×

3 செயற்கைக்கோள்களை சுமந்துகொண்டு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி52

* 2022ம் ஆண்டின் முதல் திட்டம் வெற்றி * இஸ்ரோ அறிவிப்புசென்னை: புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஈஓஎஸ்-04 உள்ளிட்ட 3 செயற்கைக்கோள்களை சுமந்துகொண்டு பிஎஸ்எல்வி-சி52 ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்த ஆண்டின் முதல் ராக்கெட் ஏவும் திட்டம் வெற்றி பெற்றுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு இஸ்ரோவின் ராக்கெட் ஏவும் பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு ராக்கெட் ஏவுவதற்கான பணிகளை இஸ்‌ரோ தீவிரமாக மேற்கொண்டு வந்தது. அந்தவகையில், புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான ஈஓஎஸ்-04 என்ற செயற்கைக்கோளுடன் இந்த ஆண்டின் முதல் ராக்கெட்டான பிஎஸ்எல்வி – சி52 ராக்கெட் பிப்ரவரி 14ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ அறிவித்தது.அதன்படி, பிஎஸ்எல்வி வரிசையில் உருவாக்கப்பட்டுள்ள பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் மூலம் 3 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் பணியில் இஸ்ரோ மும்முரமாக இறங்கியது. ஈஓஎஸ்-04 என்ற ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள், ஐஎன்எஸ்-2டிடி தொழில்நுட்ப செயற்கைக்கோள், இன்ஸ்பையர்சாட்-1 என்ற மாணவர் செயற்கைக்கோள் ஆகிய 3 செயற்கைக்கோள்கள். இவற்றை விண்ணில் ஏவுவதற்கான 25 மணி 30 நிமிடத்திற்கான கவுன்ட்டவுன் நேற்று முன்தினம் காலை 4.29 மணிக்கு தொடங்கியது.இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து 3 செயற்கைக்கோள்களை சுமந்துகொண்டு பிஎஸ்எல்வி -சி52 ராக்கெட் நேற்று காலை 5.59 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ராக்கெட் விண்ணிற்கு புறப்பட்டதும் 18 நிமிடத்தில் ஈஓஎஸ்-04 செயற்கைக்கோள் பூமியில் இருந்து 529 கி.மீ. தொலைவில் அதன் சுற்றுவட்டப்பாதையில்  வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இதைதொடந்து, மற்ற இரண்டு செயற்கைக்கோள்களும் திட்டமிட்டபடி அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன. செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதும் இஸ்ரோ விஞ்ஞனிகள்  ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். பிஎஸ்எல்வி -சி52 ராக்கெட்  திட்டம் வெற்றி பெற்றதையடுத்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் விஞ்ஞானிகள்  மத்தியில் பேசியதாவது: ஈஓஎஸ்-04 முதன்மை செயற்கைக்கோள் துல்லியமான சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இதனுடன்  அனுப்பப்பட்ட மற்ற 2 செயற்கைக்கோள்களும் சுற்றுவட்டப்பாதையில்  நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டம் வெற்றிபெற பாடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்த பிஎஸ்எல்வி ராக்கெட் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.  இவ்வாறு கூறினார்.ஈஓஎஸ்-04 செயற்கைக்கோள் எப்படி?1,710 கிலோ எடை கொண்ட ரேடார் இமேஜிங் செயற்கைக்கோளான ஈஓஎஸ்-04  விவசாயம், வனம், மண்ணின் ஈரப்பதம் மற்றும் நீரியல் போன்றவற்றை கண்காணிக்கும் பணிகளை மேற்கொள்ளும். இதற்கு தேவையான உயர்தர படங்களை அனைத்து காலநிலைகளிலும் எடுத்து அனுப்பக்கூடியது.மாணவர்களின் செயற்கைக்கோள்இன்ஸ்பைர்சாட்-1 எனும் செயற்கைக்கோள் மாணவர்களால் வடிவமைக்கப்பட்டது. திருவனந்தபுரத்தை சேர்ந்த இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமும் அமெரிக்காவில் உள்ள கொலோராடோ பல்கலைக்கழகமும் இணைந்து இந்த செயற்கைக்கோளை கட்டமைத்து சோதனை செய்தது. அதுபோல், சிங்கப்பூர் பல்கலைக்கழகமும், தைவான் பல்கலைக்கழக மாணவர்களும் தங்கள் பங்களிப்பை கொடுத்துள்ளனர். வளிமண்டலத்தின் மேல் பகுதியின் இயக்கத்தை ஆய்வு செய்ய இந்த செயற்கைக்கோள் பயன்படும். இதில் சூரிய ஒளி கதிர்களை ஆய்வு செய்ய எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் பொருத்தப்பட்டுள்ளது.நிலம், வனம், மரங்கள் அடையாளம் காணப்படும்மற்றொரு செயற்கைக்கோளான ஐஎன்எஸ்-2டிடி எனும் செயற்கைக்கோள் இந்தியா- பூடான் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பில் உருவாக்கப்பட்டது. நீர், நில பகுதியின் வெப்பநிலையை ஆய்வு செய்வது, வனங்கள், மரங்களை அடையாளம் காண்பது உள்ளிட்ட பயன்பாட்டுக்காக தெர்மல் இமேஜிங் (வெப்பம் தாங்கி படமெடுக்கும் கேமரா) கேமராவுடன் அனுப்பப்பட்டுள்ளது. இதுவும் பூமியை கண்காணிக்கும் பணியை மேற்கொள்ளும். பிஎஸ்எல்வி ராக்கெட் வரிசையில் பிஎஸ்எல்வி -சி52 ராக்கெட் 54வது ராக்கெட் ஆகும்.  இஸ்ரோ தலைவராக சோமநாத் பொறுப்பேற்ற பின்னர் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட முதல் ராக்கெட் திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது….

The post 3 செயற்கைக்கோள்களை சுமந்துகொண்டு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி52 appeared first on Dinakaran.

Tags : ISRO ,Chennai ,Earth ,Dinakaran ,
× RELATED நிலவின் தென்துருவப் பகுதியில்...