×

இரவு நேர போக்குவரத்து தடை விவகாரம் தாளவாடி மலைப்பகுதி மக்கள் மீண்டும் ஆலோசனை கூட்டம்

சத்தியமங்கலம் : திண்டுக்கல் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதி வழியாக அமைந்துள்ள திம்பம் மலைப்பாதையில் வனவிலங்குகள் பலியாவதை தடுக்க இரவு நேர வாகன போக்குவரத்து ஈரோடு கலெக்டர் கடந்த 2019ம் ஆண்டு தடை விதித்தார்.இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அமர்வு  கடந்த  10ந்தேதி முதல் அமல்படுத்துமாறு உத்தரவிட்டது. இதனையடுத்து, கடந்த 10ம் தேதி மாலை 6 மணி முதல் இரவு நேர வாகன போக்குவரத்தை தடை அமலுக்கு வந்தது. இதனால் பண்ணாரி சோதனை,  காரப்பள்ளம் சோதனைச் சாவடிகளில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் கடந்த 3 தினங்களாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இரவு நேர வாகன போக்குவரத்து தடையை நீக்க தமிழக அரசு இந்த வழக்கில் தலையிட்டு தீர்வு காண கோரி ஏற்கனவே கடந்த 10ம் தேதி காலை பண்ணாரி சோதனை சாவடியில் தாளவாடி மலைப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விவசாய சங்க பிரதிநிதிகள், அனைத்து அரசியல் கட்சியினர், லாரி உரிமையாளர் சங்கங்கள், வாகன ஓட்டுனர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 1000க்கும்  மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், மேலும் இதுகுறித்து நேற்று தாளவாடியில் முன்னாள் எம்எல்ஏ சுந்தரம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நாளை (15ம் தேதி)  சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு சம்பந்தமான விசாரணை நடைபெறுகிறது.இந்த வழக்கில் முன்னாள் எம்எல்ஏ சுந்தரம் மற்றும் விவசாய சங்க பிரதிநிதி கண்ணையன் ஆகியோர் கட்சிக்காரர்களாக தங்களையும் சேர்த்துக் கொள்வதாக தீர்மானித்துள்ளனர். நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வருவதால் நீதிமன்ற நடவடிக்கைகளை கண்காணித்து மேற்கொண்டு பிரச்னையை கொண்டு செல்வது குறித்து தீர்மானிக்கப்படும் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் தாளவாடி மலைப்பகுதி மக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பல்வேறு அமைப்புகள் விவசாய சங்கத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.ஐகோர்ட்டு வக்கீலுடன் ஆ.ராசா, வனத்துறை அமைச்சர் ஆலோசனைதிம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் தாளவாடி, ஆசனூர், கேர்மாளம் உள்ளிட்ட மலைப் பகுதியைச் சேர்ந்த மலைகிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு இரு மாநில போக்குவரத்து முடங்கியுள்ளது. இது குறித்து திமுக துணைப்பொதுச்செயலாளரும் நீலகிரி எம்பியுமான ஆ.ராசா, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் சென்னையில் உயர்நீதிமன்ற அரசு சிறப்பு வழக்கறிஞர் சீனிவாசனிடம் ஆலோசனை மேற்கொண்டனர்.இது குறித்த தகவலை அறிந்த தாளவாடி மலைப்பகுதி மக்கள் இது சம்பந்தமாக நீதிமன்ற வழக்கில் நல்லதொரு முடிவு எட்டப்பட்டு இரவு நேர வாகன போக்குவரத்து தடை நீக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்….

The post இரவு நேர போக்குவரத்து தடை விவகாரம் தாளவாடி மலைப்பகுதி மக்கள் மீண்டும் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Thalavadi hills ,Sathyamangalam ,Thimbam ,Sathyamangalam Tiger Reserve forest ,Dindigul Bengaluru National Highway ,
× RELATED தாளவாடி அருகே மாங்காய்களை பறிக்க...