×

க.பரமத்தி ஒன்றியம் குப்பம் கிராமத்தில் ஆய்வு ஒரு ஆண்டுக்குள் அனைவருக்கும் இலவசமாக வீடு கட்டி தரப்படும்-டொம்பர் இனமக்களிடம் கலெக்டர் உறுதி

கரூர் : கரூர் மாவட்டத்தில் வேட்டமங்கலம் ஊராட்சி, குந்தாணிபாளையத்தில் கூடாரம் அமைத்து குடியிருந்து கொண்டு, வெளியூர்களுக்கு சென்று சர்க்கஸ், கயறு மேல் நடப்பது, கிடைத்த கூலி வேலைகளை செய்து வாழந்து வரும் கலைக் கூத்தாடிகள் என சொல்லப்படும் டொம்பர் இன மக்கள் 94 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.தமிழக முதல்வர் ஏழை மக்கள் மேம்பாடு அடையும் வகையில் தேவையான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டதன் அடிப்படையில், க.பரமத்தி ஒன்றியம் குந்தாணிபளையத்தில் 94 குடும்பங்களை சேர்ந்த 358 நபர்கள் வசிப்பதற்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க முடிவெடுத்து, கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 11ம்தேதி அன்று அமைச்சரால் இலவச வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டது. க.பரமத்தி ஒன்றியம் குப்பம் கிராமத்தில் டொம்பர் இன மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கியதால், அவர்களின் 50ஆண்டு கால நாடோடி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்ட அனைவருக்கும் அரசின் திட்டத்தின் கீழ் இலவசமாக வீடு கட்டித் தரவும், அந்த பகுதியில் மின்சாரம், சாலை, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் எனவும் அமைச்சர் செந்தில்பாலாஜி உத்தரவிட்டதன் அடிப்படையில, தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து அந்த பகுதி மக்களுடன் கலந்துரையாடினார். அவர்களின் கூடாரங்களுக்கு சென்று பார்வையிட்ட கலெக்டர், ஒரு ஆண்டுக்குள் உங்கள் அனைவருக்கும் இலவசமாக வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படும், இந்த பகுதியிலேயே ஆயத்த ஆடை உற்பத்தி தொழிலகம் அமைத்து அதில் உங்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கித்தர நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும், உங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்பாமல், அரசுப்பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும். குறிப்பாக, பெண் குழந்தைகளை 21வயதுக்கு முன்பு திருமணம் செய்து வைக்காமல் அவர்களை கல்லூரி வரை படிக்க வைக்க வேண்டும் என்ற கோரிக்கையினை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உங்களுக்கு வைக்கிறேன் என கலெக்டர் தெரிவித்தார்.அப்போது, டொம்பர் இன மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, இந்த பகுதிக்கு நல்ல பெயர் சூட்டித் தருமாறு மாவட்ட கலெக்டரை கேட்டுக் கொண்டனர். அதற்கு கலைஞர் நகர் என்ற பெயரை பரிந்துரைத்த கலெக்டர், கலைஞர் என்ற சொல் தமிழக முன்னாள் முதல்வரையும் குறிக்கும், கலைஞர்களான உங்களையும் குறிக்கும் எனவே, கலைஞர் நகர் என்ற பெயர் நீங்கள் வசிக்கும் பகுதிக்கு பொருத்தமாக இருக்கும் என்றார். டொம்பர் இன மக்கள் வசிக்கும் இந்த பகுதிக்கு ரூ. 2லட்சம் மதிப்பில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளும், ரூ. 9.98லட்சம் மதிப்பில் 30ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலை தொட்டி அமைக்கும் பணிகளும், ரூ. 3.50லட்சம் மதிப்பில் நீரேற்றும் மோட்டார் அமைக்கும் பணிகளும், தலா ரூ. 5லட்சம் மதிப்பில் ஆண்கள், பெண்களுக்கான கழிப்பறை கட்டும் பணிகளும் நடைபெற்று வருகிறது. மேலும், சூரிய மின்சக்தியில் இயங்கும் தெரு விளக்குகளும் அமைத்து தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த நிகழ்வின் போது, திட்ட இயக்குநர் மந்திராச்சலம், செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரமேஸ்வரன், செல்வி உட்பட அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர்….

The post க.பரமத்தி ஒன்றியம் குப்பம் கிராமத்தில் ஆய்வு ஒரு ஆண்டுக்குள் அனைவருக்கும் இலவசமாக வீடு கட்டி தரப்படும்-டொம்பர் இனமக்களிடம் கலெக்டர் உறுதி appeared first on Dinakaran.

Tags : Kuppam ,Paramathi Union ,Dombar ,Karur ,Vettamangalam ,Karur district ,Kundanipalayam ,
× RELATED ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விலை கிடு...