×

உக்ரைனில் தொடரும் பயங்கர தாக்குதல் மீண்டும் 4 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தம்: ரஷ்யா அறிவித்தது; மற்ற பகுதிகளில் கடும் மோதல்

லிவிவ்: உக்ரைனில் 12வது நாளாக நேற்றும் பயங்கர தாக்குதல் நடந்த நிலையில், தலைநகர் கீவ், கார்கிவ், சுமி, மரியுபோல் ஆகிய 4 நகரங்களில் இருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கான மீட்பு பணிகளுக்காக தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பை ரஷ்யா வெளியிட்டது. அதே சமயம் மற்ற நகரங்களில் ஏவுகணைகள் மீது குடியிருப்பு பகுதிகள் மீது கடும் தாக்குதல் நடத்தப்படுகிறது.உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா பயங்கர ஆயுதங்களை கொண்டு நாட்டையே சர்வநாசமாக்கி வருகிறது. 11 நாட்களாக நடந்த போரில் பல இடங்களில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவதால், பதுங்கு குழிகளில் மக்கள் உயிர் பிழைக்க போராடி வருகின்றனர். பல்வேறு நகரங்களில் உணவு, குடிநீர், மருந்து இல்லாமலும் தப்பிச் செல்லவும் முடியாமலும் மக்கள் தவிக்கின்றனர். இதற்கிடையே, மனிதாபிமான அடிப்படையில் பொதுமக்களை வெளியேற்ற மரியுபோல், வோல்னோவாக ஆகிய 2 நகரங்களில் நேற்று முன்தினம் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.ஆனால் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ரஷ்ய ராணுவம் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில், நகரை விட்டு வெளியேற முயன்ற மக்களில் சிலர் நடுரோட்டில் பலியாயினர். பலர் காயமடைந்தனர். இதனால் சில மணி நேரங்களில் போர் நிறுத்த ஒப்பந்தம் தோல்வி அடைந்து, மக்கள் மீண்டும் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்தனர். இந்நிலையில், 12வது நாளாக நேற்றும் ரஷ்ய ராணுவம் பயங்கர தாக்குதலை தொடர்ந்தது. குறிப்பாக மைகோலைவ் பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும், குடியிருப்புகளில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்தது. அதே சமயம், தலைநகர் கீவ், மரியுபோல், கார்கிவ், சுமி ஆகிய 4 நகரங்களில் பொதுமக்களை வெளியேற்ற வசதியாக தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்தது. இந்திய நேரப்படி நேற்று 12 மணி முதல் தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. போர் நிறுத்தத்தின் போது, ரஷ்யா வான் வளி உள்ளிட்ட எந்த தாக்குதலையும் நடத்தாது என உறுதி அளித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று முன்தினம் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தொலைபேசி மூலம் பேசினார். அவர் விடுத்த கோரிக்கையை ஏற்று புடின் தற்காலிக போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி சுமார் 2 லட்சம் பேரை போர் நடக்கும் பகுதியில் இருந்து அப்புறப்படுத்த சர்வதேச செஞ்சிலுவை சங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, பெலாரசில் ரஷ்யா, உக்ரைன் சிறப்பு குழுவினரின் 3ம் கட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. ஒருபுறம் போர் நிறுத்தம், பேச்சுவார்த்தை நடந்தாலும் மற்ற பிற நகரங்களில் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து குடியிருப்புகள், கட்டிடங்களை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. போர் நிறுத்த அறிவிப்பால் கார்கிவ் நகரில் வீதிகளில் வந்த பொதுமக்கள் தங்கள் இடிந்து போன குடியிருப்புகளை கண்டு கதறி அழுதனர். குடியிருப்புகளை ஒட்டுமொத்தமாக தகர்த்து உக்ரைனை மனதளவில் ரஷ்யா பலவீனப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. நேற்றைய நிலவரப்படி உக்ரைனில் இருந்து 17 லட்சம் பேர் வெளியேறி, அண்டை நாடுகளில் அகதிகமாக தஞ்சமடைந்துள்ளனதாக ஐநா தெரிவித்துள்ளது.17 நாடுகளுடன் நட்பு கிடையாது: உக்ரைனுடனான போரைத் தொடர்ந்து சர்வதேச அளவில் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்துள்ள ரஷ்யா தனது பதிலடியாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கி உள்ளது.டிக்டாக், நெட்பிளிக்ஸ் தடை: உலக நாடுகளின் பொருளாதார தடையாலும், போர் செய்திகளை வெளியிட்டால் 15 ஆண்டு சிறை என்ற ரஷ்யாவின் புதிய சட்டத்தாலும் பல நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்களின் செயல்பாட்டை நிறுத்தி வருகின்றன. அந்த வகையில், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கி சேவைகள் ரஷ்யாவிலும், பெலாரஸிலும் நிறுத்தப்பட்டுள்ளன. ரஷ்ய பயனர்கள் புதிய வீடியோக்களை பதிவிடவோ, பகிரப்பட்ட வீடியோக்களைப் பார்க்கவோ முடியாது என்று டிக்டாக் அறிவித்துள்ளது. இதே போல, நெட்பிளிக்ஸ் ரஷ்யாவுக்கான தனது சேவையை நிறுத்தி உள்ளது.சீனாவின் முக்கிய கூட்டாளி ரஷ்யா: சீன வெளியுறவு துறை அமைச்சர் வாங் யீ நேற்று  நிருபர்களிடம் கூறுகையில்,‘‘சீனாவின் முக்கிய கூட்டாளி ரஷ்யா. உலகின் பல்வேறு பகுதிகள் ஆபத்துகள் நிறைந்து காணப்பட்டாலும் அந்த நாட்டுடனான உறவை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவோம். உலகிலேயே ரஷ்யாவுடன் தான் மிக முக்கியமான இருதரப்பு ஒத்துழைப்பு உறவை சீனா வைத்துள்ளது’’ என்றார். இதற்கிடையே மாஸ்டர், விசா கார்டு நிறுவனங்கள் ரஷ்ய வங்கிகளுடனான வர்த்தக உறவை துண்டித்த நிலையில், சீனாவின் கார்டு பணப் பரிவர்த்தனை நிறுவனமான யூனியன்பே நிறுவனத்துடன் கைகோர்க்க ரஷ்ய வங்கிகள் முடிவு செய்துள்ளன….

The post உக்ரைனில் தொடரும் பயங்கர தாக்குதல் மீண்டும் 4 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தம்: ரஷ்யா அறிவித்தது; மற்ற பகுதிகளில் கடும் மோதல் appeared first on Dinakaran.

Tags : Ukraine ,Russia ,Lviv ,Kiev ,Kharkiv ,Sumy ,Mariupol ,Dinakaran ,
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...