×

தர்மபுரி அருகே ஓட்டிச்சென்ற பஸ்சை வழியில் நிறுத்தி ஓட்டு போட்டுவிட்டு வந்த டிரைவர்

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி, பொ.மல்லாபுரம், கடத்தூர் ஆகிய பேரூராட்சிக்கான தேர்தலில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். பொ.மல்லாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 8வது வார்டு விடிவெள்ளி நகரைச் சேர்ந்தவர் தர்(26). தனியார் பஸ் டிரைவரான இவர், பாலக்கோட்டில் இருந்து தர்மபுரி, கடத்தூர், பொ.மல்லாபுரம், பாப்பிரெட்டிப்பட்டி வழியாக சேலம் செல்லும் பஸ்சில் பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் தர், பாலக்கோட்டில் இருந்து பஸ்சை இயக்கினார். தேர்தல் கால விடுமுறை என்பதால் பஸ்சில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பாலக்கோட்டில் இருந்து தர்மபுரி வந்தடைந்து, அங்கிருந்து கடத்துரை தாண்டி பொ.மல்லாபுரம் வந்ததும், பேரூராட்சி 8வது வார்டுக்குட்பட்ட பகுதியில் பஸ்சை நிறுத்திய தர், கண்டக்டர் மற்றும் பயணிகளிடம் அனுமதி பெற்று கீழே இறங்கினார். பின்னர், அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடிக்கு விரைந்தார். அங்கிருந்த அலுவலர்களிடம் பூத் சிலிப்பை காண்பித்து வாக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து ஜனநாயக கடமையாற்றிய திருப்தியில், ஓடிச்சென்று பஸ்சில் ஏறி வழித்தடத்தில் இயக்கினார். அவர், வழியில் பஸ்சை நிறுத்தி வாக்களித்து விட்டு மீண்டும் பஸ்சை எடுத்துச் செல்லும் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.இதுகுறித்து தரிடம் கேட்டபோது, ‘‘பாலக்கோட்டில் இருந்து தர்மபுரிக்கு சுமார் 25 கி.மீ., அங்கிருந்து கடத்தூருக்கு 15 கி.மீ., பொ.மல்லாபுரத்தை அடைய 15 கி.மீ., பாப்பிரெட்டிப்பட்டிக்கு செல்ல 15 கி.மீ., அங்கிருந்து சேலம் சென்றடைய சுமார் 45 கி.மீ., ஆக மொத்தம் 115 கி.மீ., செல்ல வேண்டும். பின்னர், அதே வழியில் பாலக்கோடு திரும்பி வர வேண்டும். அதற்குள் வாக்குப்பதிவிற்கான நேரம் முடிந்து விடும் என்பதால், பணி நேரத்திலேயே வாக்களிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. அவசர கதியில் வாக்களித்தாலும் ஜனநாயக கடமையாற்றியதில் திருப்தி,’’ என்றார்.ஓட்டிச்சென்ற பஸ்சை வழியில் நிறுத்தி ஜனநாயக கடமையாற்றிய டிரைவருக்கு, பொதுமக்களிடையே பாராட்டு குவிந்து வருகிறது….

The post தர்மபுரி அருகே ஓட்டிச்சென்ற பஸ்சை வழியில் நிறுத்தி ஓட்டு போட்டுவிட்டு வந்த டிரைவர் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Paprirettipatti ,Dharmapuri district ,Po.Mallapuram ,Kaduur ,
× RELATED மூதாட்டி திடீர் சாவு