×

60 ஆண்டுக்கு முன் கட்டிய செங்கல்பட்டு பாலாற்று பாலம் சீரமைப்புப்பணி போக்குவரத்து மாற்றத்தால் 20 கி.மீ. சுற்றும் வாகனங்கள்: நத்தைபோன்று ஊர்ந்து சென்றதால் நெரிசல்; பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி

சென்னை: செங்கல்பட்டு அருகே 60 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாலாற்று பாலம் பழுதானது. அதை சீரமைக்கும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், வாகனங்கள் 20 கி.மீ. தூரம் பல்வேறு கிராமங்கள் வழியாக திருப்பி விடப்பட்டன. நீண்ட தூரத்துக்கு நத்தைபோன்று ஊர்ந்து சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்கு உள்ளாகினர். செங்கல்பட்டு பாலாற்றில் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் மற்றும் மதுராந்தகம் ஒன்றியங்களுக்கு இடையே வாகன போக்குவரத்திற்காக 60 ஆண்டுகளுக்கு முன்பு செங்கல்பட்டு அருகே மேம்பாலம் கட்டப்பட்டது. அந்த ஒரே மேம்பாலத்தில் சென்னை – திருச்சி, திருச்சி – சென்னை மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் செல்கிறது. காலப்போக்கில், வாகன போக்குவரத்து மிக அதிகமாகவே அதன் அருகிலேயே 30 ஆண்டுகளுக்கு முன்பு மற்றொரு பாலம் கட்டப்பட்டது.இதனால், திருச்சி – சென்னை மார்க்கமாக செல்லும் வாகனங்கள் பழைய மேம்பாலத்தின் வழியாகவும், சென்னை – திருச்சி வழியாக செல்லும் வாகனங்கள் புதிய மேம்பாலத்தின் வழியாகவும் அனுமதிக்கப்பட்டு சென்றன.  இந்நிலையில், கடந்த ஆண்டு பெய்த தொடர் மழையின் காரணமாக பழைய மேம்பாலம் சேதமடைந்தது. சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளம் உள்ள பாலத்தின் மேல் பகுதியில் சாலைகள் ஆங்காங்கே பெயர்ந்து காணப்பட்டது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகனங்கள் மிகுந்த சிரமத்தோடு பழைய மேம்பாலத்தை கடந்து சென்றது.எனவே, பாலத்தை சீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது.அந்த பாலத்தின் வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக சென்னை – திருச்சி நெடுஞ்சாலை வழியாக மட்டுமே அனைத்து வாகனங்களும் இயக்கப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதன் காரணமாக திருச்சி-சென்னை மார்க்கமாக வரும் வாகனங்களும், அதே பாதையில் எதிராக வர வேண்டியிருந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த சாலையின் 2 புறங்களிலும் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் ஸ்தம்பித்து நத்தைபோன்று ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நேற்று மாலை முதல் தொடர்ந்து வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், இந்த பணிகள் அடுத்த 40 நாட்களுக்கு தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தற்போது மாற்று வழி அறிவிக்கப்பட்டுள்ளது.* யாருக்கு மாற்று வழிபஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் மதுராந்தகம் அடுத்த மாமண்டூர், உத்திரமேரூர், பழையசீவரம் வழியாகவும், கார், இருசக்கர வாகனங்கள் போன்ற சிறிய ரக வாகனங்கள் சீர் செய்யப்படும் மேம்பாலத்தின் அருகே உள்ள மெய்யூர், திம்மாவரம் வழியாகவும்  இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக சுமார் 20 கிலோ மீட்டர் அளவிற்கு இவர்கள் கூடுதலாக பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பணிகளை சில நாட்களில் விரைந்து முடித்து மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post 60 ஆண்டுக்கு முன் கட்டிய செங்கல்பட்டு பாலாற்று பாலம் சீரமைப்புப்பணி போக்குவரத்து மாற்றத்தால் 20 கி.மீ. சுற்றும் வாகனங்கள்: நத்தைபோன்று ஊர்ந்து சென்றதால் நெரிசல்; பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Tags : Brinkalputtu Kuala Bridge ,Chennai ,Palatu Bridge ,Chengalpaddu ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...