×

அதிமுக கட்சியில் சசிகலா சேர்க்கப்படுவாரா?.. பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை திரட்டும் ஓபிஎஸ்: எடப்பாடி அணி அமைதியாக இருப்பதால் குழப்பம்

சென்னை: அதிமுக கட்சியில் சசிகலாவை சேர்க்க ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். ஆனால், இதற்கு எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல் எடப்பாடி அணியினர் அமைதியாக இருப்பதால் தொடர்ந்து குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை திரட்டும் பணியில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் நடந்து முடிந்த எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளதால் தொண்டர்கள் விரக்தி அடைந்துள்ளனர். இந்த தோல்விக்கு, அதிமுக கட்சியில் மக்களை கவரும் தலைவர் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என இரட்டை தலைமையை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கு, காரணம் இவர்களிடம் ஆரம்பத்தில் இருந்தே ஒற்றுமை இல்லாததுதான்.இந்த நிலையில்தான், அதிமுக கட்சியின் முழு அதிகாரத்தையும் கைப்பற்ற எடப்பாடி அணியினர் கடந்த ஒரு வருடத்துக்கு மேல் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து இல்லாமல் எந்த தீர்மானமும் நிறைவேற்ற முடியாது என்ற ஒரு ஆயுதத்தை கையில் வைத்திருக்கும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி அணியினருக்கு பிடிகொடுக்காமல் உள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த கே.பி.முனுசாமியும் எடப்பாடி அணிக்கு தாவியதால் தற்போது ஓபிஎஸ் தனித்து விடப்பட்டுள்ளார்.இந்த நிலையில்தான் தமிழகத்தில் நடைபெற்று வரும் தேர்தல்களின் தொடர் தோல்வியில் எடப்பாடி அணியினர் சோர்வடைந்துள்ளனர். ஆனாலும், அதிமுக கட்சியின் பெரும்பாலான மூத்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி அணியில்தான் உள்ளனர். சென்னையை பொறுத்தவரை எடப்பாடி அணிக்கு ஆதரவான தலைவராக ஜெயக்குமார் இருந்தார். அவரும் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். சென்னை, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயக்குமாரை பார்க்க எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் சென்றார். அப்போது, ஓ.பன்னீர்செல்வம் சென்னையில்தான் இருந்தார். ஆனால் எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வத்திடம் சொல்லாமல் சென்றுவிட்டார். வேலுமணி மட்டும் அவருடன் சென்றார். எடப்பாடி, ஜெயக்குமாரை போய் சந்தித்த விஷயம் டி.வி. மற்றும் பத்திரிகைகளில் செய்தியாக வந்த பிறகுதான் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தெரியவந்தது. இதனால், எடப்பாடி மீது ஓபிஎஸ் கடும் கோபத்தில் இருந்தார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி இருந்தும், தன்னை எடப்பாடி உள்ளிட்ட அனைவரும் ஓரங்கட்டுகிறார்கள் என்பதாலும், இதற்கு தக்க பாடம் படித்து கொடுக்க வேண்டும் என்று ஓபிஎஸ் திட்டம் போட்டார். இந்த நிலையில்தான், மூன்று நாட்களுக்கு முன் தேனியில் உள்ள தனது பண்ணை வீட்டில் தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார் ஓபிஎஸ். இந்த கூட்டத்தில், சசிகலா, டி.டி.வி.தினகரனை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி கட்சி தலைமைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார். இது அதிமுக தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்க முடியாமல், இபிஎஸ் அணியினர் கடந்த சில நாட்களாக அமைதியாக உள்ளனர். இந்த நிலையில், நேற்று ஓபிஎஸ் தம்பி ராஜா தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் தங்கி இருந்த சசிகலாவை திடீரென நேரில் சந்தித்தார். இது அதிமுக தலைவர்களிடம் மேலும் பரபரப்பை அதிகரித்து உள்ளது. ஓபிஎஸ் என்ன காரணத்துக்காக, இதுபோன்ற ஒரு வேலையில் ஈடுபட்டு வருகிறார் என்று தெரியாமல் இபிஎஸ் அணியினர் தொடர்ந்து குழப்பத்தில் உள்ளனர். இதுகுறித்து தேனி மாவட்டத்தை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஒருவர் கூறும்போது, ‘தமிழக மக்களிடம் பெரிய அளவில் செல்வாக்கு இல்லாத எடப்பாடி பழனிசாமி, தனது கட்டுப்பாட்டில் தான் அதிமுக கட்சி இருப்பதுபோல் காட்டி வருகிறார். உள்ளாட்சி தேர்தலில், ஆளுங்கட்சி மீது தேவையில்லாத குற்றச்சாட்டுக்களை கூறியதால் இவரது பிரசாரம் எடுபடவில்லை. அதனால்தான் அதிமுக படுதோல்வி அடைந்தது. அதனால்தான் கட்சியை ஒருங்கிணைக்கும் முடிவில் ஓபிஎஸ் சில முடிவுகளை எடுத்து வருகிறார். மேலும், அதிமுக கட்சியை வழிநடத்தி செல்ல இனி ஒற்றை தலைமை முறைதான் வேண்டும் என்ற நிலைக்கு வந்துள்ளார். கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம் தகுதியான நபராக உள்ளார். மேலும், சசிகலா விஷயத்தில் தொண்டர்கள் எடுக்கும் முடிவுக்கு கட்சி தலைமை கட்டுப்பட வேண்டும். அதனால்தான் தேனி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று கூறி தீர்மானம் போட்டுள்ளோம். இதையடுத்து, ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள மாவட்ட செயலாளர், அதிமுக முக்கிய நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் பேச திட்டமிட்டுள்ளார். பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டு, அதன் அடிப்படையில் ஓபிஎஸ் உறுதியான ஒரு முடிவை விரைவில் அறிவிப்பார். அனைத்து மாவட்டத்திலும், சசிகலா விஷயம் குறித்து தீர்மானம் நிறைவேற்றி கட்சி தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும். இது தொடர்பாக விவாதிக்க விரைவில் அதிமுக பொதுக்குழு அல்லது கட்சியின் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெறவும் வாய்ப்புள்ளது’ என்றார்….

The post அதிமுக கட்சியில் சசிகலா சேர்க்கப்படுவாரா?.. பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை திரட்டும் ஓபிஎஸ்: எடப்பாடி அணி அமைதியாக இருப்பதால் குழப்பம் appeared first on Dinakaran.

Tags : Sasikala ,Supreme Party ,OPS ,Etadpadi ,Chasikala ,Pannerselvam ,Edabadi ,Dinakaraan ,
× RELATED கோமாவில் உள்ள கணவரின் சொத்துகளை விற்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி..!!