×

அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி பினாமிகளின் ரூ.110 கோடி வங்கி டெபாசிட் முடக்கம்: ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் பினாமிகள் 2 பேருக்கு சொந்தமான நிரந்தர வைப்புத்தொகை ரூ.110 கோடியை முடக்க சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. இவர், கடந்த 5 ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையிலும் புகார்கள் செய்யப்பட்டன. இதற்கிடையில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தி வந்தது. அதன் தொடர்ச்சியாக எஸ்.பி.வேலுமணியின் கோவை வீட்டில் கடந்தாண்டு ஆகஸ்ட் 10, 11ம் தேதிகளில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தினர். அதேபோல் வேலுமணியின் பினாமிகள் வீட்டிலும், அலுவலகத்திலும் சோதனை நடந்தது. கிட்டத்தட்ட 52 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னையில் மட்டும் 15 இடங்களில் சோதனை நடந்தது.அரசு ஒப்பந்தங்களை தருவதாகக் கூறி ரூ.1.25 கோடி ஏமாற்றியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது, பாதிக்கப்பட்ட திருவேங்கடம் என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையிலும் சோதனை நடத்தப்பட்டது. எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. குறிப்பாக வேலுமணி மற்றும் அவரது மூத்த சகோதரர் அன்பரசன், நெருங்கிய கூட்டாளிகள் சந்திரசேகர், சந்திரபிரகாஷ் மற்றும் இவர்கள் நடத்தி வந்த நிறுவனங்கள் மீது மோசடி, கூட்டு சதி உள்பட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சென்னைமாநகராட்சியில் ரூ.464 கோடி, கோவை மாநகராட்சியில் ரூ.346 கோடிக்கு டெண்டர் விட்டதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகார் தொடர்பாகவும், வேலுமணி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கூட்டாளிகள் 2 பேருக்கு சொந்தமான ரூ.110 கோடி மதிப்புள்ள நிரந்தர வைப்புத்தொகையை (எஃப்.டி.ஆர்) முடக்க ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘கேசிபி இன்ஃப்ரா லிமிடெட் மற்றும் ஆலம் கோல்ட் அண்ட் டைமண்ட் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் முறைகேடாக சம்பாதித்த பணத்தை, வங்கிகளில் நிலையான வைப்புத் தொகையாக (ஃபிக்ஸட் டெபாசிட்கள்) முதலீடு செய்துள்ளன. ​​கேசிபி இன்ஃப்ரா ரூ.109 கோடியும், ஆலம் கோல்ட் அண்ட் டைமண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ.1.8 கோடியும் வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளன. இந்த நிதிகள் கைமாறுவதை தடுக்க வேண்டியுள்ளதால், மேற்கண்ட ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளை முடக்க வேண்டும். இந்த ஃபிக்ஸட் டெபாசிட்கள் யாவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது கூட்டாளிகள் மூலம் கடந்த 2017ம் ஆண்டுக்குப் பிறகுதான் செய்யப்பட்டுள்ளன. இவை, சென்னை, கோவை மாநகராட்சிகளில் வழங்கப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் பெறப்பட்ட ஆதாயமாகவோ, இவர்கள் மீதான குற்றச் செயல்களின் ஒரு பகுதியாகவோ இருக்கலாம்’ என்று தெரிவிக்கப்பட்டது. இந்த மனுக்களை பரிசீலித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜே.ஓம்பிரகாஷ், ‘சம்பந்தப்பட்ட இரு நிறுவனங்களின் நிரந்தர வைப்புத்தொகையை முடக்கி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது’ எனக்கூறி, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். முன்னாள் அமைச்சர் வேலுமணியின் பினாமி பணம் முடக்கப்பட்டது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.* மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 17 பேர் மீது வழக்கு. * மாஜி அமைச்சருக்கு சொந்தமான 52 இடங்களில் சோதனை.* கேசிபி இன்ஃப்ரா ரூ.109 கோடி முடக்கம்.* ஆலம்  கோல்ட் & டைமண்ட் நிறுவனம் ரூ.1.8 கோடி முடக்கம்….

The post அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி பினாமிகளின் ரூ.110 கோடி வங்கி டெபாசிட் முடக்கம்: ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Minister ,Velirani ,Chennai ,Former Minister ,S. GP ,Velemeni ,Veleni ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...