×

மாமன்னன் – திரைவிமர்சனம்

ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் , வடிவேலு, ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மாமன்னன்’ படத்துக்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்.

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ உள்ளிட்ட படங்களுக்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட படம். ஆதிக்க சாதியினரும், பட்டியலின மக்களுக்கும் இடையே நடக்கும் ஏற்றத் தாழ்வுகளும், அடக்குமுறைகளும்தான் கதைக்களம்.

பட்டியலினத்தில் இருந்து மேலே வந்து தனக்கென ஒரு அந்தஸ்த்து, ஆட்சியில் பொறுப்பு என்றிருக்கும் மாமன்னன் எம்.எல்.ஏ(வடிவேலு), அவர் இருக்கும் அதே கட்சியின் மாவட்டத் தலைவராக அழகம் பெருமாள்(ஃபகத் ஃபாசில்), மாமன்னனின் படித்த இக்கால தலைமுறையாக அவரின் மகன் அதிவீரன்(உதயநிதி ஸ்டாலின்).

அவருடன் படித்தத் தோழி மற்றும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள், அரசுப் பொதுத் தேர்வுகள், வங்கித் தேர்வுகளுக்கு இலவசமாக ஏழை மாணவர்களுக்கு பாடமெடுக்கும் இளைஞர்கள் குழு தலைவியாகவும், சமூக ஆர்வலராகவும் லீலா (கீர்த்தி சுரேஷ்). லீலா இலவசமாக பாடமெடுக்கக் கூடாது என்னும் அடக்குதலும், அதனால் நடக்கும் தாக்குதல்களுமாக ஆரம்பிக்கும் கதையில் நண்பனாக உதவ உள்ளே வரும் அதிவீரனுக்கு பிரச்னை வேறு எங்கோ கூட்டிச் செல்வது பின்னர்தான் தெரிகிறது.

தொடர்ந்து இது வெறும் தொழில் போட்டியல்ல, அதையும் மீறிய சாதிய கட்டமைப்பும், கட்டுப்பாடும், அடக்குதலும் என கதை ஒவ்வொரு கட்டமாக நகர்கிறது. தன் தந்தை யார், நாம் யார், ஏன் இந்தப் பிரிவினை, இதனால் நடக்கும் விளைவுகள் என்ன? இதெல்லாம் ஒன்றிணைந்த முடிவுதான் ‘மாமன்னன்’ படத்தின் கதை. கடைசி படம் என உறுதியாக சொன்னதாலோ என்னவோ உதயநிதியின் நடிப்பில் அவ்வளவு நேர்த்தி. தன்னுடைய மொத்த உழைப்பையும் கொடுத்திருக்கிறார். முந்தைய படங்கள் அனைத்தையும் காட்டிலும்

இந்தப் படத்தில் அவரின் முக பாவங்களும், எக்ஸ்பிரஷன்களும் கூட சிறப்பு. உதயநிதி ‘உட்காருப்பா , நான் சொல்றேன் நீ உட்காருப்பா’ என்னும் போது கதையும், அரங்கமும் பற்றிக்கொள்கிறது. ஃபகத் ஃபாசில் இனி என்ன சொல்ல இவர் நடிப்பைப் பற்றி , அப்படியே சேலம், ஈரோடு வாழ் சாதி ஊறிப்போன இளைஞராக மனதில் நிற்கிறார்.

‘என்ன அண்ணேன் உங்களுக்கு இவ்ளோ பெரிய பையனா, சொல்லவே இல்ல?’ என்னும் போதே ஊர்களில் அரசியலில் சிறு வயதிலேயே வந்துவிட்டால் உண்டாகும் பக்குவமும், தோரணையும் பளிச்சிடுகிறது.

வடிவேலு் படத்தின் தலைப்பிற்கு சொந்தக் காரர் அதற்கு சிறிதும் பிசறாமல் நடிப்பில் அசாத்திய திறமையை வெளிப்படுத்துகிறார். படத்தின் எந்த நிலையிலும் நமக்கு காமெடியன் வடிவேலு தென்படவே இல்லை.

அவ்வளவு சீரியஸ், அவ்வளவு தேர்ந்த பார்வை. ஒரு கட்டத்தில் சத்தமே இல்லாமல் அழுகக் கூட போதிய உரிமை இல்லாதவராய் தனியாக நின்று அழும் வடிவேலு நம்மை சீட்டில் உறைய வைக்கிறார். வடிவேலுவின் பாத்திரப் படைப்பிற்காகவே மாரி செல்வராஜுக்கு தனி பாராட்டுகள். படம் நெடுக அவரின் குரலில் சின்னச் சின்னப் பாடல்களும் கணீர் என ஓங்கி ஒலிக்கிறது.

கீர்த்தி சுரேஷ் ‘மகாநதி’ படத்திற்கு முன் பின் என பிரிக்கலாம். அந்த அளவுக்கு கதைத் தேர்வில் பண்பட்ட நிலை தெரிகிறது. இந்தப் படத்தில் கொஞ்சம் அரசியலும் பேசி நடித்திருக்கிறார். ஆனால் காட்சிகள் மிகக் குறைவுதான்.

சில இடங்களில் தென்படும் அதீத ஸ்லோமோஷன் காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம். போலவே கதையும் இன்னும் ஆழமாக, நிறைய அரசியல் பேசியிருக்கலாம் எனத் தோன்றியது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்களும், பின்னணியும் அருமை எனில் , சில இடங்களில் அவர் கொடுத்த அமைதி இன்னும் நெருப்பாகத் தென்படுகிறது. தேனி ஈஸ்வரனின் ஒளிப்பதிவில் ஃபிளாஷ்பேக் காட்சிகள் கண்களை குளமாக்குகின்றன.

வடிவேலுவுக்குக் கொடுத்த ஃபிரேம்களுக்கு தனி கைதட்டல். செல்வா ஆர்.கே எடிட்டிங்கில் தான் இன்னும் சற்று மெனெக்கெட்டிருக்கலாம். படத்தின் பெரும்பாலான ஸ்லோ மோஷன் காட்சிகள் தவிர்த்திருக்கப் பட வேண்டியவை.

மொத்தத்தில் சாதியக் கட்டமைப்பும், அது சார்ந்த அரசியல் பிரச்னைகளும் நகரத்திலேயே ஓய்ந்தபாடில்லை என்கையில் கிராமங்களில் எப்படி ஓய்ந்திருக்கும். இப்படியான படங்கள் இக்கால தலைமுறைக்கும் அனைவரும் சமம் என்னும் போதனையை அவ்வப்போது கொடுப்பதாலேயே இன்னும் சமூக நகர்ந்து கொண்டிருக்கிறது.

மேலும் உதயநிதி போன்ற முக்கிய பொறுப்புகளில் உள்ளோரே இப்படியான படங்களில் நடித்தால் சொல்லப்படும் கருத்துக்களும் நிச்சயம் மக்களிடம் ஒரு அதிர்வலைகளை உண்டுபண்ணும் என்பதாலேயே ‘மாமன்னன்’ படம் சமூகத்துக்கு தேவையான படமாக நிற்கிறது.

The post மாமன்னன் – திரைவிமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Red Giant Movies ,Mari Selvaraj ,Udhayanidhi Stalin ,Vadivelu ,Fakat Fazil ,Keerthy Suresh ,AR Rahman ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மொழி, கல்வி, நிதி உரிமைகளை மீட்டெடுக்க...