×

100 படங்களுடன் ஓய்வெடுக்கப் போகிறேன்: பிரியதர்ஷன் பேட்டி

சென்னை: மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் இதுவரை 96 படங்களை இயக்கி உள்ளார். தென்னிந்திய சினிமாவில் கோடி ராமகிஷ்ணா, தாசரி நாராயணராவ், ராம நாராயணன், கே.பாலசந்தர் வரிசையில் அதிக படங்களை இயக்கி இருப்பவர் இவர். தமிழ், இந்தி மொழிகளிலும் பல படங்களை இயக்கியுள்ளார். இன்னும் 4 படங்கள் இயக்கி விட்டு ஓய்வுபெற இருப்பதாக பிரியதர்ஷன் கூறினார். அவர் இப்போது இயக்கி உள்ள ‘அப்பத்தா’ என்ற படம் வருகிற 29ம் தேதி ஜியோ சினிமா ஓடிடியில் வௌியாகிறது. இதில் ஊர்வசி நாயகியாக நடித்துள்ளார்.

இதுகுறித்து பிரியதர்ஷன் அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்த கதை ஒரு மராட்டிய எழுத்தாளருடையது. என்னை இந்தியில் இயக்கித் தரத்தான் அணுகினார்கள். ஆனால் நான் தமிழில் வேண்டுமானால் இயக்கித் தருகிறேன் என்று சொல்லி இந்த படத்தை இயக்கி இருக்கிறேன். ஒரு நாய்க்கும், ஒரு வயதான அப்பத்தாவுக்கும் இடையிலான அன்பின் மூலம் மனிதர்களுக்கும் விலங்கிற்குமான ஆத்மார்த்தமான அன்பை பேசுகிற படம். படத்தை 30 நாளில் முடித்தோம். கடைசி நாளில் நடித்த நாயை பிரிய முடியாமல் அழுதோம். ஊர்வசி அந்த நாயை எனக்கே தந்து விடுங்கள் என்று அழுதார். படப்பிடிப்பிலேயே மனிதன், விலங்கு இடையிலான அன்பை நேரடியாக உணர்ந்த தருணம் அது.

ஊர்வசியை தவிர இந்த கேரக்டரில் வேறு யாராலும் நடிக்க முடியாது. அவர் வாழும் மனோரமா. அவரை குழந்தை நட்சத்திரத்தில் இருந்து அறிவேன். 700 படங்கள் என்பது இந்திய நடிகை யாரும் செய்யாத சாதனை. இன்னும் சில படங்களில் நடித்தால் அவர் பிரேம் நசீரின் சாதனையை முறியடித்து விடுவார். இதுவரை 96 படங்களை இயக்கிய நான் இன்னும் 4 படங்கள் இயக்கி விட்டு 100 படத்துடன் ஓய்வெடுக்க விருப்பம் கொண்டிருக்கிறேன். இத்தனை வருட பயணத்துக்கு பயம்தான் காரணம் என்பேன். வெற்றி படம் எடுத்து விட்டால் அடுத்த படமும் வெற்றி பெற வேண்டுமே என்ற பயம் வரும். தோல்வி அடைந்து விட்டால் அடுத்த படமும் தோல்வி அடைந்தால் என்ன செய்வது என்ற பயம் வரும். இந்த பயம்தான் என் பலமும், பலவீனமுமாக இருந்திருக்கிறது. இவ்வாறு பிரியதர்ஷன் கூறினார்.

The post 100 படங்களுடன் ஓய்வெடுக்கப் போகிறேன்: பிரியதர்ஷன் பேட்டி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Priyadarshan ,Chennai ,Kodi Ramakishna ,Dasari Narayanrao ,Rama Narayanan ,K.R. ,Balacandar ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...