×

அரசியல் பாரம்பரியம் கொண்ட திருச்செங்கோடு நகராட்சியில் வெற்றிக்கொடி யாருக்கு?

*பத்தாண்டுகளில் நிறைவேறாத கோரிக்கைகள் ஏராளம் *நம்பிக்கையானவர்களுக்கே வாய்ப்பு என்கின்றனர் மக்கள்திருச்செங்கோடு :  தொழில்வளத்துடன் ஆன்மீக மணம் கமழும் திருச்செங்கோடு நகராட்சியில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்  வெற்றிக்கொடி நாட்டப்போகிறவர்கள் யார்? என்பது மக்களின் பெரும் எதிர்ப்பார்ப்பாக மாறியுள்ளது. இந்திய அரசால் புராதன ஆன்மீக நகரமாக அங்கீகரிக்கப்பட்ட பெருமைக்குரிய நகரம் திருக்கொடி மாடச்செங்குன்றூர் என்னும் திருச்செங்கோடு. கண்ணைக்கவரும் மலையும், அங்கு ஆண்பாதி, பெண்பாதியாய் அருள்பாலிக்கும் அர்த்தநாரீஸ்வரரும் இந்தநகரின் பிரதான அடையாளம். செங்குன்றம், நாககிரி, நாகமலை என்று புராணங்கள் கொண்டாடும் திருச்செங்கோடு கொங்கேழு சிவத்தலங்களில் முதன்மையானது. இதுமட்டுமன்றி சுதந்திரப்போராட்ட வீரர்களின் பாசறையாக மூதறிஞர் ராஜாஜி உருவாக்கிய காந்தி ஆசிரமம், இந்திய கூட்டுறவுத்துறையின் உயரிய விருதுகளைப் பெற்ற 40 ஆயிரம்    உறுப்பினர்களைக் கொண்ட தென்கிழக்கு ஆசியாவின் பெரிய கூட்டுறவு சங்கம், 25 ஆயிரம் மாணவிகள்  ஒரே இடத்தில் பயிலும் தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய பெரிய கல்வி மையம் என்று தனித்துவங்களும் ஏராளமாக உள்ளது. அதே நேரத்தில் அரசியல் பாரம்பரியம் நிறைந்த ஊராகவும் திருச்செங்கோடு திகழ்கிறது. சென்னை மாகாண முன்னாள் முதல்வர் டாக்டர் சுப்பராயன், மோகன் குமாரமங்கலம், ரங்கராஜன் குமாரமங்கலம் போன்ற மத்திய அமைச்சர்களையும், பொன்னையன்,  செல்வகணபதி ஆகிய மாநில அமைச்சர்களையும், அரசியல் நிர்ணயசபை உறுப்பினர் காளியண்ண கவுண்டரையும்   தந்தது திருச்செங்கோடு.  பேராசிரியர் அன்பழகன்  திருச்செங்கோட்டில் போட்டியிட்டு  எம்பி ஆக தேர்வு பெற்றார். இத்தைய சிற்பபு வாய்ந்த திருச்செங்கோடு 1924 ல் ஊராட்சியாக இருந்தது. ஊராண்மைக் கழகம் என்ற  பெயரில் உள்ளாட்சி நிர்வாகம் நடந்தது. பின்னர் பேரூராட்சியாக மாறியது. காங்கிரசை சேர்ந்த  கந்தப்பமுதலியார், பச்சியண்ணன், எம்பிஆர் அர்த்தநாரி முதலியார், வக்கீல்  டிபி நடேசன் ஆகியோர் பேரூராட்சி தலைவர்களாக இருந்தனர்.  13.3.1965 ல் இது நகராட்சியாக தரம் உயர்ந்தது. 29.3.1984ல் முதல்நிலை நகராட்சியாகவும், 22.5.1998ல் தேர்வு  நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. 1969ல் நடந்த நகர் மன்ற தேர்தலில் அமரர் டிபி ஆறுமுகம் திமுக நகர் மன்ற தலைவராக தேர்வு பெற்றார். அவரை தொடர்ந்து நடேசன், பொன்சரஸ்வதி என்று பலர், நகராட்சி தலைவராக பொறுப்பு வகித்தனர். இந்தநிலையில் வரும் 19ம்தேதி நடக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் புதிய நகராட்சியில் கால்பதிக்கும் உறுப்பினர்களை தேர்வு செய்ய காத்திருக்கின்றனர் மக்கள்.