×

அ.தி.மு.க. வேட்பாளர் தற்கொலை; காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36வது வார்டு தேர்தல் ஒத்திவைப்பு: தேர்தல் அலுவலர் அறிவிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36வது வார்டு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலரும், ஆணையருமான நாராயணன் அறிவித்துள்ளார். அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் மரணம் காரணமாக 36வது வார்டுக்கு மட்டும் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 22-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் கடந்த 7-ம் தேதி வெளியிடப்பட்டது. காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. இதில் 36-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளராக ஜானகிராமன் போட்டியிட்டார்.நேற்று இரவு அவர் வழக்கம் போல் வீட்டில் உள்ள அறையில் தூங்க சென்றார். இந்த நிலையில் இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் ஜானகிராமன் தனது அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தந்தை வேணுகோபால் சென்று பார்த்த போது அறையில் மகன் ஜானகிராமன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது கழுத்தை சுற்றி துண்டு இருந்தது. எனவே அவர் தானே கழுத்தை இறுக்கி தற்கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. ஜானகிராமனின் திடீர் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. தேர்தல் போட்டியில் அவர் மிரட்டப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அ.தி.மு.க. வேட்பாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36வது வார்டு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார். …

The post அ.தி.மு.க. வேட்பாளர் தற்கொலை; காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36வது வார்டு தேர்தல் ஒத்திவைப்பு: தேர்தல் அலுவலர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : A.D.M.K. ,36th Ward Election ,Kanchipuram Corporation ,Kanchipuram ,Commissioner ,Narayanan ,36th ,election ,AIADMK ,Janakiraman ,36th Ward ,Corporation ,Dinakaran ,
× RELATED அண்ணா நினைவு பூங்காவில் பாம்புகள் தொல்லை: பொதுமக்கள் அச்சம்