×

மும்மொழி பேசும் மக்கள் வாழும் ஊரு! தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் வெற்றிக்கொடி நாட்டப்போவது யாரு?

*10ஆண்டு அவலங்களுக்கு முடிவு கட்ட காத்திருக்கும் மக்கள்தேன்கனிக்கோட்டை : தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் தலைவர் பதவி யாருக்கு? என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பு மக்களிடைய பரவலாகி உள்ளது.  தமிழக- கர்நாடக எல்லை மாவட்டமான கிருஷ்ணகிரியில் பெங்களூரை ஒட்டி அமைந்திருக்கிறது தேன்கனிக்கோட்டை பேரூராட்சி. தமிழ், கன்னடம், தெலுங்கு என மும்மொழி பேசும் மக்கள் நிறைந்த பகுதி இது. அன்றாட தேவைக்கும் அனைத்து வகையான பொருட்கள், உயர்தர மருத்துவ சிகிச்சை, திருணமங்கள் என்று அனைத்திற்கும் அருகில் உள்ள பெங்களூரை மையமாகவே இப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.ஊராட்சியாக இருந்து தேன்கனிக்கோட்டை கடந்த 16.05.1963ம் ஆண்டு முதல் நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. பின்னர் 18.03.82ம் ஆண்டு  பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பேரூராட்சியின் மொத்த பரப்பளவு 13.26 சதுர கிலோ மீட்டர். பிரசித்தி பெற்ற ஸ்ரீ போட்டராய சுவாமி கோயில், இதன் பிரதான அடையாளமாக திகழ்கிறது. சிறப்பு மிக்க யாரப் தர்காவும் இங்கு உள்ளது. அருகில் 45 கிலோ மீட்டர் தொலைவில் பிலிகுண்டுலு, ஒகேனக்கல் உள்ளதால் கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் தேன்கனிக்கோட்டையை கடந்து தான் செல்ல வேண்டும்.இப்பேரூராட்சியில் 2011ம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் ஆண் 12,325, பெண் 11927 மொத்தம் 24252 ஆகும். தற்போது 26,195க்கும் மேலாக உள்ளனர். இப்பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. கடந்த 2011ம் ஆண்டில் பேரூராட்சி தலைவராக அதிமுகவை சேர்ந்த சி.நாகேஷ் தேர்ந்தெடுக்கப்ட்டார். 5 ஆண்டுகள் பதவி வகித்த நிலையில் பல்வேறு காரணங்களுக்காக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் போனது. இந்த நிலையில் வரும் 19ம்தேதி நடக்கும் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க ஆயத்தமாக உள்ளது தேன்கனிக்கோட்டை பேரூராட்சி. 18 வார்டுகளில் ஆண் வாக்களார்கள் 10,897, பெண் வாக்காளர்கள் 10,864 என்று மொத்தம் 21,763 வாக்காளர்கள் உள்ளது. 18 வார்டில் திமுக 17 வார்டுகளில் போட்டியிடுகிறது. அதில் 18வது வார்டில் பேரூர் திமுக செயலாளர் சீனிவாசன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மீதமுள்ள 17 வார்டுகளுக்கு வரும் 19ம்தேதி தேர்தல் நடைபெறுகின்றது. அதிமுக 9 வார்டுகளிலும், பாஜ 6 வார்டுகளிலும், கம்யூனிஸ்ட் 5 வார்டுகளிலும், தேமுதிக 3 வார்டுகளிலும், பாமக 3 வார்டுகளிலும், காங்கிரஸ் 1 வார்டிலும், அமமுக 6 வார்டுகளிலும், நாம் தமிழர் 5 வார்டுகளிலும், சுயேட்சைகள் 18 வார்டுகளிலும் என மொத்தம் 72 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் கவுன்சிலர்களாக வெற்றிக்கொடி நாட்டப்போகிறவர்கள் யார்? அவர்களால்  தேர்வு செய்யப்படும் தலைவர் யார்? துணைத்தலைவர் யார்?  என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பு மக்களிடமும் எழுந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: பல்வேறு சிறப்புகளை கொண்ட தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. திமுக ஆட்சியில் கொண்டு வந்த ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் அனைத்து வார்டுகளுக்கும் கிடைக்கவில்லை. குடிநீர் பிரச்னை அதிகமாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக தரமற்ற சாலைகள், கழிவுநீர் கால்வாய்கள் அமைத்துள்ளதால் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. போதிய தெரு விளக்குகள் இல்லாமல் உள்ளது. பல வார்டுகளில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாமல் உள்ளதால் சுகாதார சீர்கேடு உள்ளது. குறுகலான சாலைகளால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. இதை கருத்தில் கொண்டு மக்கள் பணியாற்றும் வேட்பாளர்களை கவுன்சிலர்களாக தேர்வு செய்ய வாக்களிப்போம். அவர்களால் தேர்வு பெறும் தலைவரும், துணைத்தலைவரும் மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதோடு, நிர்வாகத்தையும் திறம்பட நடத்துவார்கள் என்று நம்புகிறோம்.இவ்வாறு பொதுமக்கள் கூறினர்….

The post மும்மொழி பேசும் மக்கள் வாழும் ஊரு! தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் வெற்றிக்கொடி நாட்டப்போவது யாரு? appeared first on Dinakaran.

Tags : honkanicotta ,Honeykokotta Risch ,honeykotta ,
× RELATED தேன்கனிக்கோட்டை அருகே 3 பேரை கொன்ற...