×

நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு மகனை கொன்ற ரவுடிகளை பழிதீர்க்க கத்தியுடன் பாய்ந்த முதியவர்: விரைந்து ெசயல்பட்ட போலீசாரால் அசம்பாவிதம் தவிர்ப்பு

சென்னை:  சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள அல்லிகுளம் 20வது கூடுதல் நீதிமன்றத்தில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி ஒருவனை புழல் சிறையில் இருந்து ஆயுதப்படை போலீசார் பாதுகாப்புடன் வாகனத்தில் ேநற்று முன்தினம் அழைத்து வந்தனர். நீதிமன்ற வளாகத்தில் வாகனத்தில் இருந்து 2 குற்றவாளிகளை ஆயுதப்படை போலீசார் பாதுகாப்புடன் நீதிமன்ற கட்டிடத்தின் கீழ் தளத்தில் இருந்து 2வது மாடியில் உள்ள 20வது கூடுதல் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றனர்.  அப்போது திடீரென ஒருவர் ஒரு அடி நீளமுள்ள கத்தியுடன் ‘என் மகனை கொலை செய்த உங்களை விடமாட்டேன்’ என்று கூறியபடி ஆக்ரோஷமாக 2 குற்றவாளிகளை வெட்டி கொலை செய்ய பாய்ந்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து செயல்பட்டு கத்தியுடன் பாய்ந்த நபரை லாவகமாக பிடித்தனர். பிறகு பிடிபட்ட நபரை ஆயுதப்படை போலீசார் பெரியமேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்படி பிடிபட்ட நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சூளைமேடு பெரியார் பாதை பகுதியை சேர்ந்த உதயகனி (60) என்றும், இவரது மகன் ஆண்டனி உபால்ட் என்பவரை கடந்த 2020ல் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் பஞ்சாயத்து செய்ததாக கூறி ரவுடிகளான ஐயப்பன் மற்றும் கார்த்திக் ஆகியோர் இணைந்து வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. மகன் மீதுள்ள பாசத்தில் உதயகனி, மகனை கொலைக்கு பழி தீர்க்கும் வகையில் 2 ரவுடிகளையும் கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். குற்றவாளிகள் 2 பேரும் புழல் சிறையில் இருந்ததால் அவர்களை உதயகனியால் கொலை செய்ய முடியவில்லை. அதேநேரம், மகனின் கொலை வழக்கு நேற்று பெரியமேடு பகுதியில் உள்ள அல்லிகுளம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.இதனால் வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்திற்கு 2 ரவுடிகளையும் அழைத்து வரும் போது கொலை செய்துவிடலாம் என்று முடிவு செய்து கத்தியுடன் நீதிமன்ற வளாகத்திற்கு வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து உதயகனி மீது வழக்கு பதிவு செய்து பெரியமேடு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு அடி நீளமுள்ள கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.   நீதிமன்ற வளாகத்தில் நடந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது….

The post நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு மகனை கொன்ற ரவுடிகளை பழிதீர்க்க கத்தியுடன் பாய்ந்த முதியவர்: விரைந்து ெசயல்பட்ட போலீசாரால் அசம்பாவிதம் தவிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Allikulam 20th Additional Court ,Periyamedu ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!