×

சென்னை, கோவை, திருப்பூர், மதுரை மாவட்டங்களில் உள்ள மருத்துவகல்லூரிகளில் நடந்து வரும் பணிகள் குறித்து ஜைகா குழுவினர் வரும் 21, 22ம் தேதி நேரில் ஆய்வு: பொதுப்பணித்துறை உயர்அதிகாரி தகவல்

சென்னை: ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை  மூலம்  மருத்துவக்கல்லூரிகளில் நடந்து வரும் பணிகள் குறித்து  ஜைகா குழுவினர் வரும் 21, 22ம் தேதி நேரில் ஆய்வு  செய்கின்றனர் என்று பொதுப்பணித்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (ஜைகா) முன்வந்துள்ளது. இந்த ஜைகா மூலம் மருத்துவமனைகளில் உட்கட்டமைப்பு மற்றும் நவீன உபகரணங்கள் வாங்குவதற்கு தேவையான நிதியுதவி வழங்கி வருகிறது. இதன் மூலம் மருத்துவமனைகளை சூப்பர் ஸ்பெஷாலிட்டி அளவுக்கு தரம் உயரும் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கோவை மருத்துவக்கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி, மதுரை ராஜாஜி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அதிநவீன மருத்துவ உபகரணங்களுடன் கூடிய சிகிச்சை மையம் அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயார் செய்து பொதுப்பணித்துறை அனுப்பி வைத்தது.  அந்த  அறிக்கைக்கு ரூ.400 கோடியே 4 லட்சத்து 18 ஆயிரத்து 73 நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  அதன்படி, ரூ.124.25 கோடி மதிப்பில் கோவை மருத்துவக்கல்லூரியிலும், ரூ.144.09 கோடியில் கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரியிலும், ரூ.131.69 கோடியில் மதுரை ராஜாஜி மருத்துவக்கல்லூரியில் அதி நவீன உபகரணங்களில் கூடிய சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது.  இந்த 3 மருத்துவகல்லூரிகளில் 6 மாடி கொண்ட சிகிச்சை மையத்தில் எக்ஸ்ரே மையம் மற்றும் அவசர ஆய்வகம், ரேடியோ தெரபி சிகிச்சை மையம், அறுவை சிகிச்சை பிரிவு வார்டு, நெப்ரலாஜி வார்டு, இரைப்பை சிகிச்சை மையம், இருதய சிகிச்சை பிரிவு வார்டு, நரம்பு மற்றும் பக்கவாதம் சிகிச்சை வார்டு, சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன், ஐவிஆர் மையம், அதி தீவிர சிகிச்சை மையம், என்டோஸ்கோபி சிகிச்சை மையம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை மையங்கள் இந்த கட்டிடத்தில் அமைகிறது. தற்போது  நடந்து வரும் இப்பணிகளை ஜைகா குழுவினர் வரும் 21, 22ம் தேதிகளில் ஆய்வு செய்கின்றனர். 21ம் தேதி சென்னையில் டிஎம்எஸ் வளாகம், கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியிலும், தொடர்ந்து, 22ம் தேதி  கோவை, திருப்பூர், மதுரையில் நடந்து வரும் பணிகளை ஆய்வு செய்கின்றனர் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். …

The post சென்னை, கோவை, திருப்பூர், மதுரை மாவட்டங்களில் உள்ள மருத்துவகல்லூரிகளில் நடந்து வரும் பணிகள் குறித்து ஜைகா குழுவினர் வரும் 21, 22ம் தேதி நேரில் ஆய்வு: பொதுப்பணித்துறை உயர்அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : JICA ,Chennai ,Coimbatore ,Tirupur ,Madurai ,Department ,Japan International Cooperation Agency ,Dinakaran ,
× RELATED தென் சென்னை மக்கள் ஒரு நல்ல வேட்பாளரை...