×

சம்பா பருவம் முடிந்த நிலையிலும் கோமுகி அணையில் 41 அடி தண்ணீர் இருப்பு

சின்னசேலம்: சம்பா பருவம் முடிந்த நிலையிலும் கச்சிராயபாளையம் கோமுகி அணையின் நீர்மட்டம் 41 அடியாக இருப்பு உள்ளது. கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணை சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் 46 அடிவரை நீரை தேக்கி வைக்கும் வகையில் காமராசர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. இதில் ஆற்றுப் பாசனத்தின் மூலம் 5860 ஏக்கர் விவசாய நிலமும், பிரதான கால்வாய் பாசனத்தின் மூலம் 5000 ஏக்கர் விவசாய நிலமும் பாசன வசதி பெறுகிறது. அதாவது இந்த கோமுகி அணையின் மூலம் கச்சிராயபாளையம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதிகளை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட கிராம விவசாய மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.மேலும் கோமுகி ஆற்றின் குறுக்கே சோமண்டார்குடி, கச்சிராயபாளையம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 11 இடங்களில் அணைகள் கட்டப்பட்டு, அதன்மூலம் ஏரிகளில் நீரை நிரப்பியும் விவசாயம் செய்கின்றனர். கோமுகி ஆற்றின் கரையோர கிராமங்களுக்கும் குடிநீர் வசதி கிடைக்கிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் பருவமழை தொடர்ந்து பெய்து வந்ததால் சம்பா பருவத்துடன் சேர்த்து 3 போகமும் நெல் சாகுபடி செய்தனர். ஆனால் தற்போது காலமாற்றம் ஏற்பட்டு உள்ளதால் சம்பா பருவம் மட்டுமே நிறைவாக உள்ளது. வடகிழக்கு பருவமழை அதிகளவு பெய்ததால் தற்போது சம்பா பருவம் முடிந்த நிலையிலும் கோமுகி அணையின் நீர்மட்டம் 41 அடி நீர் இருப்பு உள்ளது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக ஜனவரி மாதத்திலேயே அணையில் நீர் வடிந்து விடும் நிலை இருந்தது. அணையில் உள்ள தண்ணீரை கொண்டு குறுகிய கால நெற்பயிர், உளுந்து போன்ற பயிர்களை சாகுபடி செய்தால் தண்ணீர் போதுமானதாக இருக்கும் என வேளாண் அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், கோமுகி அணையில் தண்ணீர் குறையாமல் இருப்பதால் கச்சிராயபாளையம் உள்ளிட்ட கரையோர கிராமங்களில் குடிநீர் பஞ்சமும் ஏற்படாது. …

The post சம்பா பருவம் முடிந்த நிலையிலும் கோமுகி அணையில் 41 அடி தண்ணீர் இருப்பு appeared first on Dinakaran.

Tags : Komuki Dam ,samba ,Chinnasalem ,Kachirayapalayam Komuki Dam ,Kalvarayanmalai ,Dinakaran ,
× RELATED ₹12 கோடியில் புதிய ஷெட்டர்கள் பொருத்தும் பணி தீவிரம்