய விடாமல் முறையாக பராமரிக்க அறிவுறுத்தப்படுகிறது. மீறினால் மாடுகள் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு காவல்துறையின் மூலம் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது….

The post சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளின் உரிமையாளர்களிடம் ரூ.2.72 லட்சம் அபராதம் வசூல்: மாநகராட்சி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Pudupet ,Perampur ,Public Health Department of the ,Public Health Department ,
× RELATED சாலையில் கிடந்த பணத்தை காவல்...