×

குமரியில் ஆன்லைன் மூலம் ₹51.60 லட்சம் மோசடி செய்த நைஜீரிய வாலிபர் கைது-உ.பி.யில் பதுங்கி இருந்தவரை சைபர் கிரைம் போலீசார் மடக்கினர்

நாகர்கோவில் : அமெரிக்க டாலர் தருவதாக கூறி குமரியை சேர்ந்த பெண்ணிடம் ₹51.60 லட்சம் வரை மோசடி செய்த நைஜீரிய வாலிபரை உ.பி.யில் சுற்றி வளைத்து குமரி போலீசார் கைது செய்தனர். குமரி மாவட்டம் கப்பியறை பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த 14.8.2020 அன்று ஆன்லைன் வகுப்பில் இருந்த போது அவரது செல்போனுக்கு  மெசேஜ் வந்துள்ளது. ஜெனீபர் வில்லியம்ஸ், லண்டன் என்ற பெயரில் வந்திருந்த அந்த பதிவில், தான் ஒரு நோய் வாய்ப்பட்டவர் என்றும், தந்தையின் விருப்பப்படி இந்தியாவில் உள்ள ஏழைகளுக்கு உதவிடும் வகையில், தன்னுடைய சொத்தை பயன்படுத்த உள்ளேன்.  உடனடியாக தனக்கு உண்டான லண்டன் வங்கி கணக்கில் உள்ள 39 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலரை ஏழைகளுக்கு பயன்படுத்தும் வகையில் தர முற்படுவதாகவும், அதற்கான குலுக்கலில் தங்களை தேர்வு செய்திருப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது. அதில் குறிப்பிடப்பட்டு இருந்த மொபைல் எண்ணை அந்த மாணவி தொடர்பு கொண்டு ஆங்கிலத்தில் பேசினார். பின்னர் தனது பாட்டியிடமும் இந்த தகவலை தெரிவித்தார். எதிர்முனையில் பேசிய நபர், உங்களுக்கு விருப்பம் இருந்தால் பணத்தை பெறலாம். இதில் 60 சதவீதத்தை ஏழைகளுக்கு செலவிட்டு விட்டு, மீதி 40 சதவீதத்தை நீங்கள் சொந்த தேவைக்கு பயன்படுத்தலாம் என்றார். மேலும் இந்த அமெரிக்கா டாலரை வங்கி மூலமாக பெற இந்திய ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெற்றிருப்பதாக கூறி, ரிசர்வ் வங்கி என முத்திரையிடப்பட்ட, சில ஆவணங்களையும் ஆன்லைன் மூலம் அனுப்பி வைத்தார். எனவே இதை மாணவியின் குடும்பத்தினர் நம்பி, சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து வரி செலுத்த வேண்டும். ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும் என பல காரணங்களை கூறி ரூ. 1 லட்சம், ரூ.3 லட்சம், ரூ.5 லட்சம் என்ற வகையில் ரூ.51 லட்சத்து 60 ஆயிரத்து 336 ரூபாய் வரை அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு செலுத்தினர். இவ்வளவு பெரிய தொகை அனுப்பிய பின்னர் தான், மாணவியின் பாட்டிக்கு தான் ஏமாற்றப்படுவது தெரிய வந்தது. உடனடியாக பணத்தை  திரும்ப கேட்க ஆரம்பித்த போது,  அழைப்புகள் வந்த செல்போன் எண்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து இந்த மோசடி குறித்து எஸ்.பி. பத்ரி நாராயணனிடம் புகார் மனு அளித்தனர். முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் புகார் மனு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து எஸ்.பி. பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், சைபர் க்ரைம் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர். ஏடிஎஸ்பி சுந்தரம் மேற்பார்வையில் சைபர் க்ரைம் சிறப்பு இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின், எஸ்.ஐ.க்கள் பெர்லின் (டெக்னிக்கல்), மகேஸ்வரராஜ் (தனிப்படை) ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் விசாரணையை தொடங்கினர். மெயில் மற்றும் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தனர். இதில் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு முகவரியில் உள்ள இணைப்பில் இருந்து மெயில் பார்வேர்டு செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் போலீசார் உத்தபிரதேசம் விரைந்தனர். அங்குள்ள போலீசார் உதவியுடன் சம்பந்தப்பட்ட முகவரி தொடர்பாக ரகசிய விசாரணை மேற்கொண்டு, இந்த மோசடியில் தொடர்புடைய நைஜீரிய நாட்டை சேர்ந்த எபூக்கா பிரான்சிஸ் (28) என்பவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை அங்குள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, குமரி மாவட்டம் அழைத்து வந்தனர். நாகர்கோவிலில் உள்ள சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடந்தது. இந்த விசாரணையில், டெல்லி, உ.பி.யை சேர்ந்த மேலும் சிலருக்கு இந்த மோசடியில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இவர்கள் தனி நெட்வொர்க் அமைத்து இது போன்ற மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். குமரி மட்டுமில்லாமல் நாடு முழுவதும் இவர்கள் லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட எபூக்கா பிரான்சிசை விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதானவரிடம் இருந்து லேப் டாப், 7 செல்போன்கள், 3 சிம் கார்டுகள் மற்றும் 2 மோடம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. பல லட்சம் மோசடி செய்த நபரை, உ.பி. வரை சென்று கைது செய்து வந்த இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் தலைலமையிலான தனிப்படை போலீசாருக்கு எஸ்.பி. பத்ரி நாராயணன் பாராட்டு தெரிவித்து, வெகுமதி வழங்கினார்….

The post குமரியில் ஆன்லைன் மூலம் ₹51.60 லட்சம் மோசடி செய்த நைஜீரிய வாலிபர் கைது-உ.பி.யில் பதுங்கி இருந்தவரை சைபர் கிரைம் போலீசார் மடக்கினர் appeared first on Dinakaran.

Tags : Kaithu ,u ,Kumari ,GP ,Nagarko ,Dinakaran ,
× RELATED உ.பி.யில் அதிக வெப்பத்தால் 6 பாதுகாப்பு வீரர்கள் உயிரிழப்பு