×

எறும்பு – திரை விமர்சனம்

குழந்தைகளின் உலகத்தைக் காட்டும் மற்றொரு படம் இது. அண்ணாதுரை (சார்லி), கரும்பு வெட்டும் கூலித்தொழிலாளி. அவருக்கு மகள் பச்சையம்மா (மோனிகா சிவா), மகன் முத்து (சாதிக் ரித்விக்) இருக்கின்றனர். அவரது இரண்டாவது மனைவி கமலம் (சூசன் ஜார்ஜ்). அவருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. சார்லி கந்துவட்டி ஆறுமுகத்திடம் (எம்.எஸ்.பாஸ்கர்) வட்டிக்கு கடன் வாங்கி, பிறகு அதை திருப்பிக்கொடுக்க முடியாமல் தவிக்கிறார். எப்படியாவது கடனை அடைக்க வேண்டும் என்று கணவனும், மனைவியும் கரும்பு வெட்டும் வேலைக்குச் செல்கின்றனர். அதில் கிடைக்கும் சம்பளம், வீட்டில் இருக்கும் ஒரு மோதிரம் ஆகியவற்றை வைத்து கடனை அடைக்க திட்டமிடுகின்றனர்.

அந்த மோதிரத்தை முத்து ஆசையாக அணிந்துகொண்டு வெளியே திரியும் நேரத்தில், திடீரென்று மோதிரம் காணாமல் போகிறது. வேலைக்குச் சென்ற பெற்றோர் திரும்பி வருவதற்குள் மோதிரத்துக்குரிய பணத்தைச் சேர்த்துவிட வேண்டும் என்று இருவரும் பலவிதங்களில் முயற்சிக்கின்றனர். அவர்களுக்கு மனவளர்ச்சி குன்றிய சிட்டு (ஜார்ஜ் மரியான்) உதவுகிறார். அவர்கள் மோதிரம் வாங்கினார்களா? சார்லி கடனை அடைத்தாரா என்பது மீதி கதை.

எளிய கதையின் மூலம் ஏழைச் சிறுவர், சிறுமிகளின் மன ஓட்டத்தையும், கந்துவட்டியால் துன்பத்தை அனுபவிக்கும் ஒரு ஏழைக்குடும்பத்தையும் காட்டியிருக்கிறார் இயக்குனர் சுரேஷ்.ஜி. அருண்ராஜின் பின்னணி இசையும், கே.எஸ்.காளிதாசின் ஒளிப்பதிவும் பேருதவி செய்துள்ளது. சார்லி, எம்.எஸ்.பாஸ்கர், ஜார்ஜ் மரியான், சூசன் ஜார்ஜ் ஆகியோர் தங்கள் அனுபவ நடிப்பை வழங்கியுள்ளனர். அக்கா, தம்பியாக நடித்த மோனிகா சிவாவும், சாதிக் ரித்விக்கும் அந்த கேரக்டராகவே மாறியுள்ளனர். ஒரே நேர்க்கோட்டில் செல்லும் கதையில், கிளைமாக்ஸ் தவிர வேறெந்த திருப்பமும் இல்லை. மெதுவாக நகரும் காட்சிகள் நெளியவைக்கிறது என்றாலும், கவனிக்க வைக்கும் படம் இது.

The post எறும்பு – திரை விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Annadurai ,Charlie ,Pachhayamma ,Monika Siva ,Pearl ,Satik Ritvik ,Kamalam ,Susan George ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தமிழ்நாட்டிலேயே பிரதமர் மோடி...