×

ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிப்பு தஞ்சை மாநகராட்சிக்கு சொந்தமான ₹100 கோடி இடம் மீட்பு

தஞ்சை : தஞ்சை சுதர்சன சபாவில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிக்கப்பட்டு ரூ.100 கோடி இடம் மீட்கப்பட்டது. தஞ்சை பழைய பஸ்நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான சுதர்சன சபா உள்ளது. 40 ஆயிரத்து 793 சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த சபா, கடந்த 1927ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் தேதி திறக்கப்பட்டது. இந்த சபா, ஆண்டு வாடகை அடிப்படையில் 99 ஆண்டுகள் குத்தகைக்கு மாநகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்பட்டது. இந்த சபாவில் நாடகம், இசை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் இடமாக இருந்தது. ஆனால் காலப்போக்கில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது குறைந்தது. சபா வளாகத்தில் குத்தகை விதிமுறையை மீறி மதுபான கூடம், பேக்கரி கடை, செல்போன் கடை, உணவகம் ஆகியவை கட்டப்பட்டு, உள் வாடகைக்கு விடப்பட்டிருந்தது. இதன் மூலம் மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது.நகர ஊரமைப்பு சட்டம் 1971 விதிகளின்படி உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்டு உள்வாடகைக்கு விடப்பட்டிருந்த உணவகம், மதுபான கூடம், பேக்கரி, செல்போன் கடை ஆகியவற்றை மாநகராட்சி அதிகாரிகள் கடந்த மாதம் பூட்டி ‘சீல்’ வைத்தனர். குத்தகை விதிமுறைகளை மீறி செயல்பட்ட, குத்தகை எடுத்தவர் வசம் இருந்த சுதர்சன சபாவை தமிழ்நாடு பொது வளாகங்கள் (ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுதல்) சட்டம் 1975-ன் படி, மாநகராட்சி அதிகாரிகள் கையகப்படுத்தினர். தற்போதைய மதிப்பு ரூ.100 கோடி இருக்கும் எனக்கூறப்படுகிறது. மாநகராட்சிக்கு குத்தகை நிலுவை தொகை ரூ.20 கோடி வரை பாக்கி செலுத்த வேண்டியிருந்ததும் தெரிய வந்தது.இந்த நிலையில் சுதர்சன சபா வளாகத்தில் இருந்த கடைகளை இடித்து அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று காலை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், எஸ்பி ரவளிபிரியா ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரத்துடன் சுதர்சன சபா பகுதிக்கு வந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 200 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். இதனைத்தொடர்ந்து சுதர்சன சபாவில் இருந்த மதுபான கூடம், உணவகம், செல்போன் கடை, பேக்கரி உள்ளிட்ட அனைத்து கடைகளும் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தரைமட்ட மாக்கப்பட்டது. பழைய பஸ் நிலையம் முன்பு ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளதால் பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கும் போது பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போலீசார் அவர்களை பணி நடைபெறும் இடத்தின் அருகே அனுமதிக்கவில்லை. தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. ரூ.100 கோடி மதிப்பிலான இடம் மீட்கப்பட்டதுடன், ஆக்கிரமிப்பும் அகற்றப்பட்டதற்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்….

The post ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிப்பு தஞ்சை மாநகராட்சிக்கு சொந்தமான ₹100 கோடி இடம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Thanjavur Corporation ,Thanjavur ,Thanjavur Sudarsana Sabha ,Tanjore Old Bus Station… ,Tanjore Corporation ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...