தற்போது 33வார்டுகளை கொண்ட திருச்செங்கோடு நகராட்சியில் ஆண்கள் 41,121பேர், பெண்கள் 38,692பேர், இதரர் 33பேர் என்று மொத்தம் 79,846 வாக்காளர்கள் உள்ளனர். அதிகளவு பெண் வாக்காளர்கள் கொண்ட திருச்செங்கோடு நகராட்சியில் 17வார்டுகள்  பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணி, அதிமுக, பாமக, தேமுதிக, பாஜ, அமமுக, மநீம, நாதக வேட்பாளர்களோடு சுயேட்சைகளுமாக நூறுக்கும் மேற்பட்டோர் களத்தில் உள்ளனர். இவர்களில் மக்கள் தேர்ந்தெடுக்கப்போகும் கவுன்சிலர்கள் யார்? அவர்களால் தேர்வு பெற்று நகராட்சி தலைவர், துணைத்தலைவர் பதவிகளில் அமரப்போகிறவர்கள் யார்? என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இது குறித்து திருச்செங்கோடு நகர பொதுமக்கள் கூறியதாவது:  திருச்செங்கோடு நகரில் நாளுக்கு நாள் பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கையால்  போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக்  கொண்டே வருகிறது. இதனால் திருமலைக்கு திருமணத்திற்கு செல்லும் திருமண வீட்டார் உள்ளிட்ட  பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கு  தீர்வாக  புறவழிச்சாலை திட்டம், ரிங் ரோடு திட்டம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் பலனில்லை. சங்ககிரி சாலையில் பட்டறைகள் அதிகமுள்ளது. ஆனால் குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. பட்டறைகளை வேறு இடத்திற்கு கொண்டு செல்லும்  ஆட்டோ நகர் திட்டம் என்பதும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.மலையடிக்குட்டை உள்ளிட்ட நீராதாரங்களை பாதுகாக்க வேண்டும், தினசரி காவிரிகுடிநீர் வழங்கவேண்டும், ஜவுளிப்பூங்கா  அமைக்க வேண்டும், தரமான உள்விளையாட்டரங்கம், நீச்சல்குளம்,நகராட்சி திருமண மண்டபம்  அமைக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் பல ஆண்டுகளாக தொடர்கிறது.  பல வார்டுகளில் சாக்கடை வசதி மிகவும் குறைவு.   பாதாள சாக்கடை திட்டம்   கானல்நீராகவே உள்ளது. கண்ணகிக்கு கோட்டம் அமைக்க வேண்டும் என்றும்  கூடுதல்  மலைப்பாதை அமைக்கவேண்டும், வெளியூர்களில் இருந்து சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் குறைந்த செலவில் பாதுகாப்பாக தங்கிச்  செல்ல அரசு சார்பில் விடுதி வசதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் ஆண்டுகள் கடந்தும் தொடர்கிறது. இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற இவர்களால் முடியும் என்று நம்பிக்கை உள்ள வேட்பாளர்களுக்கு வாக்களிக்க உள்ளோம். அவர்களில் ஒருவர் தலைவராகவும், துணைத்தலைவராகவும் இருந்து திறம்பட நகராட்சியை வழிநடத்த வேண்டும்.இவ்வாறு பொதுமக்கள் கூறினர்….

The post அரசியல் பாரம்பரியம் கொண்ட திருச்செங்கோடு நகராட்சியில் வெற்றிக்கொடி யாருக்கு? appeared first on Dinakaran.

Tags : trichengo ,Thiruchengod ,
× RELATED ஏபிடிஓ.,க்கள் இடமாற்றம்