×

விஸ்வரூபம் எடுக்கும் நிலமோசடி வழக்கால் தேனிக்காரர் டென்ஷனில் இருப்பதை சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தேனிக்காரரும் அவரது குரூப்பும் செம டென்ஷனில் இருக்காங்களாமே, அப்படியா…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘தேனி மாவட்டத்தில் நடந்த நிலமோசடி வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. இவ்வழக்கில் கைதாகி உள்ள தேனி விவிஐபியின் தீவிர ஆதரவாளரான பறவை பெயரை முன்னால் கொண்டவரிடம், சிபிசிஐடி போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். துவக்கத்தில் நடந்த, அரசு அதிகாரிகளை மட்டுமே போட்டுக் கொடுத்தாராம். இருந்தாலும் பெரிய தலைகள் சொல்லாமல் அதிகாரிகள் செய்ய மாட்டார்களே என்ற சந்தேகத்தில் இருந்தாங்க. இதையடுத்து ஒரு நாள் போலீஸ் காவல் எடுத்து நடந்த விசாரணையில், ஏராளமான விஷயங்களை கக்கினாராம். இந்த அதிகாரிக்கு அந்த இலை தலைவருடன் ‘லிங்க்’. இவர் சொன்னால் அவர் செய்வார் என்று பல அரசியல் தலைவர்களையும் மாட்டி உள்ளாராம். இதனால் தேனி மாவட்ட இலைக்கட்சியினர் மத்தியில் நம்ம பெயரை சொல்லி இருப்பானோ… இல்ல அவன் பெயரை சொல்லி இருப்பானோ என்ற கலக்கத்தில் இருக்காங்களாம். மாவட்டத்தில் உள்ள மிக முக்கிய புள்ளிகளுக்கும் இதில் தொடர்பு இருப்பதற்கான விஷயம் மெதுவாக கசிய தொடங்கி  இருக்காம். மேலும், பறவையானவரிடம் தொடர்ந்து விசாரித்தால், மாவட்டத்தில்  நடந்த வேறு சில மோசடிகளும் வெளிவருமென்ற தகவல்கள் வெளியாகி உள்ளதால்,  இலைக்கட்சியின் முக்கிய புள்ளிகளுக்கு வயிற்றில் புளியை  கரைத்திருக்கிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.‘‘புதுச்சேரியில என்ன புது விஷயம் இருக்கு…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘சட்டசபை தேர்தலில் புதுச்சேரி கதர்கட்சி ஆட்சியில் அமைச்சராக இருந்தவர்கள் எல்லாம், கடைசி நேரத்தில் தாமரை பக்கம் வரிசை கட்டி நின்றார்கள். வளர்த்த கிடா மார்பில் பாய்ந்த கதையாகி போனது. தேர்தலில் கதர் கட்சியின் சார்பில் 2 எம்எல்ஏக்களை மட்டுமே பெற முடிந்தது. அதிலும் புதுச்சேரியில் ஒருவரே வெற்றி பெற்றுள்ளார். இதனால், புதுச்சேரியில் சரியான தலை இல்லாமல் கதர்கட்சி தள்ளாடிக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்த பொறுப்பை எப்படி ஏற்பது என முக்கிய நிர்வாகிகள் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கிறார்களாம். காரணம் கேட்டபோது, தற்போதைய சூழலில் கட்சிக்கு செலவு செய்யும் வகையில் பொருளாதார பலம் கொண்டவர்கள் யாரும் இல்லையாம். மக்கள் செல்வாக்கு மற்றும் ஆக்டிவான ஆளைத்தான் தேடுகிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘அல்வா கொடுத்த இலை நிர்வாகிக்கு அல்வா கொடுத்த தேனிக்காரர் பற்றி சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘அல்வா மாநகராட்சியில் ஏற்கனவே மண்டல தலைவராக பதவி வகித்த இலை கட்சி பிரமுகருக்கு இந்தத் தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. தற்போது எதிர்கட்சியாக இருப்பதால் போட்டியிடுவதை தவிர்க்க, இலை பிரமுகர் தனக்கு கண் வலி என்று காரணம் கூறி மருத்துவமனையில் படுத்துக்கொண்டாராம். அவர் போட்டியை தவிர்த்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. இதையடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தேர்தல் பிரசாரத்துக்கு வந்த தேனிகாரர், வண்ணார்பேட்டையில் ஒரு விடுதியில் தங்கியிருந்தார். அங்கு சென்ற இலை கட்சியின் மாஜி பிரமுகர், தன்னை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளுமாறும், போட்டியிட மறுத்து தவறு செய்து விட்டேன், மன்னித்து விடுங்கள் என்று மன்றாடினாராம். அதற்கு எனக்கு அல்வா கொடுத்த உனக்கு இப்போதைக்கு அல்வாதான் என்று நினைத்தபடி, தேனிகாரர், தேர்தல் முடியட்டும், பார்ப்போம் என்று கூறி தட்டிக் கழித்து விட்டாராம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘வாக்காளர்ளை பார்த்து வேட்பாளர்கள் ஓடுகிறார்களாமே, அப்படியா…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கோவை மாநகராட்சி 64-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு இலை கட்சி சார்பில் செல்வமானவர் போட்டியிடுகிறார். இவர் கடந்த முறை 5 ஆண்டு காலம் இதே வார்டில் கவுன்சிலராக இருந்தார். தற்போது, இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். கடந்த முறை, இவர் வார்டில் அடிப்படை பணிகள் எதுவும் செய்யவில்லையாம். மாறாக, லட்சுமிகளை வீட்டில் குவித்து வைத்து விட்டாராம். இந்நிலையில், இவருக்கு மீண்டும் ‘சீட்’ கொடுக்கக்கூடாது என சொந்த கட்சியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும், அதையும் மீறி இவருக்கு தற்போது இரண்டாவது முறையாக ‘சீட்’ கொடுக்கப்பட்டுள்ளது. கட்சியினர் அதிருப்தியையும் தாண்டி இவர், வார்டுக்குள் வலம் வருகிறார். கடந்த மூன்று தினங்களாக இவர் செல்லும் இடமெல்லாம் வாக்காளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறாங்க. அதாவது, குடிநீர் விநியோகம் சீர்செய்தீர்களா, தெருவிளக்கு எரியவில்லை, சாக்கடை கால்வாய் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுத்தீர்களா, தார்ச்சாலை சீரமைப்பு செய்தீர்களா என பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக முன்வைத்து துரத்துகின்றனர். இதனால், இவர் ஓட்டுகேட்க முடியாமல், பின்வாங்கிச்செல்கிறார். ‘என்னடா.. இது.. போகிற இடமெல்லாம் மக்கள் வசை பாடுகிறார்களே… இந்த வாட்டி தேறுவோமா…?’ என்ற கவலையுடன் இவர் வார்டில் வலம் வருகிறார். இலை தனித்து போட்டியிடுவதால் கூட்டணி கட்சியினர் உதவியும் இல்லை. சொந்த கட்சியினர் உதவியும் இல்லை. தனி மரமாக சுற்றுகிறார் இந்த வேட்பாளர்…’’ என்றார் விக்கியானந்தா….

The post விஸ்வரூபம் எடுக்கும் நிலமோசடி வழக்கால் தேனிக்காரர் டென்ஷனில் இருப்பதை சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Thenikara ,Yananda ,Thenikar ,Peter ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...