×

நியூசிலாந்துக்கு 2வது வெற்றி: அமிலியா கெர் அபார சதம்; இந்தியா ஏமாற்றம்

குயின்ஸ்டவுன்: இந்திய மகளிர் அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில், அமிலியாவின் அபாரமான ஆட்டத்தால் நியூசிலாந்து அணி தொடர்ச்சியாக 2வது வெற்றியை வசப்படுத்தியது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் நியூசி 62 ரன் வித்தியாசத்தில் வென்று 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி குயின்ஸ்டவுனில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. மேக்னா – ஷபாலி ஜோடி முதல்  விக்கெட்டுக்கு 61 ரன் சேர்த்தது. ஷபாலி 24 ரன்னில் வெளியேறினார். அடுத்து மேக்னா – யாஸ்டிகா இணைந்து 2வது விக்கெட்டுக்கு 49 ரன் சேர்த்தனர். யாஸ்டிகா 31 ரன், மேக்னா 49 ரன் (50 பந்து, 7 பவுண்டரி) விளாசி அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் மிதாலி ஒரு முனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, ஹர்மன்பிரீத் 10 ரன்னில் பெவிலியன் திரும்பினார். மித்தாலி – ரிச்சா கோஷ் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 108 ரன் சேர்த்தனர். ரிச்சா தனது முதல் அரை சதத்தையும்,  மிதாலி தனது 61வது  அரை சதத்தையும் பதிவு செய்தனர். ரிச்சா 65 ரன் (64 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பூஜா வஸ்த்ராகர் 11 ரன்னில் வெளியேற, இந்தியா 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 270 ரன் குவித்தது. மிதாலி ராஜ் 66 ரன் (81 பந்து, 3 பவுண்டரி), தீப்தி 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து 271 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசி களமிறங்கியது. சூசி பேட்ஸ் 16 ரன், சோபி டிவைன் 33 ரன், கேப்டன் அமி சாட்டர்த்வெய்ட் (0) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, நியூசி 55 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், அமிலியா கெர் – மேடி கிரீன் ஜோடி அபாரமாக விளையாடி 128 ரன் சேர்த்தது. கிரீன் 52 ரன் (61 பந்து, 5 பவுண்டரி), புரூக் ஹாலிடே 13, கேத்தி மார்டின் 20 ரன், ஹேலி ஜென்சன் 4 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். எனினும், ஒரு முனையில் உறுதியுடன் விளையாடி சதம் அடித்த அமிலியா நியூசி. அணியை வெற்றிப் பாதையில் வழி நடத்தினார். அந்த அணி 49 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 273 ரன் எடுத்து தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்தது. அமிலியா கெர் 119 ரன் (135 பந்து, 7 பவுண்டரி), ஜெஸ் கெர் 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் தீப்தி சர்மா 4 விக்கெட் கைப்பற்றினார். ராஜேஸ்வரி, பூனம், ஹர்மன்பிரீத் தலா 1 விக்கெட் எடுத்தனர். நியூசி 2-0 என முன்னிலை வகிக்க, 3வது போட்டி நாளை மறுநாள் நடக்கிறது….

The post நியூசிலாந்துக்கு 2வது வெற்றி: அமிலியா கெர் அபார சதம்; இந்தியா ஏமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Zealand ,Amelia Kerr ,India ,Queenstown ,India Women ,New Zealand ,Amelia ,Dinakaran ,
× RELATED 2-2 என தொடரை சமன் செய்தது பாக்.