×

சேலம் மண்டலத்தில் தனித்து போட்டியிட்ட பாமகவுக்கு விழுந்த சம்மட்டி அடி: சுயேச்சைகளை கூட நெருங்க முடியவில்லை

சேலம்: சேலம் மண்டலத்தில் தனித்து போட்டியிட்ட பாமகவுக்கு மக்கள் சம்மட்டி அடியை கொடுத்துள்ளதால் அக்கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். மாநகரில் சுயேச்சைகளை கூட எட்ட முடியாத நிலைக்கு அக்கட்சி தள்ளப்பட்டுள்ளது.  தமிழகத்தில் 2021ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக சேலம் மேற்கு, மேட்டூர் தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதேபோல் தர்மபுரி மாவட்டத்தில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, பென்னாகரம் தொகுதியிலும், வெங்கடேஸ்வரன் தர்மபுரி தொகுதியிலும் வெற்றி பெற்றனர். சேலம் மண்டலத்தில் பல தொகுதிகளில் அக்கட்சியால் அதிமுக வெற்றி பெற்றது.இந்நிலையில் கடந்தாண்டு சேலத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அதிமுக கூட்டணி தங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக பேசியதும், இனிமேல் தனித்து மட்டுமே களம் காண்போம் என்று அறிவித்ததும் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து களமிறங்க பாமகவினர் ஆயத்தமாகினர். இதில் சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 59 வார்டுகளுக்கு பாமக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பதற்கு பல மாதங்கள் முன்பே வேட்பாளர்களை ரகசியமாக தேர்வு செய்தது பாமக. இவர்கள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் என்று அனைத்து இடங்களுக்கும் சென்று முக்கிய நிர்வாகிகளையும், பொதுமக்களையும் சந்தித்து வாக்கு சேகரித்தனர். தேர்தலுக்கு சில நாட்கள் முன்பு சேலத்தில் பிரசாரம் செய்த அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி, தனித்து போட்டியிடும் பாமக அனைத்து கட்சிகளுக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கும் என்றார். ஆனால் பாமகவின் இந்த கணக்கை எல்லாம் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தவிடு பொடியாக்கி உள்ளது. சேலம் மண்டலத்தில் சட்டசபை தேர்தலின்போது அக்கட்சிக்கு வாக்களித்த மக்கள் இப்போது பலத்த சம்மட்டி அடியை கொடுத்துள்ளனர்.சேலம் மாநகராட்சியில் 55வார்டுகளில் பாமக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளிலும் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே பாமக வெற்றி பெற்றுள்ளது. பல நகராட்சி வார்டுகளில் டெபாசிட் காலியாகி உள்ளது. இதேபோல் பேரூராட்சி வார்டுகளிலும் சொற்ப அளவிலேயே பாமக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இது மட்டுமன்றி மாநகராட்சி, நகராட்சிகளில் அக்கட்சி வேட்பாளர்கள் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே வாக்குகளை பெற்றிருப்பது நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மண்டலத்தில் மட்டும் பாமகவுக்கு 4 எம்எல்ஏக்கள் உள்ளனர். தற்போது சேலம் மேற்கு தொகுதி பாமக வசம் உள்ளது. இந்த தொகுதியில் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரும்பாலான வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் கூட பாமக வேட்பாளர்கள் 300க்கும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளனர். மாநகரில் 3 பேர் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்ற நிலையில், 2 வார்டுகளில் சுயேச்சைகள் இரண்டாமிடம் பெற்றுள்ளனர். இவர்களின் நிலையை கூட பாமகவால் எட்டமுடியவில்லை என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட தர்மபுரி தொகுதியும் பாமக வசமே உள்ளது. அங்கும் பல வார்டுகளில் பாஜ, மநீம கட்சிகளின் வேட்பாளர்கள் பெற்ற வாக்குளை விட குறைவான வாக்குகளையே பாமக பெற்றுள்ளது. நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் இந்த நிலையே ஏற்பட்டுள்ளது. இது அக்கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. …

The post சேலம் மண்டலத்தில் தனித்து போட்டியிட்ட பாமகவுக்கு விழுந்த சம்மட்டி அடி: சுயேச்சைகளை கூட நெருங்க முடியவில்லை appeared first on Dinakaran.

Tags : Sammati ,Bamaku ,Salem ,Bamakwa ,Sammatti ,
× RELATED குற்றப்பின்னணி விமர்சனம்