×

பாஜவுடன் அதிமுக கூட்டணி தொடர கூடாது : ஓபிஎஸ் முன்னிலையில் செல்லூர் ராஜூ சூசக பேச்சு

மதுரை: பாஜவுடன் அதிமுக கூட்டணி தொடரக் கூடாது என ஓபிஎஸ் முன்னிலையில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சூசகமாக பேசினார். கடந்த அதிமுக ஆட்சியை, ஒன்றிய பாஜ அரசு தனது கைப்பாவையாக வைத்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆட்சியை தக்க வைத்து கொள்ள அதிமுக தலைவர்கள், நீட் உள்ளிட்ட பிரச்னைகளை கண்டு கொள்ளவில்லை என்று தமிழக மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவியது. 2021ல் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜ கூட்டணி தோல்வியடைந்தது. இருப்பினும், பாஜ கூட்டணியில் அதிமுக தொடர்கிறது.  தற்போது நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், 25 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் வார்டுகளை பிரித்து கொடுக்க வேண்டும் என பாஜ, அதிமுகவை கட்டாயப்படுத்தியது. இதற்கு அதிமுக நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரவித்தனர். உள்ளாட்சி தேர்தலில் பாஜவுடன் கூட்டணி வைக்க கூடாது என அதிமுகவின் முன்னணி தலைவர்களும், மாவட்ட செயலாளர்களும், முக்கிய நிர்வாகிகளும் வலியுறுத்தினர். இதையடுத்து வேறு வழியின்றி முன்னாள் முதல்வர் எடப்பாடி, பாஜவுடன் இந்த உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி இல்லை என அறிவித்தார்.உள்ளாட்சி தேர்தலில் மட்டும் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வமும் அறிவித்தார். முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, சம்பத், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோரும் பாஜவுடன் இனிமேல் கூட்டணி வைக்க கூடாது என வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலையை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கடந்த ஒரு வாரமாக கடுமையாக விமர்சித்து வருகிறார். நேற்று மதுரையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் செல்லூர் ராஜூ பேசுகையில், ‘‘அதிமுக, பாஜ இடையே கூட்டணி இல்லை. கட்சியின் கொள்கை என்பது நாம் அணிந்து இருக்கும் வேட்டி மாதிரி, கூட்டணி என்பது தோளில் அணியும் துண்டு மாதிரி’ என்றார். துண்டு இல்லாமல் இருக்க முடியும். கடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது நாங்கள் ஓட்டு கேட்டு சென்ற போது, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், இன்று அந்த நிலை இல்லை. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் வசிக்கும் பகுதிகளில் சென்று, பிரசாரம் செய்ய முடிகிறது. இந்த நிலை தொடர வேண்டும். இதற்கு என்ன அர்த்தம் என்று உங்களுக்கு தெரியும். அவரது இந்த பேச்சுக்கு, அதிமுக தொண்டர்கள் கை தட்டி ஆதரவு தெரிவித்தனர்.செல்லூர் ராஜூவின் பேச்சுக்கு, ஓபிஎஸ் எந்த பதிலும் சொல்லாமல், வழக்கம் போல் பேசி விட்டு சென்றதால், அதிமுக தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர்….

The post பாஜவுடன் அதிமுக கூட்டணி தொடர கூடாது : ஓபிஎஸ் முன்னிலையில் செல்லூர் ராஜூ சூசக பேச்சு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,BJP ,Sellur Raju Susaka ,OPS ,Madurai ,minister ,Sellur Raju ,Dinakaran ,
× RELATED யார் அணையப்போற விளக்குனு ஜூன் 4ல்...