×

ஆவடி, பெரியபாளையம் பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து 62 சவரன் நகை கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

ஆவடி: ஆவடி அடுத்த வெள்ளானூர் பாரதி நகரைச் சேர்ந்தவர் சங்கரன். மனநிலை பாதிக்கப்பட்டவர். கடந்த 15 ஆண்டுக்கு முன்பு குடும்பத்தை பிரிந்து விட்டார். இவரது மனைவி மாலதி(55). இவர்களது மகள் லதா(28), ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 14ம் தேதி லதாவுக்கு வேலூரை சேர்ந்த சர்வேஸ் என்பவருடன் திருமணம் நடந்தது. கணவருடன் வேலூரில் வசிக்கிறார். மாலதி மட்டும் வீட்டில் தனியாக வசிக்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலதி வீட்டை பூட்டிவிட்டு அதே பகுதி விஜயலட்சுமி நகரில் வசிக்கும் தம்பி நாகராஜ்(52) வீட்டுக்கு சென்றார். பின்னர், இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 30 சவரன் தங்க நகைகள், ஒரு சவரன் வைரத்தோடு, ₹50 ஆயிரம் ஆகியவை கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. தகவலறிந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கைரேகை நிபுணர்கள் உதவியுடன் வீட்டின் கதவு மற்றும் பீரோ ஆகியவற்றில் பதிவான கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் புகாரின்படி இன்ஸ்பெக்டர் ராஜிவ் பிரின்ஸ் ஆரோன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதி கண்காணிப்பு கேமராக்களில் பதிவான உருவங்களை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே தண்டுமேடு கிராமத்தை சேர்ந்தவர் ராமுலு. இவர் சில வருடங்களுக்கு முன்பு உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். இவரது, மனைவி ராஜி(50). இவர்களது மகன் உதயகுமார், போரூரில் உள்ள தனியார் கம்பெனியில் தங்கி பணியாற்றி வருகிறார். ராஜி தண்டுமேடு கிராமத்தில் தனியாக வசித்து வருகிறார்.இந்நிலையில், ராஜி மறைமலை நகரில் தனது தம்பி தேமுதிக சார்பில் கவுன்சிலர் பதவிக்கு தேர்தலில் போட்டியிடுவதால், அவரை பார்த்து விட்டு வர தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பு சென்றார். ராஜியின் வீட்டில் நேற்று முன்தினம் இரவு கொள்ளை நடந்திருப்பதாக அக்கம் பக்கத்தினர் அவருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர். இதையடுத்து ராஜி வீட்டில் வந்து பார்த்தபோது வீட்டின் வெளியே உள்ள இரும்பு கேட்டின் பூட்டை உடைத்து, பின்னர் கதவும் உடைக்கப்பட்டு உள்ளே சென்று பீரோவை கடப்பாரையால் நீக்கி கொள்ளையர்கள் உடைத்து 32 சவரன் தங்க நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. புகாரின்படி பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக திருவள்ளூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் சென்று நின்றது. மேலும், அப்பகுதியை சேர்ந்த சிலரை சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்….

The post ஆவடி, பெரியபாளையம் பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து 62 சவரன் நகை கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Tags : Savaran ,Aavadi, Periyapalayam ,Aavadi ,Sankaran ,Vellanur Bharati Nagar ,Sawaran ,Avadi ,Periyapalayam ,Dinakaran ,
× RELATED 195 கிலோ கஞ்சா அழிப்பு