×

வெற்றியை தீர்மானிக்கும் பெண்களின் வாக்கு காரிமங்கலம் பேரூராட்சியில் தலைவர் வாய்ப்பு யாருக்கு?

* 10ஆண்டுகளாக நிறைவேறாத பிரச்னைகள்* தீர்வு காண்பவர்களை தேர்ந்தெடுக்க ஆர்வம்காரிமங்கலம் : தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம் பேரூராட்சியில் புதிய தலைவராகும் வாய்ப்பு யாருக்கு? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் பரவலாக எழுந்துள்ளது.தகடூரை ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சி ஆட்சிகாலத்தில் காரி (அதியமான்திருமுடிக்காரி) என்னும் அரசன் படை நிறுத்திய இடமே காரிமங்கலம் என்கிறது சங்க இலக்கிய குறிப்புகள். இப்படி சிறப்பு வாய்ந்த காரிமங்கலத்தில் பிரதான அடையாளமாக திகழ்கிறது ஆரண்யேஸ்வரர் கோயில். கிராம ஊராட்சி உள்ளிட்ட பல்வேறு நிலைகளை  கடந்து 963ம் ஆண்டு உருவானது காரிமங்கலம் பேரூராட்சி. இந்த பேரூராட்சியின் முதல் தலைவராக ஒருங்கிணைந்த, சேலம், தர்மபுரி மாவட்டத்தில் எம்எல்ஏவாக இருந்த ஆர்.எஸ்.வீரப்பசெட்டியார் பதவி வகித்துள்ளார். அதன் பின்னர் துரைசாமி செட்டியார் சேர்மன் பதவியில் இருந்துள்ளார். 1970 முதல் 2006வரை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பி.சி.ராமன் சேர்மன் பதவியில் இருந்துள்ளார். 2006 முதல் 2011வரை பி.சிராமன் சகோதரி வீரம்மாள் என்பவரும், 2011 முதல் 2016 வரை பாமகவை சேர்ந்த சத்யா அசோக்குமார் என்பவர் சேர்மன் பதவி வகித்துள்ளனர். 40 ஆண்டுகளுக்கு மேல் சேர்மன் பதவி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இருந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடக்கவுள்ள தேர்தலில் 15 வார்டுகளில் 11 ஆயிரத்து 375பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 5457, பெண் வாக்காளர்கள் 5918 ஆகும். ஆண் வாக்காளர்களை விட, பெண் வாக்காளர்கள் இத்தேர்தலில் அதிக அளவில் வாக்களிக்க உள்ளனர். கிராமப்புறங்களை அதிக அளவில் உள்ளடக்கிய, இந்த பேரூராட்சியில் முக்கிய தொழில் விவசாயமாகும். மேலும் கயிறு திரித்தல், பேக்கரி தொழில் ஆகியவை உள்ளது. இதில் இரண்டாவது வார்டு வெள்ளையன் கொட்டாவூர் கிராமத்தில் வசித்து வரும் அனைவரும், மாநிலம் முழுவதிலும் பேக்கரி தொழில் செய்து வருவது சிறப்பம்சமாகும். காரிமங்கலம் பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிசி.ராமன் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை மனு அளித்தார். இதனடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை அறிவித்து, அதை உடனடியாக நிறைவேற்றப்பட்டது. இதன் காரணமாக காரிமங்கலம் பகுதியில் குடிநீர் பிரச்னை முடிவுக்கு வந்தது. தொடர்ந்து ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் தென்பெண்ணை ஆற்று குடிநீர் திட்டம் ஆகியவற்றின் மூலம், தற்போது அனைத்து வார்டுகளிலும் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக சீரான முறையில் குடிநீர் சப்ளை இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும் தர்மபுரி, பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காரிமங்கலம் நகருக்கு ஓசூர், பெங்களூர், சென்னை, சேலம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் வருவதில்லை. இதன் காரணமாக வெளியூருக்கு செல்ல பேருந்துக்காக பொதுமக்கள் நீண்ட நேரம் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.காரிமங்கலம் நகரப்பகுதியில், நீண்ட காலமாக இருந்து வந்த காந்தி பூங்கா நிர்வாக சீர்கேடு காரணமாக முழுமையாக மூடப்பட்டது. தற்போது நடக்கவுள்ள தேர்தலில் திமுக கூட்டணியில் திமுக 14 வார்டுகளிலும், காங்கிரஸ் ஒரு வார்டிலும் போட்டியிடுகிறது. அதிமுக 15 வார்டுகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். பாமக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகளும் சில வார்டுகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ள நிலையில், திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. 10 ஆண்டுகளாக தீர்க்கப்படாத பல்வேறு மக்கள் நல பிரச்னைகளை, திமுக முன்வைத்து பொது மக்களிடம் பிரசாரம் செய்து வருகின்றனர். அதிமுக தரப்பில் கடந்த காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை முன் நிறுத்தி பிரசாரம் செய்து வருகின்றனர்.சேர்மன் பதவிக்கு திமுக சார்பில் பிசிஆர்.மனோகரன், அதிமுக சார்பில் மாணிக்கம் ஆகியோரை இவ்விரு கட்சிகளும் முன்னிறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களில் தேர்தல் பணிகள் உச்சத்தை அடையும் நிலையில், 22ம் தேதி வாக்கு எண்ணிக்கையில் சேர்மன் பதவி யாருக்கு என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது….

The post வெற்றியை தீர்மானிக்கும் பெண்களின் வாக்கு காரிமங்கலம் பேரூராட்சியில் தலைவர் வாய்ப்பு யாருக்கு? appeared first on Dinakaran.

Tags : Garimangalam ,Karimangalam ,Dharmapuri district ,Dinakaran ,
× RELATED மாம்பழ கடைகளை அமைத்த வியாபாரிகள்