×

காஞ்சி, செங்கை, திருவள்ளூரில் ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீருக்காக 40 ஏரிகளை சீரமைக்க முடிவு: நீர்வளத்துறை அதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 14,098 ஏரிகள் உள்ளன. இதில், சென்னையில் 28 ஏரிகள், செங்கல்பட்டில் 564 ஏரிகள், காஞ்சிபுரத்தில் 381 ஏரிகள், திருவள்ளூரில் 578 ஏரிகள் உள்ளன. இதன் மூலம் இந்த மாவட்டங்கள் பாசன வசதியை பெறுகின்றன. சென்னையில் உள்ள ஏரிகளை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள ஏரிகளில் பெரும்பாலானவை பாசனத்துக்கு பயன்படுகிறது. இந்த ஏரிகள் தூர்வாரப்படாததால், தற்போது அதன் முழு கொள்ளளவை இழந்துள்ளது. அதே போன்று 5 ஆண்டுகளுக்கு மேல் புனரமைப்பு பணி மேற்கொண்ட ஏரிகள் மற்றும் மழையால் சேதமடைந்த ஏரிகளில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். இதற்காக, நீர்வளத்துறை சென்னை மண்டல தலைமை பொறியாளர் முரளிதரன், கண்காணிப்பு பொறியாளர் முத்தையா உள்ளிட்ட அதிகாரிகள் கொண்ட குழுவினர் சேதமடைந்த ஏரிகளை நேரில் ஆய்வு செய்தனர். அதன்பேரில், செங்காட்டூர், வீராணகுண்ணம், உத்திரமேரூர், கொடுவாழி, கோட்டையூர், கடப்பேரி, பிவி.களத்தூர் உட்பட 26 ஏரிகளை மீண்டும் புனரமைக்க வேண்டியுள்ளது. இதற்காக, அந்த ஏரிகளை மறு சீரமைப்பு பணி மேற்கொள்ளும் வகையில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. தற்போது, இந்த ஏரிகள், பாசனத்துக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், ஒன்றிய அரசின் நிதியுதவி மூலம் நடக்கும் ஆர்ஆர்ஆர் திட்டத்தின் கீழ்  26 ஏரிகளின் புனரமைப்பு பணிக்கு நிதி கேட்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நிதி பெற ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் மாநில அரசின் நிதியுதவியின் மூலம் இப்பணிகள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதே போன்று, ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பாசனத்துக்கு பயன்படாத ஏரிகளை குடிநீர் தேவைக்காக சீரமைக்கப்படுகிறது. இதற்காக, 40 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்….

The post காஞ்சி, செங்கை, திருவள்ளூரில் ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீருக்காக 40 ஏரிகளை சீரமைக்க முடிவு: நீர்வளத்துறை அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Jaljeevan ,Kanchi, Senkai, Tiruvallur ,Chennai ,Water Resources Department ,Tamil Nadu ,Chengalpattu, Kanchipuram ,
× RELATED நெலாக்கோட்டை ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்டத்தில் 6 ஆயிரம் குடிநீர் இணைப்பு