×

2,792 ஊராட்சிகள், 24 நகராட்சிகளில் 100% தடுப்பூசி தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் 22வது மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் நடந்த முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டார். அப்போது துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம், மருத்துவமனை டீன் தேரணிராஜன் உடனிருந்தனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இதுவரை நடந்த 21 மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் 3 கோடியே 65 லட்சத்து 4 ஆயிரத்து 295 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 90 சதவீதத்தை கடந்து முதல் தவணையும், 70 சதவீதத்தை கடந்து 2வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.அதேபோன்று, 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் 27 லட்சத்து 6 ஆயிரத்து 982 பேருக்கு முதல் தவணையும், 8 லட்சத்து 59 ஆயிரத்து 360 பேருக்கு 2வது தவணையும் போடப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசியை பொறுத்தவரை 5 லட்சத்து 32 ஆயிரத்து 77 பேருக்கு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2 ஆயிரத்து 792 ஊராட்சிகளிலும், 24 நகராட்சிகளிலும் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்த டாக்டர்கள், செவிலியர்களின் குடும்பத்தினர் ஏறக்குறையை 100க்கும் மேற்பட்டோருக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசிடம் இருந்து இழப்பீடு தொகை வாங்கியவர்களுக்கு, மாநில அரசின் இழப்பீடு தொகையை வழங்கக்கூடாது என ஒன்றிய அரசே அறிவுறுத்தி உள்ளது. அடையாறு புற்றுநோய் நிறுவனத்தை பொறுத்தவரை பராமரிப்பு நிதியை மாநில அரசு பல ஆண்டுகளாக வழங்கி வருகிறது. அதேபோன்று அபெக்ஸ் புற்றுநோய் மையம் என்ற அறிவிப்பை கொடுத்து ஒன்றிய அரசின் ஒதுக்கீடு ரூ.120 கோடியும், கட்டிடம் மற்றும் பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் பாதிப்பு எந்த அளவுக்கு வேகமாக உயர்ந்ததோ, அதே வேகத்தில் இறங்குகிறது. அந்தவகையில் இதோடு ஒமிக்ரான் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம்* தேர்தல் நாளில் முகாம் இல்லைஇது குறித்து அமைச்சர் மேலும் கூறுகையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பூத் சிலிப் விநியோக பணி நடைபெறுவதால் நேற்று 35 ஆயிரம்  இடங்களில் மட்டுமே தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி  போடப்பட்டது. சென்னையை பொறுத்தவரை 500 இடங்களில் மட்டுமே தடுப்பூசி போடும் பணி நடந்தது. அடுத்த சனிக்கிழமை தேர்தல் என்பதால் 23வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது என்றார்.* கோவாக்சின் தடுப்பூசி நிலை என்ன?அமைச்சர் மா.சுப்பிரமணியன் மேலும் கூறுகையில், ‘‘ கோவாக்சினை பொறுத்தவரை 20 டோஸ் செலுத்தும் அளவிற்கான குப்பிகளை தயாரித்து அனுப்புவதால் தடுப்பூசி வீணாகாமல் தடுக்கும் விதமாக தான் அதிகளவில் பொதுமக்கள் வரும்போது அந்த தடுப்பூசி போடப்படுகிறது என்றார்….

The post 2,792 ஊராட்சிகள், 24 நகராட்சிகளில் 100% தடுப்பூசி தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Ma. Subramanian ,Chennai ,Mega Vaccine Camp ,Tamil Nadu ,Rajiv Gandhi Government Hospital ,Minister Ma. Subramanian ,
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் இளைஞர்...