×

புல்லட் சாமிக்கு ஆட்டம் காட்டும் அதிகாரிகளின் ரகசிய திட்டத்தை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘புதுச்சேரியில் முளைத்துள்ள புது பிரச்னையால் ஆளும் அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளதாமே, அப்படியா…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரி விவிஐபியாக புல்லட்சாமி பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறார். இலாகா ஒதுக்கீட்டில் தாமரை தரப்பு நெருக்கடி கொடுத்தது. நியமன  எம்எல்ஏக்கள், ராஜ்ய சபா எம்பி என தொடர்ந்தது. அனைத்தையும் சரி செய்துவிட்டு அரசு நிர்வாகத்தை ஆரம்பிக்கும்போது ஒன்றியத்தின் தலைமை அதிகாரி குடைச்சல் அளிக்க துவங்கினார். கொரோனா நிவாரண நிதி உள்பட புல்லட்சாமியால் அறிவித்த பல்வேறு திட்டங்களுக்கு  நிதி இல்லை எனக்கூறி கையை விரித்துவிட்டார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என புல்லட்சாமி கட்சியினர் கோரிக்கை வைத்தார்களாம். உடனடியாக விவிஐபியான டாக்டர் இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட்டு பிரச்னையை சரி செய்தாராம். தற்போது புதுக்கதையாக புதுச்சேரியில் உள்ள சில அரசுத்துறைகள் அரசுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் சில ரகசிய திட்டங்களை அதிகாரிகள் கையில் எடுத்துள்ளார்களாம். எதற்கு எடுத்தாலும் நிதியை காரணம் காட்டி தடுப்பது அல்லது கோப்புகளை செயலர் மட்டத்திலேயே திருப்பிவிடுவது போன்ற காரணங்களால் அரசின் செயல்பாடுகளில் தாமதம் ஏற்பட்டது. இதுதொடர்பாக டாக்டரான விவிஐபியிடம் புல்லட்சாமி தெரிவித்தாராம்.  ஆனால், தாமரையை அந்த பிரதேசத்தில் மலரவிடும் வரை இதுபோன்ற சிக்கல்களை ஏற்படுத்தி மண்டியிட வைப்பதுதான் முக்கிய பணியாம். அது முடியும் வரை புல்லட்சாமிக்கு பிரச்னையை அதிகாரிகள் வடிவில் கொடுத்து கொண்டே இருப்பதுதான் டெல்லி தலைமை அளித்துள்ள சீக்ரெட் பிளானாம். இதனால பிரச்னைகளை எளிதாக தீர்வு காணவும் நேரிடையாக நிதி செயலரை அனைத்து பிரச்னைகளையும் தீர்த்து கொள்ளும்வகையில் துறையின் செயலர்களுக்கு நிதி  தொடர்பாக தன்னிச்சையாக முடிவு எடுக்காத வகையில் கிடுக்கிப்பிடி போட்டு இருக்காங்க. ஆனால், புல்லட்சாமி தொடர்ந்து முரண்டு பிடிப்பதால், தாமரை இறுக்கி பிடிக்க முடிவு செய்துள்ளதாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘தூங்கா நகர பல்கலையில் பல கோடி ஊழல் நடந்து இருக்காமே, உண்மையா…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘தூங்கா நகர பல்கலைக்கழகம் பரபரப்பிற்கு பஞ்சமில்லாதது. இங்குள்ள ஆண்கள்  விடுதியில் கடந்த இலைக்கட்சி காலத்தில் ரூ.2 கோடியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டம் தீட்டி, சுத்திகரிப்பு நிலையமும் பெயரளவில் அமைக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை செயல்படாமலேயே இருக்காம். ஆனால், இதற்கு