×

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழக பட்ஜெட்டில் மக்களுக்கு சிறப்பான வளர்ச்சித்திட்டங்கள்: நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பேச்சு

மதுரை: தமிழக மக்களுக்கு வரும் பட்ஜெட்டில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சிறப்பான வளர்ச்சி திட்டங்களை அறிவிக்க உள்ளதாக நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறினார்.மதுரை மத்திய தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி 57வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் இந்திராணி பொன் வசந்த்தை ஆதரித்து, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர்  பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், ஆரப்பாளையம் மந்தை திடல் பகுதியில் நேற்று தேர்தல் பிரசாரத்தை துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:கடந்த அதிமுக ஆட்சியில் குழப்பமாக வார்டு மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் மக்களின் அடிப்படை தேவைகளை மனதில் கொண்டு இத்தேர்தலை கட்டாயம் நடத்தியே தீர வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. ஒரு தொகுதிக்கு எம்எல்ஏ எவ்வளவு முக்கியமோ, அந்த அளவிற்கு வார்டுக்கு கவுன்சிலர் முக்கியமானவர். பெண்களுக்கு கல்வி, அரசியல், நிர்வாகம் உள்ளிட்டவைகளில் வாய்ப்பளிக்கும் நாடு தான் வளர்ச்சி பாதையில் செல்லக்கூடியதாகும். அவ்வகையில், பெண்களுக்கு அதிகளவில் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் மதுரை மத்திய தொகுதியில் 16 வார்டுகளில் 13 பெண்கள் போட்டியிடுகின்றனர்.தமிழக மக்களுக்கு வரும் பட்ஜெட்டில், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பல்வேறு எதிர்கால சிறப்பான வளர்ச்சித் திட்டங்களை அறிவிக்க இருக்கிறோம். இந்த திட்டங்களை அப்படியே மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கு கவுன்சிலர்களே முக்கிய பங்கு வகிக்கின்றனர். அந்த கவுன்சிலர் திமுக மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலராக இருந்தால், ஒன்றிணைந்து வேலை செய்ய, அவர்கள் தவறு செய்யும்போது தட்டிக் கேட்க சரியாக இருக்கும். திட்டங்கள் விலகிச் செல்லாமல் நிறைவேற்றலாம்.பாஜவிற்கு எதிராக வலிமையான குரல் எழும்ப வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின், சரிவடைந்து இருந்த தமிழகத்தின் பொருளாதார நிலையில் பல்வேறு சீர்திருத்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மதுரையின் வளர்ச்சிக்காக இன்னும் பல திட்டப்பணிகளை அவர் ஒப்புதலோடு செயல்படுத்த இருக்கிறோம். ஏற்கனவே மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு பணிக்காக ரூ.25 கோடி, ஒருங்கிணைந்த குடிநீர் பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்கு ரூ.500 கோடி என முதல்வர் அறிவித்துள்ளார். எதிர்க்கட்சி எம்எல்ஏவாக இருந்தபோதே தொகுதி மேம்பாட்டு நிதியில்  இருந்து அதிக அளவு திட்டப்பணிகளை நிறைவேற்றியிருக்கிறேன். தற்போது  இரண்டாவது முறையாக தேர்வு செய்து அமைச்சராகி இருக்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்….

The post கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழக பட்ஜெட்டில் மக்களுக்கு சிறப்பான வளர்ச்சித்திட்டங்கள்: நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Finance Minister ,PDR Palanivel Thiagarajan ,Madurai ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!