×

போர் நிறுத்த பேச்சுவார்த்தை தொடங்கிய போதிலும் உக்ரைனில் 5வது நாளாக தீவிர தாக்குதல்: ஆயுத உதவியால் விளைவு மோசமாகும் என புடின் எச்சரிக்கை

கார்கிவ்: பெலாரசில் போர் நிறுத்த பேச்சுவார்த்தை தொடங்கிய போதிலும், உக்ரைனில் நேற்று 5வது நாளாக ரஷ்ய ராணுவம் தீவிர தாக்குதலில் ஈடுபட்டது. ரஷ்யா மீதான ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் பொருளாதார தடைகள் தீவிரமடைந்துள்ளன. மேலும், உக்ரைனுக்கு அதிநவீன ஆயுதங்களை வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. இது விளைவுகளை மோசமாக்கும் என ரஷ்ய அதிபர் புடின் எச்சரித்துள்ளார்.உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா முக்கிய நகரங்களை கைப்பற்றி வருகிறது. தலைநகர் கீவ் மற்றும் நாட்டின் 2வது பெரிய நகரமான கார்கிவ்வை குறிவைத்து ரஷ்ய படைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. இதற்கிடையே, உலக நாடுகளின் ஆதரவு உக்ரைனுக்கு அதிகரித்ததன் காரணமாக, தனது நாட்டின் அணு ஆயுத படைப்பிரிவை தயார் நிலையில் வைக்க ரஷ்ய அதிபர் புடின் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, அண்டை நாடான பெலாரசில் பேச்சுவார்த்தை நடத்த மறுத்து வந்த உக்ரைன், வேறுவழியின்றி ஒப்புக் கொண்டது. அதன்படி, பெலராஸ் எல்லையில் ரஷ்யா, உக்ரைன் இரு நாட்டு தூதுக்குழு நேற்று காலை பேச்சுவார்த்தையை தொடங்கியது.இதில், ரஷ்யா உடனடியாக தாக்குதலை நிறுத்த வேண்டும், படைகள் வாபஸ் பெற வேண்டும் என உக்ரைன் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் ரஷ்ய தரப்பில் அதன் தரப்பு கோரிக்கைகள் எதுவும் வெளியிடப்படவில்லை. பேச்சுவார்த்தை காரணமாக ரஷ்ய படைகளின் தாக்குதல் ஆரம்பத்தில் குறைந்திருந்த நிலையில், பின்னர் மீண்டும் தீவிரமானது. கார்கிவ் நகரின் வணிக வளாகத்தின் மீது வீசப்பட்ட வெடிகுண்டுகளால் 12க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகினர். தலைநகர் கீவ்வில் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் பொதுமக்கள் பலர் தங்கள் குழந்தைகள் உடைகளுடன் ரயில்கள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு தப்பிச் செல்லும் முயற்சியை மேற்கொண்டனர்.அதே சமயம், அங்கு சிக்கியுள்ள மாணவர்கள் ரயில்கள் மூலம் மேற்கு உக்ரைன் பகுதிக்கு வருமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. மேற்கு உக்ரைன் பகுதி மட்டுமே தற்போதைக்கு பாதுகாப்பான பகுதியாக இருந்து வருகிறது. இதற்கிடையே, உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷ்யா மீது ஆத்திரமடைந்துள்ள உலக நாடுகள் ரஷ்யாவை தனிமைப்படுத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளன. மேலும், உக்ரைனுக்கு நவீன ஆயுதங்களை சப்ளை செய்ய ஐரோப்பிய ஒன்றியம் நேற்று முடிவு செய்தது. அமெரிக்காவும் பல நவீன ஆயுதங்களை தருவதாக உறுதி அளித்துள்ளது. ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் ஆயுத உதவி வழங்கி வருகின்றன.இது ரஷ்யாவுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பேசிய ரஷ்ய அதிபர் புடின், ‘ஐரோப்பிய ஒன்றியம் ஆயுத உதவி செய்தால், விளைவும் மேலும் மோசமாகும்’ என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுமட்டுமின்றி, ரஷ்யாவின் மத்திய வங்கியை குறிவைத்து அமெரிக்கா நேற்று புதிய பொருளாதார தடையை கொண்டு வந்தது. இந்த தடையில் பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட பல உலக நாடுகள் இணைய உள்ளதாக தெரிவித்தது. இதன் காரணமாக, ரஷ்யாவில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்கு விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. ஏடிஎம், கிரெடிட் கார்டுகள் எதுவும் செல்லாததால் மக்கள் பணத்தை வைத்து செலவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் ஏடிஎம் மையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.