பில் செட்டில் செய்யப்பட்டதுதான் உச்சக்கட்ட அதிர்ச்சியான விஷயம். முறையாக பணிகள் மேற்கொண்ட பல நிறுவனங்களுக்கு பல ஆண்டுகளாக பில் தொகை வழங்கப்படாத  நிலையில், செயல்படாத சுத்திகரிப்பு நிலையத்திற்கு இலைக்கட்சி ஒப்பந்ததாரருக்கென பழைய ஆதரவு அதிகாரிகள் உறுதுணையோடு பில் செட்டில் செய்ய வைத்தார்களாம். இதுதான் பல்கலை வட்டாரம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.  ரூ.20 லட்சம் மட்டுமே செலவாகக்கூடிய சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.2 கோடி வரை கணக்கு காட்டப்பட்டுள்ளதாம். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக் கோரி, கோரிக்கை மனுக்கள் அரசு உயரதிகாரிகளுக்கு தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘செத்தவங்களுக்கு கூட சம்பளம் போடும் மாவட்டம் எதுங்க…’’ என்று சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.‘‘வெயிலூர் மாவட்டம் காட்டுப்பாடி தாலுகாவுல பொன்னான ஆறு ஓடுற ஏரியாவுக்கு பக்கத்துல உயிரெழுத்துகள்ல 2வது எழுத்துல தொடங்கி பள்ளின்னு முடியுற ஊராட்சி இருக்குது. இதுல வீரப்பெண்மணி என்று போற்றக்கூடிய ராணி பெயரை கொண்ட பெண் செயலர் கடந்த 20 வருஷத்துக்கு மேலாக பணிபுரிஞ்சு வந்திருக்காங்க. சமீபத்துலதான் இவங்க பணியிடமாற்றமாகி வேற ஒரு ஊர் ஆட்சிக்கு போனாங்களாம். இவங்க பணியிடமாற்றம் ஆகிப்போன பின்னாடித்தான் அவங்க செஞ்ச கோல்மால் வெளிச்சத்துக்கு வந்திருக்குது. இந்த ஊராட்சியில 45 வீடுகள் தான் இருக்குதாம். இதுல 4 மலை வாழ்மக்கள் குடும்பங்கள் இருக்குதாம். ஆனால், இந்த ஊர் ஆட்சி செயலாளரு, மலைவாழ் மக்கள் சுமார் 80 பேர் இருக்குறாங்கன்னு அரசுக்கு கணக்கு காட்டியிருக்காராம். இல்லாதவங்களை இருக்குறதாக கணக்கு காட்டியதுல கிடைக்கிற சலுகைகளை, அந்த பெண் செயலர் அனுபவிச்சிட்டு வந்திருக்காங்க. மேலும் இந்த ஊராட்சியில் உள்ளாட்சி அமைப்புகள் இல்லாமல் இருந்த காலகட்டத்துல, ரூ.11 லட்சத்துக்கு பைப் லைன் பேட்ச் ஒர்க் செஞ்சதாகவும், அரசு நூலகத்துல வேலை செஞ்சுகிட்டிருந்தவரு இறந்த பிறகும் அந்த நூலகத்துல இருந்து அவர் பெயர்ல சம்பள பணம் போயிருக்குறதாகவும் புகார் எழுந்திருக்குது. விளையாட்டு மைதானம் அமைக்காமலேயே, அமைச்சதாகவும், இல்லாத சுடுகாட்டிற்கு சாலை போட்டதாக கணக்கு காட்டி இருக்காங்களாம். மேலும் பிரதமர் வீடு கட்டும் திட்டத்துலயும் கட்டாத, வீடுகளை கட்டியதாக கணக்கு காட்டியிருக்காங்களாம். பெண் செயலர் பணியிடமாற்றம் ஆனாலும், அவங்க வீட்டுக்காரர் தான் இப்ப அந்த ஊர் ஆட்சியில ஆட்டம் போடுறாராம்…’’ என்றார் விக்கியானந்தா. …

The post புல்லட் சாமிக்கு ஆட்டம் காட்டும் அதிகாரிகளின் ரகசிய திட்டத்தை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Sammy ,Puducherry ,Uncle ,Peter ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு