×

அம்பேத்கர் பள்ளியில் சேர்ந்த நவ.7ம் தேதியை தேசிய மாணவர் தினமாக கொண்டாட வேண்டும்: ஜனாதிபதி கோவிந்த் விருப்பம்

ரத்னகிரி: ‘கல்விக்கு அம்பேத்கர் ஆற்றிய பங்களிப்பை நினைவு கூரும் வகையில், அவர் பள்ளியில் சேர்ந்த நவம்பர் 7ம் தேதியை தேசிய மாணவர் தினமாக நாடு முழுவதும் கொண்டாட வேண்டும்,’ என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார். மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று அவர், ரத்னகிரி மாவட்டம், அம்படேவில் உள்ள அம்பேத்கரின் நினைவு கலசத்துக்கு பூஜை செய்தார். பின்னர், அங்குள்ள புத்தர் சிலைக்கும் மலர்தூவி மரியாதை செய்தார். அப்போது அவர் பேசியதாவது: சட்டமேதை அம்பேத்கர் 1900ம் ஆண்டு  நவம்பர் 7ம் தேதி பள்ளியில் சேர்ந்தார். இதை நினைவு கூரும் வகையில்  மகாராஷ்டிரா அரசு நவம்பர் 7ம் தேதியை மாணவர் தினமாக கொண்டாடி வருகிறது. அம்பேத்கரை கவுரவிக்கும் வகையில், கல்விக்கு அவர் அளித்துள்ள பங்களிப்பை போற்றும் வகையில், நவம்பர் 7ம் தேதியை நாடு முழுவதும் தேசிய மாணவர் தினமாக கொண்டாடப்பட வேண்டும். அம்படவே கிராமம், உத்வேக பூமியாக அறியப்படுகிறது. அம்பேத்கர் போற்றிய நல்லிணக்கம், கருணை மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு சமூக அமைப்பு இருக்க வேண்டும். கடந்த 2020ம் ஆண்டு நிசர்கா புயலால் பாதிக்கப்பட்ட கிராமத்தினருக்கு தலித் இந்திய வர்த்தக மற்றும் தொழிற்கூட்டமைப்பு வழங்கிய  நிவாரணம் மறக்க முடியாதது. அம்பேத்கரின் மூதாதையர் கிராமமான அம்படவை, தன்னிறைவு அடைய செய்ய இந்த அமைப்பினர் பல நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர். கூட்டு முயற்சி சிறுதொழில்களை ஊக்குவிப்பதன் மூலமுமே மக்களை  சுயசார்பு அடைய செய்ய முடியும்.இவ்வாறு அவர் பேசினார்….

The post அம்பேத்கர் பள்ளியில் சேர்ந்த நவ.7ம் தேதியை தேசிய மாணவர் தினமாக கொண்டாட வேண்டும்: ஜனாதிபதி கோவிந்த் விருப்பம் appeared first on Dinakaran.

Tags : Ambedkar ,National Students' Day ,President ,Kovind ,Ratnagiri ,National Student Day ,Dinakaran ,
× RELATED அமஇ மாநில தலைவர் நீதிமன்றத்தில் ஆஜர்