இந்த விவகாரத்தில் ரஷ்யாவுக்கு மேலும் நெருக்கடி தரும் விதமாக, ஐநா பொதுச் சபை மூலமாகவும் நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தலைமையில் உலக நாடுகள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. பெருமளவில் தடைகள் விதிக்கப்பட்டு வரும் நிலையிலும், இனி எவ்வளவு தடை வந்தாலும் அதை சமாளிக்க ரஷ்யா தயாராக இருப்பதாக அந்நாட்டு அரசு கூறி உள்ளது. தங்களின் பதில் நடவடிக்கையாக இங்கிலாந்து உள்ளிட்ட 36 நாடுகளின் விமான நிறுவனங்களுக்கு ரஷ்யா தடை விதித்துள்ளது. எனவே இவ்விவகாரம் அடுத்தடுத்த நாட்களில் மேலும் மோசமடைய வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.5 லட்சம் பேர் அகதிகளாகினர்: அகதிகளுக்கான ஐநா ஆணையத்தின் தலைவர் பிலிப்போ கிராண்டி தனது டிவிட்டரில், ‘’உக்ரைனில் இருந்து இதுவரை போலந்துக்கு 2,81,000, ஹங்கேரிக்கு 84,500, மால்டோவாவுக்கு 36,400, ருமேனியாவுக்கு 32,500, ஸ்லோவாகியாவுக்கு 30,000 என மொத்தம் 5 லட்சத்துக்கு மேற்பட்டோர் உக்ரைனில் இருந்து புலம் பெயர்ந்துள்ளதாக ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் ஷாபியா மந்தூ கூறினார்,‘’  என்று பதிவிட்டுள்ளார்.பெலாரசில் தூதரகத்தை மூடியது அமெரிக்கா: உக்ரைனுக்கு எதிரான போரில் பெலாரஸ் படைகளும் இணைய வாய்ப்பிருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தகவலைத் தொடர்ந்து, பெலாரஸ் நாட்டில் உள்ள தூதரகத்தை அமெரிக்கா நேற்று திடீரென மூடியது.  மேலும், ரஷ்யாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தங்கள் நாட்டு மக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு பிரச்னை காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அமெரிக்கா கூறி உள்ளது.கீவ்வில் இருந்து வெளியேறலாம்: தலைநகர் கீவ்வை ரஷ்ய ராணுவம் சுற்றிவளைத்துள்ளது. அனைத்து பாலங்களும் தகர்க்கப்பட்டுள்ளதால், மக்கள் தலைநகரை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்நகர மேயர் தெரிவித்தார். இதற்கிடையே, தலைநகர் கீவ்வில் இருந்து மக்கள் சுதந்திரமாக வெளியேறலாம் என்று ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. இதன்படி நகரத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் கிவ்-வாசில்கிவ் நெடுஞ்சாலை வழியாக ‘சுதந்திரமாக’ வெளியேறலாம் என்றும், இந்த பாதை மக்களுக்காக திறக்கப்படுவதுடன், மிகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கும் என்று ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.உயிர் வேண்டுமானால் ஓடிவிடுங்கள்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று தனது உரையில், ‘‘உக்ரைனை உடனடியாக ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக சேர்க்க மேற்கத்திய நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரஷ்ய ராணுவ வீரர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள உக்ரைனை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும். போர் தீவிரமடைந்துள்ளதால், ரஷ்யாவுக்கு எதிராக போரிட விரும்பும் ராணுவ அனுபவம் உள்ள கைதிகளை விடுதலை செய்ய நாங்கள் முடிவு செய்துள்ளோம்’ என்றார்….

The post போர் நிறுத்த பேச்சுவார்த்தை தொடங்கிய போதிலும் உக்ரைனில் 5வது நாளாக தீவிர தாக்குதல்: ஆயுத உதவியால் விளைவு மோசமாகும் என புடின் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Ukraine ,Putin ,Kharkiv ,Belarus ,
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...