×

நீர்நிலை ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு நோட்டீஸ் பொதுப்பணித்துறை அலுவலகம் முற்றுகை: வரதராஜபுரத்தில் பரபரப்பு

ஸ்ரீபெரும்புதூர்: நீர்நிலை ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு பொதுப்பணித்துறையினர் நோட்டீஸ் வழங்கியதை கண்டித்து, படப்பையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.குன்றத்தூர் ஒன்றியம், வரதராஜபுரம் பகுதியில் அடையாற்றின் கரையோரத்தில் சர்வே எண் 57ல் அணைகட்டு தாங்கல் நீர்பிடிப்பு பகுதி உள்ளது. தற்போது, இப்பகுதியில், ஆக்கிரமிப்பு செய்து 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு, கடந்த 15 நாட்களுக்கு முன் பொதுப்பணித்துறை சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான முன் அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதில், நீங்கள் குடியிருக்கும் வீடுகள் அனைத்தும் நீர்நிலை பகுதியில் கட்டப்பட்டுள்ளன. வீட்டுக்கான பட்டா உள்பட ஆவணங்கள் வைத்திருந்தால் குறிப்பிட்டுள்ள தேதியில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையொட்டி, 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள், படப்பை பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு நேற்று திரண்டனர். அப்போது, அலுவலகத்தில் உதவி பொறியாளர் உள்பட அதிகாரிகள் யாரும் இல்லை. இதனால், நோட்டீஸ் வழங்கியதற்கு உரிய விளக்கம் கேட்டு பொதுமக்கள் அலுவலகத்தை  முற்றுகையிட்டு கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.தகவலறிந்து தாம்பரம் உதவி கமிஷனர் ரவி, மணிமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். தொடர்ந்து, அங்கு வந்த அதிகாரிகள், நீங்கள் சமர்ப்பிக்கும் வீட்டு மனை பத்திரம், பட்டா உள்பட ஆவணங்கள் அனைத்தும் வருவாய் துறையிடம் எடுத்து சென்று பரிசீலனை செய்து, உங்களுக்கு பதில் அளிக்கப்படும் என்றனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது….

The post நீர்நிலை ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு நோட்டீஸ் பொதுப்பணித்துறை அலுவலகம் முற்றுகை: வரதராஜபுரத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Water Encroachment Houses Public Works Office ,Varadarajapuram ,Sriperumbudur ,PWD ,Patapai ,
× RELATED ஊராட்சி தலைவரின் கணவர் மீது காவல் நிலையத்தில் புகார்