- கிறிஸ்டோபர் நோலன்
- சிலியன் மர்பி
- எமிலி பிளண்ட்
- மாட் டாமன்
- கேரி ஓல்ட்மன்
- ராபர்ட் டவுனி
- ஓப்பன்ஹீமர்
- கொலிவுட் செய்திகள்
- கொலிவுட் படங்கள்
கிறிஸ்டோபர் நோலன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் சிலியன் மர்பி, எமிலி பிளன்ட், மாட் டாமன், கேரி ஓல்ட்மேன், ராபர்ட் டௌனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் இந்த வருடத்தின் அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட பிரம்மாண்ட திரைப்படம் ‘ஓபன்ஹெய்மர்’. உலக சினிமா ரசிகர்கள் பலரும் எதிர்ப்பாத்த திரைப்படம் என்பதால் படம் வெளியீட்டுக்கு முன்பே அடுத்த ஒரு வாரத்திற்கு சாதாரண திரையரங்குகளிலும், ஐமேக்ஸ் உள்ளிட்ட சிறப்பு திரைகளில் அடுத்த ஒரு மாதத்திற்கு என டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்திருக்கின்றன. ‘அணுகுண்டின் தந்தை’ டாக்டர். ஜெ. இராபர்ட் ஓபன்ஹெய்மரின் பயோபிக் படமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
‘டிரினிட்டி’ முதலாவது அணுகுண்டு சோதனை (ஜூலை 16, 1945), இதற்கான ஆயத்தப் பணிகளும், அமெரிக்காவின் மேன்ஹேட்டன் புராஜெக்ட்டின் தலைவராக ஓபன்ஹெய்மர், அதைச் சுற்றி நிகழும் சம்பவங்களுமாக நகரும் கதை. சாதாரணமாக ஆராய்ச்சிக் கூடத்தில் உட்கார்ந்து வேதியியல் ஆராய்ச்சிகளை செய்ய சலித்துக் கொள்ளும் ஓபன்ஹெய்மர்(சிலியன் மர்பி), விரிவுரையாளர், தத்துவவியலாளர், இயற்பியல் வல்லுனர் என முன்னேறிக் கொண்டே செல்கிறார். ஹீரோஷிமா, நாகசாகி தாக்குதல், அதனால் ஓபன்ஹெய்மரின் மனநிலை, இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஓபன்ஹெய்மர் சந்தித்த போராட்டங்கள், விசாரணைகள் அது சார்ந்த ஃபிளாஷ்பேக் காட்சிகள் என அத்தனையுமாக நான்கு காலங்களில் நிகழும் கதையாக நகர்கிறது.
கிளைமாக்ஸ் என்ன என்பது மீதிக் கதை. வழக்கமாகவே கிறிஸ்டோபர் நோலன் படங்கள் என்றாலே இருக்கும் அத்தனை இயற்பியல் புத்தகங்களையும் புரட்டிவிட்டு செல்ல வேண்டிய கட்டாயம் உண்டாகும். இதற்கு முன் வெளியான ‘மெமென்டோ’, ‘இன்செப்ஷன்’, ‘இன்டர்ஸ்டெல்லர்’, ‘டெனெட்’ என நோலனின் அத்தனைப் படங்களும் அப்படித்தான். ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்தப் படம் விதிவிலக்கு. இத்தனைக்கும் படமே அணுக்கரு அறிவியல், அணுக்கரு தந்தையின் பயோபிக் என இருப்பதால் அப்படியான மனநிலை உண்டாவதில் ஆச்சர்யமில்லை. ஆனால் படம் முழுக்கவே வழக்கு விசாரணைகள் அதற்கான ஃபிளாஷ்பேக்குகள், என 80% திரைப்படம் டிராமாவாகவே செல்லும் என்பதால் ஓரளவு ஆங்கிலம் படித்துப் புரிந்துகொள்ளத் தெரிந்தாலே இந்தப் படம் புரியும், ஆமாம் சப்டைட்டிலும் கூட பெரிதாகவே பயன்படுத்தியிருக்கிறார்கள்.
