×

23 ஆண்டுகால வாழ்க்கை பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய உங்களில் ஒருவன் புத்தகத்தை ராகுல் இன்று வெளியிடுகிறார்: பல்வேறு கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு

சென்னை: 1953ம் ஆண்டு முதல் 1976ம் ஆண்டு வரையிலான 23 ஆண்டுகால வாழ்க்கையை பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய ‘உங்களில்  ஒருவன்’ என்ற புத்தகம் வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தகத்தை வெளியீடுகிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் தொடர்பாக எழுதிய  ‘உங்களில் ஒருவன்’ முதல் பாகம் புத்தகம் வெளியீட்டு விழா நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமையேற்கிறார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு முன்னிலை வகிக்கிறார். திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி  வரவேற்புரையாற்றுகிறார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி புத்தகத்தை வெளியிடுகிறார். பின்னர், நிகழ்வில் சிறப்புரையாற்றுகிறார். இந்த விழாவில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர்-ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பிக்கின்றனர். இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்புரை வழங்குகிறார். புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உட்பட திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் உட்பட சுமார் 1500க்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், 1953ம் ஆண்டு முதல் 1976ம் ஆண்டு வரையிலான முதலான தனது 23 ஆண்டுகால வாழ்க்கையை பற்றி ‘உங்களில் ஒருவன்’ என்ற தலைப்பில் புத்தகமாகப் பதிவு செய்துள்ளார். இந்த புத்தகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சிறு வயது எண்ணங்கள், பள்ளிக்கால நினைவுகள், கலைஞரின் அன்பில் திளைத்த தருணங்கள், அரைக்கால் சட்டைப் பருவத்தில் இருவண்ணக் கொடியேந்தி இயக்கத்திற்காக இயங்கத் தொடங்கிய ஏற்றமிகு பொழுதுகள் உட்பட தனது அனுபவங்கள் குறித்து புத்தகமாக பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது….

The post 23 ஆண்டுகால வாழ்க்கை பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய உங்களில் ஒருவன் புத்தகத்தை ராகுல் இன்று வெளியிடுகிறார்: பல்வேறு கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Rahul ,Ujhilil Oruvan ,Chief Minister ,M.K. Stalin ,CHENNAI ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்குப் பிந்தைய...