×

சமூக வலைத்தளம் மூலம் மதக்கலவரத்தை தூண்டியதாக புகார் பாஜக பிரமுகர் சவுதாமணி முன் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மதக்கலவரத்தை தூண்டும்  வகையிலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்ட   பா.ஜ.க. செயற்குழு உறுப்பினர் சவுதாமணியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.  நாட்டின் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலோ, பொது அமைதியை குலைக்கும் வகையிலோ சமூக வலைதளங்களில் கருத்துக்களை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை சார்பில் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர் ஒருவர் இரு மதத்தினர் இடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு மதத்திற்கு ஆதரவாகவும், ஒரு மதத்திற்கு எதிராகவும் கருத்தக்களை பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் இந்த வீடியோவை தமிழ்நாடு பா.ஜ.க.வின் செயற்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்து வரும் சவுதாமணி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும், அந்த வீடியோவை பகிர்ந்திருந்த சவுதாமணி தைரியமா? விடியலுக்கா? என்றும் கருத்து பதிவிட்டிருந்தார்.அவரது இந்த நடவடிக்கைக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். மேலும், மதக்கலவரத்தை தூண்டும் வீடியோவை பகிர்ந்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தினர். இதையடுத்து, அவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு  காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்தோஷ்,  மனுதாரர் மீதான புகார் தொடர்பாக, மத்திய குற்றபிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அவர்களது விசாரணையில் சவுதாமணி பதிவிட்ட வீடியோவால் மதக்கலவரம் தூண்டப்படும் எனபதை உறுதி செய்த காவல்துறையினர் அவர் மீது கலகம் செய்ய தூண்டி விடுதல், அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக எந்தவொரு நபரையும் கலகம் செய்யத் தூண்டுதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்று தெரிவித்தார் இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி காவல்துறை சவுதாமணி மீது வழக்கு பதிவு செய்துள்ளதால் அந்த வழக்கை எதிர்த்து வேண்டுமென்றால் புதிய மனு தாக்கல் செய்து கொள்ளலாம். தற்போது புகாரின் அடிப்படையில் சவுதாமணியின் தாக்கல் செய்யப்பட்ட  முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்….

The post சமூக வலைத்தளம் மூலம் மதக்கலவரத்தை தூண்டியதாக புகார் பாஜக பிரமுகர் சவுதாமணி முன் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,BJP ,Soudamani ,CHENNAI ,
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்களில்...