படத்தின் ஒரு காட்சியிலும் கிராபிக் இல்லாத ரியாலிஸ்டிக் மேக்கிங் அனுபவம் கொடுக்க தன்னால் முடிந்த அத்தனை போராட்டங்களையும் எடுத்திருக்கிறார் கிறிஸ்டோபர் நோலன். படத்தின் முக்கிய மையப்புள்ளிக் காட்சியான ‘டிரினிட்டி’ அணுகுண்டு சோதனையை முறைப்படி ஐ.நா’வின் ஒப்புதல் பெற்று, எந்தெந்த வாசல்களையெல்லாம் தட்ட முடியுமோ தட்டி அந்நிகழ்வை படத்திற்காக அப்படியே மீண்டும் உருவாக்கியிருக்கிறார் கிறிஸ்டோபர் நோலன். ஒளிக்கீற்று அலைகள் அதிர்வு, அணுக்கரு சிதறல்கள் என எதையும் கிராபிக் இல்லாமல் எப்படிக் கொண்டு வந்தார் என இப்போதே பல சினிமா ஆர்வலர்களும், ஆய்வாளர்களும் ஆராயத் துவங்கிவிட்டனர். படத்தின் இன்னொரு சிறப்பு சிலியன் மர்பியின் நடிப்புதான்.
தான் கதையின் நாயகன், நான் தான் ‘அணுகுண்டின் தந்தை’, நான் தான் ‘உலக அழிவின் துவக்கம்’ என்னும் புரிதல் உண்டாகும் இடத்தில் அவர் கண்களில் தோன்றும் ஈரமும், நிற்கதியான மனநிலையும், போராட்டமுமாக ஹெய்மர் இருந்தால் இப்படித்தான் இருந்திருப்பார் என முழுமையாகவே நம்மை நம்ப வைத்துவிடுகிறார். அடுத்து ஹெய்மரின் மனைவி கேத்தரினின் பாத்திரத்தில் நடித்திருக்கும் எமிலி பிளன்ட், ஸ்டிராஸ் பாத்திரத்தில் ராபர்ட் டௌனி, மாட் டாமன், என அத்தனைப் பேரும் நம்மை ஹெய்மர் காலத்திற்கே கொண்டு செல்கிறார்கள்.
ஹொய்டே வான் ஹொய்டிமாவின் ஒளிப்பதிவு நம்மை ரியலிஸ்டிக் அணுகுண்டு சோதனை காட்சியமைப்பிற்குள் கடத்துவதும், கருப்பு – வெள்ளை ஃபிளாஷ்பேக் காட்சிகளின் ஆழத்தில் மூழ்கடிப்பதும் என மேஜிக் காட்டுகிறது. இதில் லுத்விக் கோரன்ஸன் இசை படம் துவங்கும் போது மெல்லிய இழையோடிய மனநிலையை தட்டிவிட்டுவிட்டு படிப்படியாக படத்தின் ஓட்டத்தில் வேகம் பிடிப்பதும், நம் இதயத்தின் துடிப்பை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றி, பெருவெடிப்பிற்கு நம்மை தயார்படுத்துவதுமாக, ஓரிடத்தில் மௌனத்தை பின்னணியாக்கி கலந்திருக்கிறார். வெளிச்சமும், சப்தமுமாக ஒரு சேர கண்களையும், காதுகளையும் கட்டிப் போடுகிறார்கள் இருவரும்.
‘இந்த உலகின் அழிப்பாளன் நான்’, ‘இந்த உலகமும், இந்த உலக மக்களும் உன்னை மன்னிக்க மாட்டார்கள் ஹெய்மர்’, ‘ நான் நம்புகிறேன் நாம் செய்து விட்டோம்’ இப்படி படத்தின் சில வசனங்கள் நம்மையும் மீறிய ஒரு வேதனையை உண்டாக்கிறது. நமக்கே இவ்வளவு மனநிலை அழுத்தத்தை இந்தப் படம் கொடுக்கும் பொழுது, ஜப்பான் நாட்டு மக்களுக்கு இன்னும் எவ்வித அழுத்தமான மனநிலையை உண்டாக்கும் என்பதும் புரிகிறது. மொத்தத்தில் அணுகுண்டு, ஆயுதங்கள் எல்லாம் வேண்டாம், உலக அமைதிதான் முக்கியம் எனச் சொல்லிக்கொண்டே எங்கோ ஏதோ ஒரு வல்லரசு அழிவுக்கான எல்லா இரகசிய வேலைகளையும் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் இதெல்லாம் வேண்டாம் என ஹெய்மரின் பார்வைகளிலேயே இயற்பியல் வகுப்பு மட்டுமின்றி, மனித வகுப்பும் எடுத்திருக்கும் ‘ஓபன்ஹெய்மர்’ நிச்சயம் இந்த வருடத்தின் சிறந்த படமாக பல ஆஸ்கர்களை சொந்தமாக்கும் என்பதில் ஐயமில்லை.
The post ஓபன்ஹெய்மர் – திரைவிமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.