×

விடுமுறையை கொண்டாட ஒகேனக்கல், ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்-பரிசல் சவாரி செய்து மகிழ்ச்சி

பென்னாகரம் : தமிழகத்தின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றான ஒகேனக்கல்லுக்கு தினந்தோறும் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. நேற்று முன்தினம், தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதையொட்டி அனைத்து கடைகள்,  வணிக நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பொது தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் அனைத்து இதர நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும், 100 சதவீதம் வாக்களிக்கும் பொருட்டு சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை வழங்கப்பட வேண்டும். விடுமுறை தினத்திற்கான சம்பளம் ஏதும் பிடித்தம் செய்யக்கூடாது என உத்தரவிடப்பட்டிருந்தது. இதனால் சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை விடப்பட்டதால், நேற்று ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் பரிசல் சவாரி செய்தும், அருவிகளில் குளித்தும், ஒகேனக்கல்லில் உள்ள மெயினருவி, சினி அருவி, ஐவர்பாணி, ஐந்தருவி உள்ளிட்ட இடங்களை கண்டு ரசித்தும் மகிழ்ந்தனர். அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க, ஒகேனக்கல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அதே போல், ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில், நேற்று சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குபதிவு நேற்று முன்தினம் முடிந்த நிலையில், ஏற்காட்டில் காலை முதலே சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்குள்ள அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ஏரிப்பூங்கா, சூழல் பூங்கா, படகு இல்லம், பக்கோடா பயிண்ட், கிளியூர் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களை கண்டுகளித்தனர். பின்னர், குடும்பத்துடன் உணவை சாப்பிட்டு, பூங்காவில் விளையாடி பொழுதை கழித்தனர். தொடர்ந்து ஏரியில் படகில் சென்று உற்சாகமடைந்தனர். திரளான சுற்றுலா பயணிகள் வந்ததால், அனைத்து கடைகளிலும் வியாபாரம் கனஜோராக நடந்தது. அதிக வாகனங்கள் வந்ததால் போக்குவரத்து பாதிப்பை சரிசெய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.இதே போல், இடைப்பாடி அருகே பூலாம்பட்டி, நெருஞ்சிப்பேட்டை நீர்மின் கதவணையில், நேற்று சுற்றுலா பயணிகள் டெம்போ, கார் மற்றும் டூவீலர்களில் வந்தனர். காவிரி அழகை ரசித்து, விசைப்படகில் உல்லாச சவாரி செய்து மகிழ்ந்த அவர்கள், அருகில் உள்ள மாட்டுக்காரர் பெருமாள் கோயில், மூலப்பாறை பெருமாள் கோயில், நீர்மின் கதவணை பாலம் பகுதியில் சென்று குடும்பம், குடும்பமாக படம் எடுத்து மகிழ்ந்தனர்….

The post விடுமுறையை கொண்டாட ஒகேனக்கல், ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்-பரிசல் சவாரி செய்து மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Ogenakal ,Pennagaram ,Tamil Nadu ,Ogenakkal ,Karnataka ,Andhra Pradesh ,Kerala ,
× RELATED நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்கள்...