×

மணல் கடத்தல் வழக்கில் கைதான கேரள பிஷப் உள்பட 6 பாதிரியார்களுக்கு ஜாமீன்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மணல் கடத்தல் வழக்கில் கைதான கேரள கத்தோலிக்க பிஷப் உள்பட 6 பாதிரியார்களுக்கு ஐகோர்ட் கிளை ஜாமீன் வழங்கியது. நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி பொட்டல் கிராமத்தில் தனியார் பட்டா நிலத்தில் எம்.சாண்ட் குவாரி நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. அதை வைத்து பல கோடி மதிப்புள்ள ஆற்று மணலை அள்ளி கேரளாவிற்கு விற்பனை செய்துள்ளதாகவும், இதனால், தமிழக அரசுக்கு பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. மனுவை விசாரித்த ஐகோர்ட் கிளை, மணல் கடத்தல் தொடர்பான விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றியது.இதுதொடர்பாக கேரள மாநிலம் பத்தனம்திட்டா கத்தோலிக்க டயோசீசன் பிஷப் சாமுவேல் மார் எரேனியஸ், பாதிரியார்கள் ஷாஜி தாமஸ், ஜார்ஜ் சாமுவேல் புத்தேன்விலயில், ஜோஸ் கலவிலா,  ஷிஜோ ஜேம்ஸ், ஜோஸ் சமகாலயில் ஆகிய 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களது ஜாமீன் மனுக்களை நெல்லை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மற்றும் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் ஆகியவை தள்ளுபடி செய்தன. இதையடுத்து 6 பேரும் ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தனர். இந்த மனு நீதிபதி கே.முரளிசங்கர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, ராபர்ட் புருஷ் ஆகியோர் ஆஜராகி, ‘‘முறைகேட்டிற்கும் மனுதாரர்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. பொட்டல் கிராமத்திலுள்ள நிலம் கேரள டயோசீசனுக்கு சொந்தமானது. இந்த நிலத்தை மனுவேல் ஜார்ஜ் என்பவருக்கு எம்.சாண்ட் குவாரிக்காக குத்தகைக்காக மட்டுமே விடப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் கூட பிஷப் கையெழுத்திடவில்லை. மனுதாரர்கள் அனைவரும் கேரள மாநிலத்தில் டயோசீஸ் பணிகளில் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு தமிழ்நாட்டில் எந்த தொடர்பும் இல்லை. கடந்த 5ம் தேதி முதல் சிறையில் உள்ளனர். பிஷப் சாமுவேல் மார் எரேனியஸ் மற்றும் பாதிரியார் ஜோஸ் சமகாலயில் ஆகியோர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே, ஜாமீன் வழங்க வேண்டும்’’ என வாதிட்டனர். இதையடுத்து மனுதாரர்கள் அனைவருக்கும் ஜாமீன் வழங்கிய நீதிபதி, புற்றுநோய் சிகிச்சை பெறும் இருவரும் தேவைப்படும்போது ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். மற்றவர்கள் விசாரணை போலீசாரிடம் தினசரி ஆஜராக நிபந்தனை விதித்துள்ளார்….

The post மணல் கடத்தல் வழக்கில் கைதான கேரள பிஷப் உள்பட 6 பாதிரியார்களுக்கு ஜாமீன்: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kerala ,bishop ,ICourt Branch ,Madurai ,Catholic ,Dinakaran ,
× RELATED பிஷப்புக்கு கத்தி குத்து: 7 பேர் கைது