×

பிரதமருக்கு இந்த தேசத்தின் மீது தார்மீக பொறுப்பு இல்லையா?: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி

ராம்பூர்: லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா டெனியை பதவியில் இருந்து நீக்க மத்திய அரசு முன்வர மறுப்பது ஏன்? என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமருக்கு இந்த தேசத்தின் மீது தார்மீக பொறுப்பு இல்லையா? பொறுப்பை நிறைவேற்றுவது அவரது கடமை இல்லையா? என்றும் ஆவேசமாக பேசிய பிரியங்கா,அதுதான் அனைத்து தர்மத்திற்கும் மேலானது என்று கூறியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. பாஜகவுக்கும் சமாஜ்வாடி கட்சிக்கும் இடையேதான் பலமான போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு உத்தரபிரதேசமாநிலத்தில் சிறிய அளவிலான இடங்களே கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறினாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் சூறாவளியாக சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்து வருகிறார் பிரியங்கா காந்தி. தேர்தல் வாக்குறுதிகளை நம்பிக்கையோடு வெளியிட்டுள்ளார். பெண் வாக்காளர்களை அதிகம் கவரும் வகையில் காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் தேதி, வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது வேகமாக வந்த கார் நசுக்கியது. அப்போது நிகழ்விடத்திலேயே 2 பேர் உயிரிழந்தனர். அதன்பிறகு ஏற்பட்ட வன்முறை மேலும் 2 விவசாயிகள் உள்பட மொத்தமாக 8 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மிஷ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கோர சம்பவம் நிகழ்ந்தபோதே, அஜய் மிஸ்ராவை பதவி விலகக்கோரி காங்கிரஸ் உள்ள எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அதன்பிறகு ஆஷிஷ் மிஸ்ரா ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற அலகாபாத் கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். முன்னதாக இந்த மனு மீதான உத்தரவு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று விசாரணையின்போது நீதிபதி ராஜீவ் சிங் ஆசிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார். இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடியுள்ளனர். ராம்பூர் பிரச்சார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா டெனியை பதவியில் இருந்து நீக்க மத்திய அரசு முன்வர மறுப்பது ஏன்? என கேள்வியெழுப்பினார். பிரதமருக்கு இந்த தேசத்தின் மீது தார்மீக பொறுப்பு இல்லையா என்று கேள்வி எழுப்பினார். பொறுப்பை நிறைவேற்றுவது அவரது கடமை இல்லையா என்றும் சாடிய பிரியங்கா காந்தி,அதுதான் அனைத்து தர்மத்திற்கும் மேலானது என்று குறிப்பிட்டார். விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்த ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இனி அவன் வெளிப்படையாக சுற்றித்திரிவார் என்றும் தெரிவித்தார். இதில் அரசு யாரை காப்பாற்றியிருக்கிறது என்று வினவிய பிரியங்கா, விவசாயிகளையா? எனவும் சாடினார். அதிகார பாதுகாப்பில் அமைச்சரின் மகன் விவசாயிகளை கார் ஏற்றி நசுக்கினார். ஆளும் கட்சியின் அதிகாரம் விவசாயிகளின் நீதிக்கான நம்பிக்கையை நசுக்கியுள்ளது. நாடு முழுவதும் விவசாயிகள் வேதனையுடனும், கோபத்துடனும் இருப்பதாக கூறிய பிரியங்கா, காங்கிரஸ் எப்போதும் நீதியின் குரலை நசுக்க விடாது என்றும் தெரிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் ஆசிஷ் மிஸ்ராவிற்கு ஜாமீன் கொடுக்கப்பட்டுள்ளது எதிர்கட்சியினரின் பிரசாரத்திற்கு எண்ணெய் ஊற்றியது போலாகி விட்டது….

The post பிரதமருக்கு இந்த தேசத்தின் மீது தார்மீக பொறுப்பு இல்லையா?: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Congress ,General Secretary ,Priyanka Gandhi ,Rampur ,Union Co-Minister ,Ajay Misra Deni ,Lakhimpur ,Keri ,PM ,Secretary General ,
× RELATED நீட் தேர்வு முடிவுகளில் நடந்த...