சண்டிகர்: பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் பிரசார மேடையில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், திடீரென தடுமாறி விழுந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடக்கிறது. இதனால் அங்கு தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது. இந்நிலையில், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள பொற்கோயிலுக்கு சென்று வழிபட்டார். பின்னர், அவர் பரிட்கோட் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசார மேடையில் அவருக்கு அணிவிக்க பெரிய மாலை ஒன்று கொண்டு வரப்பட்டது. அப்போது மேடையில் நின்றிருந்த பாஜ தலைவர்களுக்கு இடையே, அவருக்கு யார் மாலையை அணிவிப்பது என்பதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் எதிர்பாராத விதமாக ராஜ்நாத் சிங் தடுமாறி பின்பக்கமாக இருந்த ஷோபாவில் விழுந்தார். உடனே மற்ற தலைவர்கள் மற்றும் தொண்டர்கள், ராஜ்நாத் சிங்கின் கையை பிடித்து தூக்கினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அப்போது பேசிய ராஜ்நாத் சிங், ‘இதுவரை எங்கள் கட்சியின் மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைக்க யாராலும் முடியவில்லை’ என தெரிவித்தார். மேலும் அவர், ‘கெஜ்ரிவாலால் போதைப்பொருள் இல்லா பஞ்சாபை உருவாக்க முடியாது. ஆம் ஆத்மி கட்சியினர் டெல்லியின் தெருக்கள் தோறும் மதுக்கடைகளை திறந்து வைத்துள்ளனர். போதை பழக்கத்தை முடிவுகட்ட காங்கிரசும் ஒன்றும் செய்யவில்லை. அவற்றை வேரறுக்கும் துணிச்சல் பாஜவுக்கு மட்டுமே உள்ளது. ஒருமுறை நாங்கள் ஆட்சிக்கு வந்தபின், யார் இங்கு போதை பொருள் விற்பனை செய்கின்றார்கள் என்று பார்ப்போம்” என கூறி சவால் விடுத்தார்….
The post பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் பிரசார மேடையில் தடுமாறி விழுந்த ராஜ்நாத் சிங் appeared first on Dinakaran.