×

நடுரோட்டில் மாநகர பேருந்தை நிறுத்தி பஸ் டே கொண்டாடிய மாணவர்கள்: 2 பேர் கைது

பெரம்பூர்: சென்னை கவியரசு கண்ணதாசன் நகரில் இருந்து நேற்று முன்தினம் காலை மாநகர பஸ் (த.எண்.64 கே) பிராட்வே நோக்கி புறப்பட்டது. மாதவரம் நெடுஞ்சாலையில் லட்சுமி அம்மன் கோயில் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, பெரம்பூர் பந்தர் கார்டன் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் சுமார் 20 பேர், அந்த பஸ்சை மறித்து, அதன் மீது ஏறி பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதை நடத்துனர் வேலு கண்டித்துள்ளார். அப்போது மாணவர்கள், கையில் வைத்திருந்த கேக்கை நடத்துனர் முகத்தில் பூசி ரகளையில் ஈடுபட்டனர். இதுபற்றி அவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்தார்.அதன்பேரில் செம்பியம் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். போலீசாரை பார்த்ததும் மாணவர்கள் தப்பி ஓடினர். பின்னர், நடத்துனரிடம் புகாரை பெற்று ரகளையில் ஈடுபட்ட மாணவர்களை தேடி வந்தார். இந்நிலையில், சிசிடிவி பதிவுகளை வைத்து, பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த கல்லூரி மாணவன் விஜய் (19) மற்றும், 17 வயதுடைய பிளஸ் 2 மாணவன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய இவர்களது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.   …

The post நடுரோட்டில் மாநகர பேருந்தை நிறுத்தி பஸ் டே கொண்டாடிய மாணவர்கள்: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Bus Day ,Perambur ,Chennai Kaviarasu Kannadasan Nagar ,Broadway ,
× RELATED பெங்களூருவில் இருந்து சென்னை...