×

நீர்வளத்துறையில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகளின் நிலை என்ன?: மண்டல தலைமை பொறியாளர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை

சென்னை: நீர்வளத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளின் தற்போதைய நிலை என்ன என்பது தொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு மண்டல தலைமை பொறியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். நீர்வளத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் புதிதாக 6 இடங்களில் கதவணை அமைப்பது, தொகுதிக்கு ஒரு தடுப்பணை என 200 தடுப்பணைகள் அமைப்பது, 500க்கும் மேற்பட்ட ஏரி, குளங்களின் கொள்ளளவை மீட்பது உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் தொடர்பாக திட்ட அறிக்கை தயார் செய்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கடந்தாண்டில் காவிரியின் கட்டமைப்பை மறு கட்டுமானம் செய்வது, கல்லணை கால்வாய் புனரமைப்பு, ஓரத்தூரில் புதிய நீர்த்தேக்கம்  மற்றும் காட்டூர்-தட்டமஞ்சியில் புதிய நீர்த்தேக்கம் உட்பட ₹14 ஆயிரம் கோடியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.  தலைமை பொறியாளர்கள் சார்பில், ₹12,500 கோடியில் பல்வேறு திட்டப்பணிகளுக்கான அறிக்கை தயார் செய்து  நிதித்துறையிடம் பார்வையில் உள்ளது. இந்த பணிகள் பெரும்பாலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால் அந்த பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், டெண்டர் அவார்டு கமிட்டியில் உள்ள பணிகளுக்கும், திருத்திய மதிப்பீடுகளுக்கும் உடனடி ஒப்புதல் அளிக்க வேண்டும். அப்போது தான் இந்தாண்டிற்குள் உள்ள பணிகளுக்கான வேலைகளை முடிக்க முடியும் என்று கோரிக்கை வைத்தனர். இதை கவனமுடன் கேட்டுக்கொண்ட தலைமைசெயலாளர் இறையன்பு இப்பணிகளின் முக்கியத்துவம் கருதி அவற்றை நிறைவேற்றி தர தேவையான நடவடிக்கை எடுக்க நிதித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்….

The post நீர்வளத்துறையில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகளின் நிலை என்ன?: மண்டல தலைமை பொறியாளர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Zonal ,Chennai ,Water Resources Department ,Chief Secretary ,Thaoyanpu ,Dinakaran ,
× RELATED அனைத்து நீர்த்தேக்கங்களிலும் இருப்பு...