×

பொம்மை – திரைவிமர்சனம்

ஒரு பொம்மைக்கும், மனிதனுக்கும் இடையே ஏற்படும் உணர்வுப்பூர்வமான உறவு பற்றி ஹாலிவுட்டிலும், பாலிவுட்டிலும் ஏராளமான படங்கள் வந்துள்ளன. தற்போது அந்த பாணியில் தமிழில் வந்துள்ள சைக்கோ திரில்லர் படம் இது. காஞ்சிபுரம் அருகிலுள்ள கிராமத்தில் பிறந்து வளர்ந்த எஸ்.ஜே.சூர்யாவுக்கு அம்மா என்றால் உயிர். ஓவியம் வரைவதிலும், படிப்பிலும் முன்னிலையில் இருக்கிறார். திடீரென்று ஒரு விபத்தில் அம்மா இறந்ததால் தனித்துவிடப்படும் அவர், பிறகு படிப்பு, ஓவியம் இரண்டிலும் தடுமாறுகிறார். அப்போது பள்ளியில் சேருகிறார், மாணவி நந்தினி (பிரியா பவானி சங்கர்). தனது அதீத அன்பால் எஸ்.ஜே.சூர்யாவை மீட்கிறார். ஒருநாள் கோயில் திருவிழாவில் திடீரென்று காணாமல் போன நந்தினியை நினைத்தபடி வாழ்க்கையை நகர்த்துகிறார், எஸ்.ஜே.சூர்யா. ஜவுளிக்கடைகளுக்கு பொம்மை செய்யும் கம்பெனியில் ஓவியராகப் பணியாற்றும் அவரது பார்வைக்கு வருகிறது, நந்தினியின் கன்னத்தில் இருக்கும் பெரிய சைஸ் மச்சத்துடன் கூடிய ஒரு பொம்மை.

அதனால் ஈர்க்கப்படும் அவர், அதை நிஜமாகவே நேசிக்கிறார். தினமும் பொம்மையுடன் பேசுகிறார், பழகுகிறார், சிரிக்கிறார். ஒருநாள் உரிமையாளர் அந்த பொம்மையை விற்றுவிட, உயிருக்குயிரான நந்தினியைக் கண்டுபிடிக்க அலையும் எஸ்.ஜே.சூர்யா, தனது தேடலுக்கு குறுக்கே வரும் அனைவரையும் வதம் செய்கிறார். இறுதியில் என்ன நடக்கிறது என்பது கதை. முழு படத்தையும் தனது தோள்களில் தாங்கிச் சுமப்பது எஸ்.ஜே.சூர்யா மட்டும்தான். அப்பாவி இளைஞனாகவும், அன்புக்கு ஏங்கும் காதலனாகவும், கோபம் வரும்போது ராட்சசனாகவும் மாறி தன் கேரக்டரை சிறப்பாக்கியுள்ளார். அந்த பொம்மை கேரக்டருக்கு பிரியா பவானி சங்கர் உயிர் கொடுத்துள்ளார். எஸ்.ஜே.சூர்யாவின் இயல்பான நடவடிக்கைகளை காதலாக நம்பும் கேரக்டரில் சாந்தினி தமிழரசன் நடித்துள்ளார். கதையில் அவருக்கு முக்கியத்துவம் இல்லை. இப்படத்தை, உருக வைக்கும் காதல் படமாக ெகாண்டு செல்வதா? பக்கா கிரைம் திரில்லராக கொண்டு செல்வதா என்பதில் நிறையவே தடுமாறியுள்ளார், இயக்குனர் ராதாமோகன். இதனால் இரண்டு பக்கத்திலும் அழுத்தம் இல்லாமல், படத்தின் கதையும், காட்சிகளும் மேம்போக்காக கடந்து செல்கிறது.

குறிப்பாக பொம்மைக்கும், எஸ்.ஜே.சூர்யாவுக்குமான காதல் காட்சிகள் ஒரேமாதிரி இருப்பதால் நெளிய வைக்கிறது. இரவு முழுக்க பூட்டிய கடைக்குள் இருக்கும் எஸ்.ஜே.சூர்யாவால், எளிதில் அந்த பொம்மையை தன் வீட்டுக்கு கொண்டு செல்ல முடியும் என்ற நிலையில், அதற்கு பக்கா பிளான் போட்டு நேரத்தை வீணடிப்பது ஏன்? கடை உரிமையாளரைச் சந்தித்து, ‘நான்தான் அந்த பொம்மையை உருவாக்கினேன். அது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதை எனக்கே கொடுங்கள்’ என்று கேட்டால் கொடுத்துவிடப் போகிறார். அதை விட்டுவிட்டு, தலையைச்சுற்றி காதை தொடுவது ஏன்? எஸ்.ஜே.சூர்யாவுக்கு பிரியா பவானி சங்கர் மீது இருப்பது தாய்மைக்கு நிகரான பேரன்பு. அது எப்படி காதலாக மாறுகிறது? இதுபோன்ற லாஜிக் மீறலுக்கான கேள்விகள் உண்டு. ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவில் பொம்மை வண்ணமயமாக இருக்கிறது. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்துக்கு மிகப்பெரிய பலம். ‘உல்லாசப் பறவைகள்’ படத்தில் இளையராஜா இசையில் பஞ்சு அருணாசலம் எழுதி ஜென்சி பாடிய ‘தெய்வீக ராகம்’ என்ற பாடலை கச்சிதமாகப் பயன்படுத்தியுள்ளனர். பொம்மை, பார்க்க அழகு. ஆனால், பக்குவமாக செய்யப்படவில்லை.

The post பொம்மை – திரைவிமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Hollywood ,Bollywood ,Kanchipuram ,SJ Surya ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஹாலிவுட் நடிகரை காதலிக்கும் எமி ஜாக்சன் திடீர் விருந்து